விக்கிப்பீடியா:2009 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை

விக்கித் தொழில்நுட்பம் தொகு

விக்கி என்பது ஒரு வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை பயனர்களே எளிதாக திருத்த, உருவாக்க, மற்றும் பிற வழிகளில் பங்களிக்க வசதி செய்யும் ஒரு நுட்பம் ஆகும். ஒவ்வொரு பயனர் செய்த மாற்றங்களும் பதியப்பட்டு, தேவையேற்படின் மீட்கப்படலாம். உள் இணைப்புகள் ஊடாக தொடர்புடைய தலைப்புகளுக்கு இடையே இலகுவான இணைப்பை ஏற்படுத்தலாம். விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் தொகு என்ற ஒரு பொத்தான் உள்ளது. அதை அமுக்குவதன் மூலம் அந்தப் பக்கத்தில் பொருத்தமான பங்களைப்பைச் செய்து சேமிக்க முடியும். சேமித்தவுடன் அந்தப் பக்கம் இணையத்தில் எல்லோர் பார்வைக்கும் கிடைக்கும். ஒரே நேரத்தில் பயனர்கள் ஒரே பக்கத்தை தொகுத்தால், அதைத் தகுந்தவாறு அறிவுறுத்தி எல்லோருடைய மாற்றங்களையும் ஏற்கும் வண்ணமும் ஏற்பாடு உள்ளது.

இவ்வாறு பல பயனர்கள் கூட்டாக செயல்பட்டு ஒரு பெரும் வலைத்தளத்தை வடிவமைக்க விக்கி உதவுகிறது. இந்த நுட்பம் வாட் கன்னிங்காமின் என்பவரால் 1994 ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, விக்கிப்பீடியாவால் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. விக்கிப்பீடியா மீடியாவிக்கி என்ற விக்கி மென்பொருளில் கட்டமைக்கப்பட்டது. மீடியாவிக்கி மிக வளர்ச்சி பெற்ற, முழுமையடைந்த, தன்மொழியாக்க வசதிகள் பெற்ற ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளைக் கொண்டு விக்கிப்பீடியா மட்டும் மன்றி விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி மூலங்கள், விக்கி நூல்கள் ஆகிய உறவுத் திட்டங்களும் இயங்குகின்றன. நூலகம், தமிழ் பெளத்தம் போன்ற சில வேறு தமிழ் இணையத் திட்டங்களும் மீடியாவிக்கியைப் பயன்படுத்துகின்றன. பி.எச்.பி நிரல் மொழி, மைசீக்குவல் தரவுத்தளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.

பாதுகாப்புகள் தொகு

விக்கிபீடியாவை யாரும் தொகுக்க முடியும். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். நிர்வாகிகளுக்கு மேலும் சில அனுமதிகள் உண்டு. அவர்கள் பக்கங்களை பூட்ட முடியும், பூட்டப்பட்ட பக்கங்களைத் திருத்த முடியும், பக்கங்களை நீக்க முடியும், நீக்கப்பட்ட பக்கங்களை மீட்டெடுக்க முடியும். அழிவு நோக்கில் தொகுத்தலில் ஈடுபடுபவர்களின் பயனர் கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும். இவ்வசதிகளை அவர்கள் தன் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. அவர்களது நடவடிக்கைகள் விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் கூட்டு முடிவுகளையும், விக்கிப்பீடியாவின் பொதுவான கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையிலும் மட்டுமே அமைய வேண்டும்.

