விக்கிப்பீடியா:தோழமை
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; |
தமிழ் விக்கிப்பீடியா மெய்நிகர் வெளியில் நிகழும் ஓர் கூட்டாக்கம். விக்கிப்பீடியா முறைகளைப் பேண வேண்டும் என்றால், தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் தழைக்க வேண்டும் என்றால், மெய்யுலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதிகார அடுக்குமுறைகள், பண்பாட்டு மனத்தடைகளை உணர்த்தும் கூறுகளை இங்கு தவிர்ப்பது நலம். இங்கு உள்ள ஒவ்வொரு பயனரையும் உற்ற தோழராக கருதிச் செயற்படுவதே தயங்காமல் கருத்துகளை எடுத்துரைக்கவும் துணிவுடன் கேள்விகளைக் கேட்கவும் உதவும். இதனைக் கருத்திற் கொண்டே தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதலே பயனர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உள்ளது. இது மேலை நாட்டு முறையைப் பின்பற்றிச் செய்வது அன்று. மாறாக, தோழமை மிக்க இயக்கங்களின் அணுகுமுறையைப் பின்பற்றிச் செய்வது. எனவே,
- அவர்கள், திரு, திருமதி, அண்ணா, அக்கா, தம்பி, ஐயா, அம்மா, பேராசிரியர், மருத்துவர், சார், மேடம் போன்ற அடைமொழிகளைத் தவிருங்கள். பயனர்களின் பயனர் பெயர் அல்லது இயற்பெயரைச் சுட்டி அழையுங்கள்.
- தங்களை விட வயதில் சிறியவரையும் பங்களிப்புகள் குறைந்தவரையும் நீ, உன் என ஒருமையில் விளிக்காதீர்கள்.
விக்கிப்பீடியாவுக்கு வெளியே விக்கிப்பீடியர்களுடன் உறவு கொண்டாடும் போது நமது பண்பாட்டுக்கு ஏற்ப அழைப்பதில் தவறில்லை. ஆனால், விக்கிப்பீடியாவுக்குள் தோழமை பாராட்டுவோம்.