விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்
விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில் இடம்பெறும் கட்டுரைகள் ஒரு கலைக்களஞ்சியத்துக்கு ஏற்புடையவையாக இருக்கவேண்டியது அவசியம். இத்தகைய கட்டுரைகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய சில அடிப்படைகளைக் கீழே காணலாம்.
கட்டுரை அமைப்பு
தொகுகட்டுரை குறைந்தது பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்:
- 1. தொடக்கப்பகுதி
- 2. உடற்பகுதி
- 3. குறிப்புகள்
- 4. துணைநூல் பட்டியல் (குறிப்புக்களில் தகவல் மூலங்கள் விரிவாகத் தரப்பட்டால் இப் பட்டியலைத் தவிர்க்கலாம்)
தொடக்கப்பகுதி
தொகுதொடக்கப்பகுதியில் சிறிய கட்டுரைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பத்திகள் போதுமானவை. இதன் நோக்கம் கட்டுரையில் எடுத்துக்கொண்ட விடயத்துக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் தருவது ஆகும்.
இதன் முதல் வாக்கியம் எடுத்துக்கொண்ட விடயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வசனத்திலேயே அதன் தலைப்பும் பொதுவாக இடம் பெறும். எடுத்துக்காட்டாக, சென்னையைப் பற்றிய கட்டுரையின் முதல் வாக்கியம் பின்வருமாறு அமையலாம்.
- சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.
உடற்பகுதி
தொகுஉடற்பகுதியில் எடுத்துக் கொண்ட விடயம் பற்றிய விரிவான தகவல்கள் இருக்கும். இப்பகுதியில் பல துணைத் தலைப்புக்கள் மற்றும் தேவையான உட்தலைப்புகள் கொண்டு் பிரித்து எழுதப்பட்டிருக்கும்.
குறிப்புக்கள்
தொகுஇதன் கீழ், உரைப்பகுதியில் வரும் தகவல்களுக்கான விளக்கங்களும், அவற்றின் தகவல் மூலங்களும் பட்டியலிடப்படும்.
துணைநூல்கள்
தொகுஇங்கே கட்டுரை எழுதுவதில் பயன்பட்ட நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றின் பட்டியல் தரப்படும்.
சிறப்பாகக் கவனிக்க வேண்டியவை
தொகு- கூடியவரை கட்டுரைகளை எளிமையான தமிழில் எழுத வேண்டும்.
- வாசிப்பவர்களுக்கு இலகுவில் புரியத்தக்கதாகக் கட்டுரைகளின் மொழி நடை அமைதல் வேண்டும். சொல்ல வேண்டியவற்றை நேரடியாகவும், கூடிய அளவுக்குச் சிறிய வசனங்களிலும் எழுதுவது விரும்பத்தக்கது. கடுமையான சொற்களைத் தவிர்த்துப் பலரும் புரிந்துகொள்ளக் கூடிய இலகுவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது.
- பேச்சுத் தமிழ், வட்டார வழக்குகள் தவிர்ந்த பொதுவான எழுத்துத் தமிழில் கட்டுரைகள் இருக்க வேண்டும்.
- கதைகளிலும், சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றிலும் தற்காலத்தில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கலைக்களஞ்சியக் கட்டுரைகள் இவை தவிர்ந்த தரமான நூல்களில் காணப்படும் பொதுவான எழுத்துத் தமிழிலேயே இருக்க வேண்டும். அத்துடன், விக்கிப்பீடியா உலகத் தமிழர் அனைவருக்கும் பொதுவானது என்பதால் கூடியவரை வட்டார வழக்குகளைத் தவிர்த்து எழுதுதல் நல்லது.
- தன்மையிலோ முன்னிலையிலோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
- பயணக் கட்டுரைகள் எழுதுபவர்கள் தம் கண்டவற்றையும் அறிந்தவற்றையும் தாமே சொல்வது போல் எழுதுவர். இது கலைக் களஞ்சியக் கட்டுரைகளுக்குப் பொருந்தாது. இது போலவே ஒரு விடயத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கக் கட்டுரைகளை எழுதுபவர்கள், "ஒரு சட்டியை எடுங்கள்", "அதற்குள் நீரை விட்டுக் கொதிக்க வையுங்கள்" என முன்னிலையில் எழுதுவர். இதுவும் கலைக் களஞ்சியக் கட்டுரைகளுக்குப் பொருத்தமானது அல்ல.
