விக்கிப்பீடியா:திறனாய்வு

திறனாய்வு என்பது விமரிசனம் என்ற சொல்லுக்கு ஈடான நேர்மறையான தமிழ்ச் சொல். விக்கிப்பீடியா திட்டங்கள் செம்மையாக நடைபெற தொடர் திறனாய்வுகள் தேவை. இத்திறனாய்வுகளை வளர்முகமாகவும் நேர்மறையாகவும் செய்வது எப்படி என்ற வழிகாட்டலை இங்கு அறியலாம்.

  • விக்கிப்பீடியா என்பது வெளிப்படையாக இயங்கும் ஒரு கூட்டு முயற்சித் திட்டம். இங்கு பங்களிப்பதற்கான வாய்ப்பும் செயற்பாடுகளுக்கான பொறுப்பும் அனைவருக்கும் உண்டு. திறனாய்வுகளை முன்வைக்கும் முன் இதனை மனதில் கொள்ளுங்கள்.
  • ஒரு பிரச்சினையை நீங்களே சரி செய்ய முடியுமானால், அதனைச் சரி செய்ய முனையுங்கள். உங்களால் செய்ய இயலாவிட்டால், உரிய பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டுங்கள். திறனாய்வை முன் வைக்கும் முன் திறத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
  • கருத்துகளை வளர்முகமாகவும் நேர்மறையாகவும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் பக்குவமாகவும் முன்வையுங்கள்.
  • குறைகள் பட்டியலை வழங்குவதைக் காட்டிலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குங்கள்.
  • விக்கிப்பீடியாவில் யார் செய்கிறார் என்பதைக் காட்டிலும் என்ன செய்யப்படுகிறது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் முக்கியம். எனவே, தனிமாந்தச் சாடல்களைத் தவிர்த்து, வழிமுறைகள் குறித்து கருத்துகளை முன்வையுங்கள்.
  • பொத்தாம் பொதுவான ஆதாரமற்ற கருத்துகளை முன் வைக்காதீர்கள்.
  • நீங்கள் ஒரு நெடுநாள் பங்களிப்பாளராக இருக்கும் பட்சத்தில், விக்கிப்பீடியா வழங்கும் மேற்கண்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தும் முன் பொது ஊடகங்களில் விக்கிப்பீடியா பற்றிய தவறான திறனாய்வை முன்வைப்பதைத் தவிருங்கள்.
  • விக்கிப்பீடியா இணையத்தளத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யும் பட்டறைகள், மாநாடுகள் போன்ற கடும் உழைப்பைக் கோரும் நிகழ்வுகளைப் பொருத்த வரை, நிகழ்வு முடிந்து ஓரிரு வாரம் கழித்து திறனாய்வுப் பணியைத் தொடங்குங்கள். இது இத்திட்டங்களுக்கு உழைத்தவர்களுக்குத் தகுந்த ஓய்வைத் தரும். கடுமையான திறனாய்வுகள் நிகழ்வின் கொண்டாட்ட மனநிலையைத் தகர்ப்பதைத் தடுக்கவும் உதவும்.
  • திறனாய்வு என்பது ஒவ்வொரு திட்டத்தின் உள்ளடங்கிய பகுதியாக இருக்க வேண்டும். நெடுநாள் திட்டங்கள் என்றால் தகுந்த இடைவெளிகளில் அவ்வப்போது திறனாய்வு செய்து வர வேண்டும். சிறு திட்டங்கள், திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய திட்டங்களுக்கு திறனாய்வு என்பது இறுதிப் பகுதியாகவும் அடுத்த முறை சிறப்பாகச் செய்வதற்கான அறிக்கையை எழுதுவதற்கும் உதவ வேண்டும். இது ஒரு கூட்டு நோக்கு திறனாய்வாக இருக்க வேண்டும்.