விக்கிப்பீடியா:வெளிப்படைத்தன்மை/தேனி சுப்பிரமணி தமிழக அரசுக்கு எழுதிய மடல்

தேனி சுப்பரமணி தமிழக அரசுக்கு எழுதிய மடல் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் விதமாகவும் ஆவணப்படுத்தல் நோக்கிலும் இங்கு பதியப்படுகிறது.

பின்னணி:

பிப்ரவரி 2013ல், தேனி சுப்பிரமணி, தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய சில அறிவிப்புகளுக்குப் பரிந்துரைகள் தேவை என்று சில தமிழ் விக்கிப்பீடியர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றார். ஆனால், ஆலோசனையில் இல்லாத ஒரு வேண்டுகோளான உலகத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தனிப்பிரிவு என்பதைத் தானாக முன்வைத்து விட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு அறியத் தந்தார். அந்த வேண்டுகோள் ஏற்புடையதில்லை என்று அனைவரும் மறுத்ததால் அவசரம் அவசரமாக அரசுக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் பின்வாங்கப்பட்டன.

உரிய காலத்தில், தடுக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த அறிக்கை மாதிரிகள் தமிழக அரசு உயர் அலுவலர் மூலமாக அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில் இடம்பெற்றிருந்திருக்கும் என்பதே என் புரிதல். உரிய விளக்கத்தை தேனி சுப்பிரமணி அளிக்க முடியும். எனவே, என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்த செயல். தேனி முற்று முழுதாக இரகசியமாகச் செய்தார் என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியர் எவரும் தராத ஒரு ஆலோசனையை, தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரைக்கப்படாத ஒரு ஆலோசனையை தானே முன்வைத்து விட்டுப் பிறகு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அறியத் தருகிறார்.

இத்தகைய தவறான முற்காட்டுகள் நேரக் கூடாது என்று தான் அதனைத் தொடர்ந்து

"பிற நிறுவனங்களுடன் உறவாட்டம் தொடர்பான முறையான கொள்கையை" உருவாக்க முனைகிறோம்.

பார்க்க: http://ta.wikipedia.org/s/2qz6

இக்கொள்கை முன்மொழிவுக்கான உரையாடல் தொடங்கிய காலம் பிப்ரவரி 20, 2013 என்று புரிந்தால் பின்னணி புரியும்.

இனி கீழே வருவது அவரது மடல்.

---

(பிப்ரவரி 11, 2013 சில தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதிய மடலின் படி)

வணக்கம்.

இத்துடன் தமிழ்நாடு அரசு அலுவலர் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கேற்ப, மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட ஆலோசனைகளைக் கொண்டு, கீழ்க்காணும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த இரு அறிக்கை மாதிரிகள் அனுப்பப்பட்டன.

1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளிக்கப்படும். இலாப நோக்கமற்ற விக்கிமீடியா எனும் தன்னார்வத் தொண்டு அமைப்பால் 285 மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விக்கிப்பீடியா எனும் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத்தில் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. (தமிழக அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்) அவர்களின் ஆணையின்படி, விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தவும், அதில் பங்களிப்புகள் செய்திடவும் தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வி திட்டம் (சர்வ சிக்ஸா அபியான் - SSA) ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.


2. மேல்நிலைக்கல்வியில் விக்கிப்பீடியா குறித்த பாடம்

மேல்நிலைக்கல்வியில் (+2) தமிழ் மொழிப் பாடத்தில் விக்கிப்பீடியா குறித்த பாடம் ஒன்று இடம் பெறும். (தமிழக அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்) அவர்களின் ஆணையின்படி, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவினைப் பயன்படுத்தவும், பங்களிப்புகள் செய்யவும் உதவும் விதமாக மேல்நிலைக்கல்வியில் (+2) தமிழ் மொழிப் பாடத்தில் விக்கிப்பீடியா குறித்த முழுமையான தகவல்களைக் கொண்ட ஒரு பாடம் இடம் பெறும். இது உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பல அரிய தகவல்களைப் பெற உதவுவதாக இருக்கும்.


மேற்காணும் இரு அறிவிப்புகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வருவதால் இந்த இரு அறிவிப்புகளையும் தவிர்த்து, தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஏற்ற வகையில் தனியாக வேறு அறிவிப்புகளை உடனடியாக வழங்கிடக் கேட்டுக் கொண்டதால், கீழ்க்காணும் அறிவிப்பு என்னால் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது.


உலகத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தனிப்பிரிவு

தன்னார்வலர்களைக் கொண்டு இலாபநோக்கமின்றி செயல்படுத்தப்படும் இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்படும். (தமிழக அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்) அவர்களின்

ஆணையின்படி, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உலகிலுள்ள 285 மொழிகளில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்

மொழியிலான விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் 61 வது இடத்திலும், இந்திய மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் இந்தி, தெலுங்கு மொழிகளுக்கு அடுத்து மூன்றாமிடத்திலும் இருந்து வருகிறது. தன்னார்வலர்களைக் கொண்டு இலாபநோக்கமின்றி செயல்படுத்தப்படும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்படும். இந்தப் பிரிவின் மூலம்

தமிழ் விக்கிப்பீடியாவில், தமிழ்ப் பங்களிப்புகளை அதிகப்படுத்திடவும், ஆசிரியர் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்திடவும் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பயிலரங்குகள் நடத்தப் பெறும். இதன் மூலம்

தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதன்மையானதாகக் கொண்டு வரப்படும். விக்கிப்பீடியாவின் பிற திட்டங்களான விக்சனரி, விக்கி மூலம், விக்கி மேற்கோள், விக்கி இனங்கள் போன்ற திட்டங்களிலும் தமிழை முதன்மைப்படுத்தவும் இப்பிரிவு தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும். மேலும், தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரு துறைகளின் அமைச்சராக ஒருவரே இருப்பதால் மேற்காணும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளையும் அவரிடம் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக உடனுக்குடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றி.

நன்றி.

தேனி மு. சுப்பிரமணி