- அதற்கு மாறாக, ஒரு சட்டியை எடுத்து, அதற்குள் நீரை விட்டுக் கொத்திக்க வைக்க வேண்டும் என்று எழுதலாம்.
- பொருளற்ற வெற்றுச் சொற்களும் தொடர்களும் கலைக்களஞ்சியக் கட்டுரைக்குப் பொருத்தமானவை அல்ல.
- வர்ணனைகள், புகழ்ச் சொற்கள், சான்று காட்ட முடியாத கருத்துக்கள் போன்றவற்றைக் கட்டுரைகளில் சேர்க்கக் கூடாது.
- கற்பனைக் கதைகளில் அல்லது இலக்கியங்களில் காணப்படுவதுபோல் வர்ணனைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகளுக்குப் பொருத்தமானவை அல்ல. சொல்லவந்த விடயத்தை உயர்வு நவிற்சி, மிகையான அழகூட்டல்கள் இன்றி நேரடியாகச் சொல்லலாம்.
- "வெண்திரைகள் கரையில் மோதி ஆர்ப்பரிக்கும் சோழநாட்டின் கிழக்குக் கடற்கரையில் விண்னை முட்டும் கட்டிடங்களோடு கூடிய பூம்புகார் நகரம் ஒப்பாரும் மிக்காரும் இன்றி நிமிர்ந்து நின்றது"
- என்று எழுதுவது கலைக்களஞ்சியத்துக்குப் பொருந்தாத வர்ணனை. இதைப் பின்வருமாறு எழுதினால் போதுமானது:
- "சோழநாட்டின் கிழக்குக் கடற்கரையில் பூம்புகார் நகரம் அமைந்திருந்தது". அல்லது "சோழநாட்டின் கிழக்குக் கடற்கரையில் உயர்ந்த கட்டிடங்கள் இருந்த பூம்புகார் நகரம் அமைந்திருந்தது" என்று கூறலாம்.
- "வெள்ளம்போல் மக்கள் கூட்டம் மைதானத்தில் முட்டி மோதிக்கொண்டிருந்தது"
- இதை நேரடியாக
- "பெருமளவு மக்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்" என்று எழுதலாம்.
- சான்று காட்ட முடியாத விடயங்களைப் பொதுவான கூற்றுக்களாக எழுதுவது கூடாது.
- "அலெக்சாண்டர் உலகப் பேரரசர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கினார்"
- என்று எழுதாமல், அவர் எந்தெந்த நாடுகளுடன் போரிட்டார். யார் யாரை வென்றார் போன்ற உண்மைத் தகவல்களை எழுதுங்கள்.
- தமிழ்மொழிச் சொற்களுக்கு முன்னுரிமை தந்து பிறமொழிச் சொற்களை இயன்ற அளவு குறைத்தோ தவிர்த்தோ நல்ல தமிழில் எழுதுவது விரும்பத்தக்கது.
- ஒரு காலத்தில் தமிழை எழுதும்போது சமசுக்கிருதச் சொற்களைப் பெருமளவில் கலந்து எழுதிவந்தனர் (மணிபவழநடை). இப்போது பலதுறைகளிலும் ஆங்கிலம் முன்னிலையில் இருப்பதனால், ஆங்கிலச் சொற்களைக் கலந்தும், பேச்சுத் தமிழைப் பெருமளவும் கலந்தும் எழுதி வருகின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் எழுதும்போது கூடியவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள்.
- "பெருமளவு சிவில் இஞ்சினீர்கள் கான்ஸ்ட்ரக்ஷன் கம்பனிகளில் பணியாற்றி வருகின்றனர்" என்று பலர் எழுதுகின்றனர். இதை,
- "பெருமளவு குடிசார் பொறியாளர்கள் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்" என்று எழுதுவது நல்லது.
- துறைசார் கட்டுரைகளை எழுதும்போது அத்துறைக்குரிய கலைச்சொற்களைக் கூடியவரை தமிழில் தரவேண்டும்
- கட்டுரைகளில் முன்வைக்கும் தகவல்களுக்குச் சான்று தருதல் வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறக்கூடிய நல்ல கட்டுரைகளுக்கான தகுதிகளுள் சான்று காட்டுதல் முக்கியமான ஒன்று. கட்டுரையில் எழுதப்படும் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் சான்றுகள் இரண்டு வகையாகக் காட்டப்படுகின்றன.
