விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பிப்ரவரி 3, 2013

நவூரு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடும், உலகின் மிகச்சிறிய குடியரசு நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபாடானது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளன. அரசாங்கமோ அல்லது அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் சொந்தக்காரருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது. மேலும்...


இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண் என்பது புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கணிப்பிலும் இருவேறு குழுக்களின் இயைபுகள் அவற்றை இணைத்துப் பார்க்கையில் தலைகீழாகும் விளைவாகும். இதனை சிம்புசனின் தோற்றமுரண் என்றும் வழங்குவர். இவ்விளைவு சமூகவியலிலும் மருத்துவ ஆய்வுகளிலும் அடிக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் தேர்தலில் ஓர் அணி மொத்த வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக வந்தும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறும் நிலை இருப்பதுண்டு. அந்த அணி வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று சில இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும். அதே போன்ற வேறு சில பெரிய தொகுதிகளில் சிறிய வேறுபாட்டில் தோல்வியையும் கண்டிருப்பார்கள். ஆனால் மாற்று அணியினர் பல தொகுதிகளிலும் சிறிய வேறுபாட்டுடன் வெற்றி பெற்றிருப்பார்கள். அதனால் ஒப்பீட்டளவில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூடுதல் தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள். இவ்விளைவினால்தான் கடைசிநேரம் முடிவு செய்யும் கட்சிசாரா வாக்காளர்களின் வாக்குகளும் சில சிறு கட்சிகளின் வாக்குகளும் முதன்மை பெறுகின்றன. மேலும்...