விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 13, 2014
தமிழ் அச்சிடலின் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது. இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், குடியேற்றக்கால சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது. இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும். மேலும்...
கிறித்தவ தன்விளக்கம் என்பது கிறித்தவ இறையியலின் ஒரு பகுதியாக அமைந்து, கிறித்தவ மறைக்குப் பகுத்தறிவு அடிப்படைகளை வழங்கி, மறுப்புகளுக்குப் பதில் அளிக்கின்ற துறை ஆகும். கிறித்தவ சமய வரலாற்றில் "தன்விளக்கம்" வெவ்வேறு வடிவங்களில் அமைந்தது. புனித பவுல் விவிலியக் காலத்திலும், பின்னர் திருச்சபையின் தொடக்க நூற்றாண்டுகளில் ஒரிஜன், அகுஸ்தீன், யுஸ்தின், தெர்த்தூல்லியன் போன்ற திருச்சபைத் தந்தையரும் , நடுக்காலத்தில் அக்வீனா தோமா, கான்டெர்பரி அகுஸ்தீன் போன்ற இறையியலாரும் கிறித்தவ சமயத்திற்குத் தன்விளக்கம் அளித்தோருள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அறிவொளிக் காலக் கட்டத்தில் பிளேசு பாஸ்கால் என்பவரும், நவீன காலத்தில் ஜி.கே. செஸ்டர்டன், சி. எஸ். லூயிஸ் ஆகியோரும், தற்காலத்தில் டக்ளஸ் வில்சன், ஆல்வின் ப்ளான்டிங்கா மற்றும் வில்லியம் லேன் க்ரேக் ஆகியோரும் கிறித்தவ தன்விளக்கத் துறையில் சிறந்து விளங்குவோர் ஆவர். மேலும்...