விக்கிப்பீடியா:தொகுத்தல் முரண்பாடு
- இக்கட்டுரை ஒரே பக்கத்தை ஒரே நேரத்தில் பல தொகுப்பாளர்கள் தொகுக்க முற்படும்போது எழும் தொழினுட்ப பிரச்சினைகளைக் குறித்தது. இது மென்பொருளால் தானியக்கமாக தீர்வு காணவியலாத முரண்பாடாகும். தொகுத்தலில் ஆசிரியர்களிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளுக்கு காண்க விக்கிப்பீடியா:தொகுத்தல் போர்.
தொகுத்தல் முரண்பாடு (edit conflict) எப்போதும் யாராலும் தொகுக்கப்படக்கூடிய விக்கிப்பீடியா போன்ற திட்டங்களில் ஏற்படும் பிழை ஆகும். ஒரு பக்கத்தை ஒருவர் தொகுக்கும்போது இடைப்பட்ட காலத்தில் இன்னொருவர் தொகுத்து அப்பக்கத்தை சேமித்தால் முன்னவர் சேமிக்க இயலாது. இதனைப் புரிந்து கொள்ள கீழ்வரும் நிலைமையை ஆராய்வோம்:
- ஆறுமுகம் ஓர் கட்டுரையின் மேற்புறத்திலுள்ள "தொகு" தத்தலை சொடுக்குகிறார்.
- ஆறுமுகம் தொகுத்துக் கொண்டிருக்கும் போதே, எலிசபெத் அதே கட்டுரையின் "தொகு" தத்தலை சொடுக்குகிறார்.
- ஆறுமுகம் தனது தொகுப்புக்களை முடித்துக் கொண்டு "பக்கத்தைச் சேமிக்கவும்" பட்டனை சொடுக்குகிறார். எலிசபெத் தன் தொகுத்தலை முடிக்காதிருக்கையில் ஆறுமுகத்தின் திருத்தங்களுடன் பக்கம் சேமிக்கப்படுகின்றது.
- எலிசபெத் தனது தொகுப்புக்களை முடித்துக் கொண்டு "பக்கத்தைச் சேமிக்கவும்" பட்டனை சொடுக்குகிறார். எலிசபெத்திற்கு "தொகுத்தல் முரண்பாடு" பக்கம் காட்டப்படுகின்றது; கட்டுரையின் ஆறுமுகத்தின் பதிப்பிற்கும் எலிசபெத்தின் பதிப்பிற்கும் இடையே தானியக்கமாக சரிகாண வியலாத மென்பொருளே இதற்கு காரணமாகும். தொகுத்தல் முரண்பாடு பக்கம் இந்த வேறுபாடுகளை சரிபார்த்து மாந்தமுயற்சியாக சரிசெய்ய எலிசபெத்திற்கு ஓர் வாய்ப்பு வழங்குகின்றது.