விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 9, 2012
இறுதி இராவுணவு என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்போர்சா என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெசுதே என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார். யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும்...
ராம் மனோகர் லோகியா அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர். தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம் மனோகர் லோகியா.மேலும்