விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 12, 2006
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. இப்பூச்சி முட்டையிலிருந்து பட்டாம்பூச்சியாய் வளர்ச்சியடைவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை.
இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.