விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விக்கிப்பீடியா நண்பர்கள்

எல்லோரும் தொடர்ந்து பங்களிக்கும் விக்கிப்பீடியர்களாக விரும்புவதில்லை. அதே வேளை, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நன்மதிப்பு கொண்டு இயன்ற வகையில் உதவ விரும்புகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை வலைப்பதிவர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற பரந்த வட்டத்தில் கொண்டு செல்வதன் மூலம், இது போல விக்கிப்பீடியா நண்பர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தொலைநோக்கில், நமது வீச்சைக் கூட்ட இது உதவும்.

2014 முதல் இத்திட்டம் செயற்படும். வாரம் ஒரு வலைப்பதிவர். 52 வாரங்களுக்கு 52 வலைப்பதிவர்கள். 2015ல் கல்வியாளர்கள், 2016ல் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்பது போன்று தொடர்ந்து இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயற்படுத்தலாம்.

திட்டத்தின் செயற்பாடு

ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவரைத் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுமாறு வேண்டுவோம். குறைந்தது ஐந்து கட்டுரைகள். அவை ஒவ்வொன்றும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும். வலைப்பதிவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவரது ஐந்து கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் முதற்பக்கத்தில் காட்டுவோம். அவரது புகைப்படமும் இடம்பெறும். அவரது வலைப்பதிவுக்குக் கட்டுரைப் பெயர்வெளியில் இருந்தோ முதற்பக்கத்தில் இருந்தோ இணைப்பு தரப் போவதில்லை. ஆனால், அவரது பயனர் பக்கத்தில் வழமை போல் அவரது அனைத்து விவரங்களையும் தள இணைப்புகளையும் தரலாம்.

வலைப்பதிவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது: இவ்வாறு விக்கிப்பீடியாவில் எழுதுவதையும் அவரது கட்டுரைகளுக்கான இணைப்பையும் அவரது வலைப்பதிவு, சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும்.

இற்றை

  • பயனர்கள் தாங்கள் அறிந்த வலைப்பதிவர்களிடம் இத்திட்டம் குறித்து எடுத்துரைத்து விக்கிப்பீடியாவில் பங்களிக்குமாறு வேண்டலாம். குறைந்தது எட்டு பேர் இவ்வாறு பங்களிக்கத் தொடங்கியவுடன், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதைத் தொடங்கலாம். தங்கள் அழைப்பின் பெயரில் யார் யார் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதை இங்கு தெரியப்படுத்தலாம்.