நடைமுறைகள் தொகு

தமிழ் விக்கிப்பீடியா பல பயனர்களால் கூட்டாக ஆக்கப்படும் ஒரு திறந்த செயற்றிட்டம். இத்திட்டத்தை முன்னெடுக்க நடுநிலை நோக்கு, இணக்க முடிவு, மேற்கோள் காட்டுதல் ஆகிய கொள்கைகள் உதவுகின்றன. தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கசார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாக கொண்டிக்கவேண்டும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இணக்க முடிவு விரும்பப்படுகிறது. அதாவது பெரும்பாலன முடிவுகள் பயனர்கள், நிர்வாகிகள் எல்லோரிடமும் கருத்துக் கோரப்பட்டு, அலசப்பட்டு எட்டப்படுகின்றன. மேற்கோள் காட்டுதல் கட்டுரைகளின் தகவல்கள் மதிப்புப் பெற்ற உசாத்துணைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட வேண்டும் என்பது ஆகும். இத்தோடு தமிழ் விக்கிப்பீடியாவின் நடை படர்க்கையில், தகவல்களுக்கு முக்கியத்துவம் தந்து, தகுந்த தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்படுதல் வேண்டும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள், நன்றாக பங்களித்த பயனர் சமூகத்திடம் இருந்து தேர்தெடுக்கப்படுகிறார்கள். விக்கிப்பீடியாவை கண்காணிப்பது, பக்கங்களை திருத்துவது, விக்கியாக்கம் செய்வது, உதவிப் பக்கங்கள் உருவாக்குவது, இன்றைப்படுத்தல் செய்வது போன்ற பணிகளை நிர்வாகிகள் செய்கிறார்கள்.

தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் பெரும்பான்மையானோர் நல்நோக்கில் பங்களிப்பார்கள் என்ற அடிப்படையில் அமைந்தது. ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இழுப்பறி நோக்கிலான விவாதங்கள் விரும்பப்படுவதில்லை.

சிக்கல்கள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு இணைய வசதி, தமிழ் எழுத்துரு, தமிழ் தட்டச்சு, விக்கி நுட்பம், எழுத்துத் திறன், தமிழ் விக்கி நடை, கலைச்சொற்கள், விக்கி கொள்கைகள் ஆகியவை தடையாக அறியப்படுகின்றன.

பெரும்பாலானத் தமிழ் மக்களுக்கு கணினி, இணைய வசதி இன்னும் இல்லை. அப்படி வசதி உடையவர்களுக்கும் தமிழ் கணிமை நுணுக்கங்கள் தெரியவில்லை. இதனால் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் வட்டம் சிறிதாகவே உள்ளது.

தமிழ் விக்கி நடை இதழிய எழுத்து நடையே. படர்க்கையில், நல்ல தமிழில் எழுத வேண்டும். வரையறை முதல் வரியிலோ அல்லது பந்தியிலோ தருவது மட்டுமே சற்று மாறுபட்ட வேண்டுகோள். வரையறையைத் தருவதால், எழுதுபவர் தாம் என்ன சொல்ல வருகிறோம் எனபது பற்றித் துல்லியமாகச் சிந்திக்க தூண்டப்படுகிறார். அதை விட ஒன்றைப் பற்றிய வரையறை கலைக்களஞ்சிய கட்டுரை வாசகரின் ஒர் அடிப்படை எதிர்பாப்பு ஆகும்.

தமிழ் கலைச்சொற்கள் தெரியவில்லை என்பது ஒரு தடையாக முன்வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது நியாயமான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் இன்று 100 000 வரையான கலைச்சொற்கள் விக்சனரியில் உள்ளன. மேலும் கலைச்சொற் பரிந்துரைகளை அனுபவம் பெற்ற பயனர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அப்படியும் தெரியவிட்டால் ஆங்கில கலைச்சொற்களைப் கட்டுரையில் பயன்படுத்தலாம். பின்னர் சரியான கலைச்சொற்களை கட்டுரையாளரோ, பிற பயனர்களோ இணைக்கலாம்.

விக்கி கொள்கைகள் சற்று இறுக்கமாக இருக்கின்றது என்பது சிலரின் கருத்து. எமது கொள்கைகளில் பெரும்பாலானவை ஆங்கில விக்கியில் இருந்து பெறப்பட்டவையே. இவை இரண்டு அடிப்படையான இன்றியமையாத தேவைகளில் இருந்து வருவன. முதலாவது, விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம் என்பதால், இங்கு நமது நடவடிக்கைகள் அதை நோக்கி இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது, இக்கலைக்களஞ்சியம் பல தன்னார்வலர்கள் கூட்டாக இணைந்து உருவாக்குவது. இந்த இரு தேவைகள் ஐந்து அடிப்படைக் கொள்கைகளில் நின்றமைகின்றன. அவை பின் வருமாறு:

  1. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம்.
  2. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் நடுநிலை நோக்கில் எழுதப்படுவது.
  3. விக்கிப்பீடியாவை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், தொகுக்கலாம். எவருக்கும் இதன்மேல் தனியுரிமை இல்லை.
  4. விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்கள் கூட்டுழைப்புக்கென அமைந்த நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும்.
  5. விக்கிப்பீடியாவின் கொள்கைகள் அதன் அடிப்படைத் தேவைகளையும் குறிக்கோள்களையும் ஒத்தே அமைந்திருக்கின்றன. அதனால், இதே அடிப்படையில் இவற்றில் தேவையான மாற்றங்களைக் கூடிக் கதைத்துச் செய்யலாம்.

இவை தமிழ் விக்கிப்பீடியாவின் தொலைநோக்குக்கு இணங்க முன்வைக்கப்பட்ட கொள்கைகள். மேலே சொல்லியுள்ளபடி இக்கொள்கைகளில் மாற்றம் தேவை என்றால் பரிந்துரைளை தமிழ் விக்கிப்பீடியாவின் முன்வைக்கலாம்.

தமிழ் மொழியில் அறிவியல், தொழில்நுட்ப தகவல்கள் பகிரப்படத் தேவை இல்லை என்ற மனப்படிவம் பலரிடம் உள்ளது. இலக்கியம் சமயம் அரசியல் போன்ற தலைப்புக்களில் தமிழில் வலைப்பதியும் பல எழுத்தாளர்கள் கூட அறிவியல் தொழில்நுட்பம் கணிதம் போன்ற துறைகளில் கவனம் தருவதில்லை. பொதுத் தமிழ்ச் சமூகத்தின் குறை, தமிழ் விக்கிப்பீடியாவிலும் பிரதிபலிக்கிறது.

விமர்சனங்கள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவை நோக்கி பிறமொழிச் சொற்கள், கிரந்தம், இறுகிய நடை பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதே எமது கொள்கை. முதலில் பயன்படுத்தப்பட்ட சொல்லை விட வேறு சிறந்த மாற்றுச் சொல்லை பின்னர் அறிந்தால் விக்கியில் நாம் எளிதாக தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். தமிழ்ச் சொற்கள் தெரியாவிட்டால் கட்டுரையில் ஆங்கில சொற்களையோ பிற மொழிச் சொற்களையோ பயன்படுத்தலாம். மற்ற பயனர்கள் தமிழ் சொற்கள் இட்டு மேம்படுத்துவர். நபர் பெயர்கள், சமய கலைச்சொற்கள் ஆகியவற்றைத் தவிர்த்து கிரந்தப் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. பன்னாட்டுத் தமிழர்களுக்கும் புரியும் பொதுத் தமிழ் எழுத்துக்களைப் ப்யன்படுத்துவது விரும்பப்படுகிறது.

விக்கி தொழில்நுட்பம், பாதுகாப்பு, நடைமுறைகள் பற்றிய அறிமுகம் தொகு

விக்கிபீடியா கோட்பாடு ஒருபுறமும் தொழினுட்பம் மறுபுறமாயும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்தும் விக்கிபீடியா என்கிற அசைவியக்கத்தை நடத்திச்செல்வது தொடர்பான விளக்கங்கள்.

  • விக்கி முறைமை இயங்கும் தொழிநுட்ப அடிப்படைகள் குறித்த அறிமுகம்.
  • விக்கிபீடியாவில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக முறைகள் போன்றன குறித்த ஆழமான பார்வை.
  • விக்கிபீடியாவின் போதாமைகள், அவற்றை நிவர்த்திக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, எடுத்துக்கொள்ளப்படக்கூடிய முயற்சிகள் குறித்த உரையாடல்.
  • விக்கிக் குற்றங்கள், பொதுவாக விக்கிபீடியர்கள் கடைப்பிடிக்க எதிர்பார்க்கப்படும் ஒழுக்கங்கள், பொறுப்புக்கள் போன்றன பற்றிய விளக்கம்.