விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 6, 2014

இசுதான்புல் துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மேலும்...


திருத்தந்தைத் தேர்தல் என்பது கர்தினால்கள் உரோமை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய ஆயரைத் தேர்வு செய்யக் கூடும் கூட்டம் ஆகும். புனித பேதுருவின் வழிவந்தவர் என கத்தோலிக்கர்களால் நம்பப்படும் உரோமை ஆயர், திருத்தந்தை என அழைக்கப்படுகின்றார். திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையின் கண்கானும் தலைவராக ஏற்கப்படுகின்றார். திருத்தந்தை வத்திக்கான் நாட்டின் அரசுத் தலைவரும் ஆவார். ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடப்பில் உள்ள மிகப் பழைமையான முறை திருப்பீடத் தேர்தல் முறையாகும். காலம் காலமாக நடைப்பெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான திருத்தந்தை பத்தாம் கிரகோரி 1274 இல் இரண்டாம் இலியோன்சு பொதுச்சங்கத்தின் போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாக பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வைக்கவும், புதிய திருத்தந்தையை தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாதெனவும் உத்தரவிட்டார். மேலும்...