- 1. கட்டுரை எழுதுவதற்குப் பயன்பட்ட நூல்களைத் "துணை நூல்கள்" அல்லது "உசாத்துணை நூல்கள்" என்னும் தலைப்பில் பட்டியல் இடுவது.
- 2. உரைப்பகுதியில் தகவல்கள் வரும் இடத்திலேயே எண்களிட்டுக் கட்டுரைமுடிவில் அந்த எண்கள் குறிக்கும் தகவல் மூலங்களைக் "குறிப்புக்கள்" என்னும் தலைப்பில் அடிக்குறிப்பாக இடுவது.
- ஒரு நூலைத் துணைநூல் பட்டியலில் இடும்போது எழுதியவர் பெயர், வெளியான ஆண்டு, நூலின் பெயர், பதிப்பகம், வெளியிட்ட இடம் எனும் விபரங்கள் தரப்பட வேண்டும். இதன் வடிவம் பின் வருமாறு அமையலாம்.
- இராசமாணிக்கனார். மா (1999). சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், சென்னை.
- இதுபோலவே சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளைப் பின்வரும் வடிவத்தில் கொடுக்கலாம்.
- ரத்தினம், க, "அன்றைய சிற்றிதழ்கள்", சிற்றிதழ் செய்திகள், பொள்ளாச்சி, சூன் 1993.
- சான்றுகளை உரைப்பகுதியில் எண்ணிட்டு அடிக்குறிப்பாகத் தருவதற்கு இரண்டு முறைகள் பொதுவாகப் பயன்படுகின்றன. கட்டுரையில் துணைநூல் பட்டியல் சேர்க்கப்படாவிட்டால், தகவல் மூலத்தின் முழு விபரமும், அத்தகவல் இருக்கும் பக்கமும் தரப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
- 1. இராசமாணிக்கனார். மா (1999). சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், சென்னை. பக் 25.
- கட்டுரையில் துணைநூல் பட்டியல் சேர்க்கப்பட்டால் சுருக்கமாக, எழுதியவர் பெயரும், ஆண்டும், பக்கமும் மட்டும் கொடுத்தால் போதுமானது.
எடுத்துக்காட்டு
- 1. இராசமாணிக்கனார். மா (1999). பக் 25.
- கட்டுரையின் உள்ளடக்கம் சொந்த ஆய்வுகளாகவோ, சொந்தக் கருத்துக்களாகவோ இருக்கக்கூடாது.
- ஒருபக்கம் சாராமல் நடுநிலை நோக்குடன் கட்டுரையை எழுத வேண்டும்.
- ஒரு விடயம் குறித்துக் கட்டுரை எழுதும்போது அவ்விடயம் தொடர்பாகப் பல கருத்துக்கள் அல்லது நோக்குகள் இருப்பின் அவற்றுள் ஏதாவது ஒரு கருத்தையோ அல்லது நோக்கையோ மட்டும் முன்னிறுத்திக் கட்டுரைகளை எழுதுவது கூடாது. எல்லா முக்கிய கருத்துக்கள், நோக்குகள் போன்றவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு நடுநிலையில் நின்று கட்டுரை எழுதுதல் வேண்டும்.
- எடுத்துக்காட்டாக பண்டைக்காலச் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக்குரியவை எனச் சிலரும், அவை இந்திய-ஆரிய மொழிக்கு உரியதெனச் சிலரும் கூறுகின்றனர். இன்னும் சிலரோ அவை மேற்படி இரண்டும் அல்லாத இன்னொரு மொழிக்கு உரியதாகலாம் என்கின்றனர். அண்மையில் சில ஆய்வாளர்கள் இவை ஒரு மொழிக்குரிய எழுத்துக்களே அல்ல என்று கருத்துக் கூறியுள்ளனர். எனவே இது பற்றிக் கட்டுரை எழுதுவோர் இவற்றுள் ஏதாவது ஒன்றை மட்டும் சரி என எடுத்துக்கொண்டு எழுதாமல் எல்லாக் கருத்துக்களையும் குறிப்பிட்டு எழுதுவதே கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமானது.