விக்கிப்பீடியா பேச்சு:த.வி. முன்னோடி மயூரநாதன் சந்திப்பு வலைப்பதிவின் பதிவு

தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி இ. மயூரநாதன் - மின் அஞ்சல் சந்திப்பு - (வலைப்பதிவின் பதிவு)

தொகு

தமிழில் தகவல்களை திரட்டி வகுத்து தருவதற்க்கு மதுரை திட்டம், தமிழ்மணம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செயற்படுவது தமிழ் விக்கிப்பீடியாதான். விக்கிப்பீடியா ஒரு இணைய தகவல் களஞ்சியம். தமிழ் விக்கிப்பீடியா மயூரநாதனால் அடித்தளம் நாட்டப்பட்டு, உந்தப்பட்டு இன்று பல பயணாளர்களை கொண்டு விரிந்து நிற்கின்றது. இது விருச்சியமாக வளர்ந்து நிற்க்கும் ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டமைப்புக்கள், வசதிகள், நுட்பங்களையே அடிப்படையாக கொண்டது. யாரும் இலகுவில் பங்குகொண்டு சிறுக சிறுக கட்டமைத்து உருவாக்ககூடிய, உருவாக்கப்படும் தகவல் களஞ்சியமே தமிழ் விக்கிப்பீடியா. தமிழ் விக்கிப்பீடியா அனேகமான வலைப்பதிவாளர்களுக்கு அறிமுகமானதே. காசியின் "வலைப்பதிவெல்லாம் பழசு..." மற்றும் நவன் பகவதி அவர்களின் "இன்னுமொரு விக்கி" நல்ல அறிமுக பதிவுகள். விக்கி பற்றி மேலதிக தகவல்கள், சுட்டிகள் கீழே தருகின்றேன். முதலில் இ. மயூரநாதன் அவர்களுடான எனது மின் அஞ்சல் சந்திப்பு.

இ. மயூரநாதன் தமிழ் கணிமை ஆர்வலர்களுக்கு பரிச்சியமானவர்தான். அவரை பற்றிய ஒரு அறிமுக குறிப்பு அவரது தளத்தில் உள்ளது (சுட்டி). தமிழ் விக்கிப்பீடியாவை தமிழில் பல்துறை தகவல்களை பெறுவதற்க்கு ஒரு இணைய மையமாக பரிமானிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆழமாக சிந்தித்து செயலாற்றுபவர் இ. மயூரநாதன். நான் அனுப்பிய கேள்விகளுக்கு மிக விரிவாக பதில்களை தந்துள்ளார். நன்றி.

கேள்வி பதில்

  • தமிழ் விக்கிப்பீடியாவை நீங்கள்தான் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் அத்திவாரம் இட்டீர்கள், இன்று பலர் ஆர்வத்துடன் பங்களிகான்றார்கள், முன்னெடுக்கின்றார்கள். யாரும் இலகுவில் பங்களிக்கலாம் என்பதுதான் விக்கிப்பீடியாவின் சிறப்பு, இவ் வகையில் இன்று தன்லாவர்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளது?

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன. அண்மைக்காலத்தில் பலர் ஆர்வமாக இங்கே பங்களிப்புச் செய்து வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரியது. எனினும் பங்களிப்பவர் தொகை இன்னும் பெருமளவு அதிகரிக்க வேண்டும். இன்று தமிழில் பங்களிப்புச் செய்யும் நம்மவர்கள் சிலர் மிகவும் நல்லமுறையில் செயல் படுகின்றனர். இது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

  • தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன?

பல மொழிகளில் 13000க்கு மேற்பட்ட முனைப்புடன் செயல்படும் பங்களிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டும் இவ்வாறு பங்களிப்பவர் தொகை 6000 க்கு மேல். எல்லா மொழிகளிலுமாக நாளாந்தம் ஏறத்தாழ 5000 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இதில் ஆங்கில மொழியில் மட்டும் நாளாந்தம் சராசரியாக 1200 க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்படுகின்றன. தமிழிலோ முனைப்புடன் பங்களிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பத்துக்கும் குறைவுதான். சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு கட்டுரைகள் மட்டும்தான் எழுதப்படுகின்றன. உலகில் எண்ணிக்கை அடிப்படையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் 18 ஆவது நிலையில் உள்ளனர். கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 75 ஆவது நிலைக்கும் பின்னர்தான். தமிழில் இப்போது 800 கட்டுரைகளுக்கு மேல் எழுதப்பட்டுவிட்டன. இவற்றில் பல குறுங் கட்டுரைகள், மேலும் சில அரை குறையாக மொழி மாற்றம் செய்யப்பட்டவை. தரமான கட்டுரைகள் குறைவுதான். இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது என நினைக்கிறேன். தரமான, அறிவுபூர்வமான கட்டுரைகள் எழுதப்பட வேண்டுமென்பதில் பங்களிப்பவர்களிடையே இப்பொழுது கூடிய விழிப்புணர்வு காணப்படுகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டமைப்பிலும் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. புதிய பங்களிப்பாளர்களுக்கு உதவியாக வழிகாட்டிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

  • ஆரம்பத்தில் மந்தமான பங்களிப்புக்கள் குறித்து நீங்கள் சற்று வேதனையடைந்திருந்தீர்கள், இன்று தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வேகம் உங்கள் எதிர்பார்புக்களை நிவர்த்தி செய்கின்றதா?

முன்னர் எடுத்துக்காடியபடி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வீதம் போதாது. ஆனாலும் அண்மைக்கால வளர்ச்சியைப் பார்க்கும்போது வருங்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

  • தமிழில் தரமான தகவல்களை அனைத்து துறைகளிலும் இருந்து தொகுத்து வகுத்து தருவதற்க்கு விக்கிப்பீடியாதான் மையமாக விளங்கும் என்று நான் நம்புகின்றேன், உங்களின் கருத்து?

விக்கிப்பீடியாதான் மையமாக விளங்கும் என்று சொல்வதிலும், இது மையமாக விளங்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். நிச்சயமாக தற்போதைய நிலையில், அனைத்து அறிவுத்துறைகளிலும் குவிந்து வருகின்ற உள்ளடக்கங்களைத் தமிழ் மொழியில் கொண்டு வருவதற்கான முக்கியமான ஒரு வாய்ப்பு விக்கிப்பீடியாவும் அதனோடிணைந்த ஏனைய திட்டங்களும்தான் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்தும் இத் துறையில் விக்கிப்பீடியா பெரும் பங்காற்றும். ஆனால் எதிர்காலத்தில் இப்படியானதொரு திட்டம் தமிழ் மண்ணில் முளைவிட்டு, வேரூன்றி, பெருமரமாகி நிழல் தரவேண்டும் என்பதுவும், அதுவே தமிழ் அறிவுத்துறைகளின் மையமாக விளங்கவேண்டும் என்பதுவுமே எனது பேரவா.

  • தமிழின் மிகப்பெரிய சொத்தான இலக்கியங்களை மதுரை திட்டம் தொகுத்து. தமிழ்மணம் உடனடியாக பல தகவல்களை பகிரவும், பலவித விதயங்களை பகிரவும் உந்தியது. அறிவியல் தகவல்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, தேட வசிதியான வகையில் ஒருங்கிணைக்க தமிழ் விக்கிப்பீடியாதான் சிறந்தது. ஒரு நிலையில் மனிதனால் பெறப்பட்ட அனைத்து அறிவையும் இயன்ற வரை ஒருங்கே தமிழில் குவிக்க விக்கிப்பீடியா உதவும் என கருதலாமா?

அறிவியல் சார்ந்த விடயங்கள் மட்டுமன்றி அனைத்து நவீன அறிவுத்துறைகளிலும் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து மக்களிடையே பரவச் செய்வதில் விக்கிப்பீடியா பெரும் பங்காற்ற முடியும். பரவலாகவும், பாரிய அளவிலும் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு இணையம் ஒரு மிகப் பொருத்தமான ஊடகம். உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்ற எல்லாத் தரப்புத் தமிழரும் மிக இலகுவாகப் பங்கு பெறக்கூடியதாக உள்ள ஒரு திட்டம் தற்போது இது மட்டும்தான். விக்கித் திட்டங்களின் அடிப்படையான பண்பாக விளங்கும் திறந்த, கட்டற்ற தன்மை பாரிய அறிவுத் தளமொன்றின் உருவாக்கத்தை இலகுவாக்கியதுபோல அதன் பரவலையும், பயன்பாட்டையும் கூட இலகுவாக்கக்கூடியது. சரியானபடி கையாண்டால் சிறப்பான ஒழுங்கமைவு கொண்ட, பயன்படுத்த வசதியான, பாரிய அறிவுத்தளமொன்றை விக்கிப்பீடியாவினூடாகத் தமிழில் கட்டியெழுப்புவது கடினமானதல்ல.

  • என்ன என்ன துறைகள் இருக்கின்றன என்ற தெளிவான ஒரு பரந்த கட்டமைப்பு தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் இல்லை என்றே தோன்றுகின்றது. எல்லா துறைகளையும் ஒரே தருணத்தில் விபரிக்கவோ தொகுக்கவோ முடியாது என்பது நான் அறிவேன். ஆயினும், ஒரு வித அடிப்படை Map of the Knowledge Domains தேவை என்றே கருதுகின்றேன். அவ் நீதியில்தான் விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் நான் தொகுக்க முயல்கின்றேன். இவ் விதயம் நோக்கி உங்களின் கருத்து ஏதும் உண்டா?

தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிய நிலையில் இருப்பதும், எதிலும் முழுமை இல்லாதிருப்பதும் உண்மைதான். விக்கிப்பீடியா போன்ற ஒரு திட்டத்தில், பல்துறை சார்ந்த வல்லுனர்களின் பங்களிப்பும் இன்னும் போதிய அளவு கிடைக்காத நிலையில், இத்தகைய ஒரு நிலை எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான். இந்நிலையில் விரைவான மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், இத்திட்டத்தின் வளர்ச்சியை ஒருமுகப்படுத்தவும், கலைக் களஞ்சியத்தின் வளர்ச்சி இலக்குகளை அனைவரும் புரிந்துகொள்வதை இலகுவாக்கும் வகையிலும், பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையிலும் இதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டியது மிகவும் அவசியம். இதனை அடையும் திசையிலான உங்கள் முயற்சிகளுக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும்.

  • விக்கிப்பீடியாவில் தன் நிலை கருத்துக்களை அல்லது அபிப்பிராயங்களை தவிர்த்து, தகவல்களை முன்வைப்பதே வழமை. பொதுவாக, விக்கிப்பீடியாவில் தகவல்கள் கட்டுரை அமைப்பிலேயே உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, விக்கிப்பீடியாவில் கட்டுரை அல்லது தகவல்களை பகிர்வதற்க்கும் வலைப்பதிவுகளில் பதிவதற்க்கும் இருக்கும் வித்தியாசங்களை சுட்டுவீர்களா?

விக்கிப்பீடியாவை ஒரு பிரம்மாண்டமான இணைய நூலகமாக மாற்றமுடியும் என்பதிலும், பலவிடயங்களிலுமான அறிவை தமிழில் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய வல்லமை விக்கிப்பீடியாவுக்கு உண்டு என்பதிலும், கருத்துவேறுபாடு இல்லை. எனினும், விக்கிப்பீடியாவின் சில வரையறைகளையும் உணர்ந்து கொள்ளவேண்டியதும் அவசியம். விக்கிப்பீடியாவில் யாரும் கட்டுரைகளை எழுதலாம், யாரும் அவற்றில் திருத்தம் செய்யலாம் என்ற நிலையும், அங்கிருக்கும், உள்ளடக்கங்களுக்குப் பொறுப்பான தனி வல்லுனர் எவரும் இல்லாமையும், இதன் நம்பகத் தன்மையைக் குறைக்கக்கூடும். க்ல்வித் துறைகளில் ஆய்வு மட்டத்தில் இதனைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் உண்டு. எனவே விக்கிப்பீடியாவின் வலு பொதுவான அறிவு மட்டத்தை உயரவைப்பதில் தான் கூடுதலாகப் பயன்படும் என்பது எனது கருத்து.

விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், வேறு வலைப்பதிவுகளில் எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. வலைப்பதிவுகளிலும், சஞ்சிகைகளிலும், நூல்களிலும் இடம்பெறும் ஆக்கங்கள் எழுதுபவரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகின்றன. இதுவும் அவசியமானதுதான். ஆனால் அவற்றையெல்லாம் கலைக்கழஞ்சியமொன்றில் அப்படியே போடமுடியாது. மேலும், விக்கிப்பீடியாவில் எழுதும்போது எழுதுபவரின் அடையாளம் பாதுகாக்கப்படுவதில்லை. விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு ஓரளவு சுயநலமின்மை தேவைப்படுகின்றது. தமிழில் அறிவுத்துறை வளர்ச்சியை உருவாக்குவதில் எங்களுடைய பங்கைச் செலுத்துகிறோம் என்ற சிய திருப்தி தவிர, பொது மக்கள் மத்தியில் புகழ் பெற இது உதவாது. இந்த நிலையில் பலருக்கு உடன்பாடு கிடையாது. இதைக் குறை சொல்லவும் முடியாது. ஆனாலும், பலவகையான எழுத்துவேலைகளுக்கு மத்தியிலும், விக்கிப்பீடியாவுக்கும் எழுதக்கூடியவர்களும் பெருமளவு இருக்கிறார்கள். அவர்களுக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதும், தமிழில் கட்டுரைகளை இணயத்தில் உள்ளீடு செய்வதை இலகுவாக்குவதும், பலருடைய பங்களிப்பை ஊக்குவிக்கும். இணையத் தொடர்பு வசதிகள் இல்லாமையும் பலர் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்குத் தடையாக உள்ளது.

  • தமிழ் விக்கியின் எதிகால திட்டங்கள் எவை?
  • தமிழ் விக்கிப்பீடியா எப்படி பரிமானிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் பற்றித் தீர்மானிப்பது இங்கே பங்களிப்பவர்கள் அனைவரதும் கூட்டு முயற்சிதான். தனிப்பட்ட எவரும் இதைத் தீர்மானிக்கமுடியாது. எனினும் இதன் ஆரோக்கியமான வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்னும் வகையில் எப்படியான திட்டங்களைச் செயற்படுத்தினால் நல்லது என்பதில் எனக்கும் சில கருத்துக்கள் உண்டு.

தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது தமிழ் சமுதாயத்தின் தனியான தேவைகள் பற்றியும் அவற்றை நிறைவேற்றுவதில் எமக்குள்ள வசதி வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. முக்கியமாக நவீன அறிவுத்துறைகள் சம்பந்தப்பட்ட விடயங்களைத் தமிழில் கொண்டுவருவது தொடர்பாக இருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றிய தெளிவான நோக்கு இருந்தால்தான் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயனுள்ள முறையில் வளர்த்தெடுக்க முடியும். ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிப்பீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைவிடத் தமிழ் விக்கிப்பீடியாவின் பிரச்சினை வேறானது. ஆங்கிலம் ஒரு உலகத் தொடர்பு மொழி. உலகம் தழுவிய கல்விக்கான மொழியாகவும் அது உள்ளது. ஆங்கிலேயர் மட்டுமன்றிப் பல்வேறு நாட்டவரும் ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஆங்கிலேயர் அல்லாதவர்கள் ஏராளம். இந்தியர்களே கோடிக்கணக்கில் உள்ளார்கள். இதன் காரணமாக ஆங்கிலத்தில் உயர் அறிவுத்துறைத் தகவல்களுக்கான தேவையும், அத் தகவல்களுக்கான வழங்கலும் மிக அதிகம்.

தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தவரை உயர் அறிவுத் துறைகளுக்கான கல்விமொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்துவதில்லை. இந்தியா, இலங்கை முதலான ஆசிய நாடுகள் பலவற்றில் மக்கள், ஆங்கில மொழிமூலக் கல்வி மட்டுமே தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ள அவசியம் என்பதில் உறுதியாக உள்ளார்கள். இவ்வாறு ஆங்கிலத்தில் கல்வி கற்கும்போது ஆங்கிலத்திலேயே சிந்திக்க முடியும். நானும் இதற்கு விதி விலக்கல்ல. சாதாரண அஞ்சல் தொடர்புகளிலேகூடத் தமிழைப் பயன்படுத்துவதில் நாங்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் Split Personality உள்ளவர்களாகத்தான் இன்று உலவுகிறோம். கல்வி, அறிவியல் என்று வரும்போது ஆங்கிலேயராகவும், சமயம், கலை போன்ற விடயங்களுக்கு வரும்போது தமிழர்களாகவும் ஆகிவிடுகிறோம். இந்தநிலையில் தமிழில் உயர் அறிவுத் துறைகள் பற்றிய தகவல்கள் யாருக்குத் தேவை என்பது விடை காணப்படவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி. ஐன்ஸ்டீனின் சார்புத்தத்துவம் பற்றித் தமிழில் ஆழமாக எழுதப்படும் கட்டுரையொன்றை யார் வாசிப்பார்கள் என்று சிந்தித்ததுண்டா? நவீன அறிவுத்துறைகள் சம்பந்தமான ஆக்கங்களைத் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது சமயம், தமிழ், சினிமா போன்ற விடயங்களுக்குமேல் செல்லாமல் விட்டுவிடலாமா?

அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுத்துவிட முடியாதென்பதே எனது கருத்து. இன்றைய நிலையை மாற்றித் தமிழை அனைத்து உயர் அறிவுத்துறைகளையும் தழுவிய மொழியாக வளர்த்து எடுக்கவேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு முக்கியமாக நாங்கள் செய்யக்கூடியது நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். இதனால்தான் தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு சாதாரண கலைக்களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீதுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த இலக்கை அடைவதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டும். இதேபோன்ற சிந்தனைப் போக்குக் கொண்டவர்களுடன் கைகோர்த்துக் கொள்ளவேண்டும், இவ்வாறான இலக்குகளைக் கொண்ட திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும்.

தமிழில் உயர் அறிவுத்துறைகளைக் கொண்டுவருவதில் உள்ள முக்கிய இடர்ப்பாடுகளில் ஒன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கலைச் சொற்கள் இல்லாமையாகும். இந்தத் துறையிலே விக்சனரியுடன் இணைந்து விக்கிப்பீடியா பெரும் பணியாற்ற முடியும். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் ஆரம்பத்தில் விக்சனரியில் கலைச்சொல் அகராதியைத் தொடங்கினேன். பலர் சேர்ந்தால் இதைச் சிறப்பாக வளர்த்து எடுக்க முடியும். ஒரு முழுமையான கலைச்சொல் அகராதி தமிழ் மொழியில் அறிவுத்துறை விடயங்களைக் கொண்டுவருவதில் முக்கியமான ஒரு தேவையாகும். இது விடயத்தில் இலங்கை, இந்தியக் கலைச் சொற்களிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து ஒரே கலைச்சொற் பயன்பாட்டைச் செயற்படுத்த உதவுவது அல்லது ஒவ்வொரு பகுதியினருடைய கலைச்சொற்களையும் மற்றவர்களும் புரிந்துகொள்ள உதவுதல் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

உயர் கல்வித்துறை சம்பந்தப்படாத சாதாரண மக்களுக்கே தமிழ் விக்கிப்பீடியாவில் கூடுதல் ஆர்வம் இருக்கக்கூடும் என்பதனால் அவர்களுடைய தேவைகளுக்குப் பொருத்தமாக இலகுவாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், அதே நேரம் ஆய்வுத்தேவைகளுக்கு உதவக்கூடிய சிக்கலான விடயங்களை ஆழமான ஆய்வுகளுடன் அணுகும் வகையிலும் விடயங்களை வெவ்வேறு மட்டங்களில் முன்வைப்பதற்கு வழி காணப்பட வேண்டும்.

சாதாரண பொதுமக்களுக்கு ஆர்வம் தரக்கூடிய விடயங்களையும், நேரடியாகப் பயன்படக்கூடிய விடயங்களையும் தெரிவு செய்து அவற்றைக் கட்டுரைகளாக்க முயற்சி எடுக்கவேண்டும். கல்வி மற்றும் ஆய்வு முயற்சிகள் தவிர சாதாரண மக்கள் அறிய வேண்டிய ஏராளமான விடயங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் காணபதும் திட்டமிட்ட முறையில் அவற்றைக் கட்டுரைகள் ஆக்குவதும் உசிதமானவை. இதன்மூலம் வாசிப்பதற்காக விக்கிப்பீடியாவுக்கு வருவோரின் தொகையை அதிகரிக்க முயலலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழில் நேரடியாக உள்ளீடு செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவது பயனுள்ளது. பலர் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்வதற்குத் தமிழைக் கணனியில் பயன்படுத்துவதிலுள்ள இடர்பாடுகளும் ஒரு காரணம். விக்கிப்பீடியாவின் ஏனைய மொழிப் பிரிவுகளிலுள்ளோரின் நிபுணத்துவத்தை இதற்குப் பயன்படுத்திக்கொள்ள முயலலாம். தவிர ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயப்புச் செய்வதை இலகுவாக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவது விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கமுயலலாம்.

சிறந்த கட்டுரைகளை எழுதக்கூடிய பலருக்குக் கண்னி வசதிகள் இல்லாமல் இருக்கக்கூடும் அல்லது தமிழில் உள்ளீடு செய்ய முடியாமல் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று வசதிகள் உள்ளவர்கள் மூலம் உள்ளீடு செய்யக்கூடிய நிரந்தர ஒழுங்கொன்றைத் தமிழ் விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புச் செய்பவர்கள் மேலும் பயனுள்ளமுறையில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அதற்கான வழிமுறைகள் பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். வசதியுள்ளவர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ளவர்களில் சிலரையும் அழைத்து அவர்களுடைய கருத்துக்களையும் அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களையும், சாதாரண மக்களையும் விக்கிப்பீடியா பக்கம் கவர முடியும்.

மேலே குறிப்பிட்டவை அவ்வப்போது எனது சிந்தனையோட்டத்தில் வெளிப்பட்ட விடயங்களே. இது ஒரு முழுமையான திட்டம் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அப்படியான ஒரு திட்டத்தின் பகுதியாக விளங்கக்கூடியவை என்பது எனது கருத்து.

மேலதிக தகவல்கள்

தமிழ் விக்கிப்பீடியாவை இன்னுமொரு இணைய தளம் என்று நோக்கினால், அதன் பின் இருக்கும் மென்பொருள் நுட்பத்தையும், நிர்வாக தத்துவத்தையும், குமுகாய கட்டமைப்பையும் புரிந்து கொள்ள முடியாது. விக்கியின் மென்பொருள் நுட்பத்தை மேலோட்டமாக அலசினால் கூட அது இலகுவில் யாரையும் பங்களிக்க, மாற்றங்கள் செய்ய அனுமதித்து அம் மாற்றங்களை பற்றிய ஒரு வரலாற்றை குறித்து வைத்து கொள்கின்றதென்பதை அவதானிப்பீர்கள். இது பலருடைய பங்களிப்பையும் உள்வாங்க சாத்தியமாக்கின்றது, உந்துகின்றது. விக்கியின் நிர்வாக தத்துவத்தில் பின்வரும் இரண்டு கருத்துநிலைகள் முக்கியமானவை: யாரையும் பங்களிக்க அனுமதிப்பது, மற்றும் நடுநிலையான அல்லது பாரபட்சமின்றிய தகவல்களை வேண்டி நிற்பது.

யாரையும் பங்களிக்க அனுமதித்தால் தரம் நம்ப்பிக்கை பாதிக்கப்படாதா என்ற முக்கிய கேள்வி எழுகின்றது? பங்களிக்க முன்வருவோர் தங்களுக்கு தெரிந்த வரையில் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை மேன் படுத்தவே முனைவர் என்ற மனித குண மீதுள்ள நல்ல நம்பிக்கையிலேயே எந்த திறந்த நிர்வாக கட்டமைப்பும் இயங்குகின்றது. நாளடைவில், பலருடைய குறிப்பாக துறைசார் வல்லுனர்களுடைய பங்களிப்புக்களை உள்வாங்கி தரம் மேம்படும் என்பதுவே எதிர்பார்ப்பு, மற்றும் நடைமுறையில் நிரூபிக்கபட்ட உண்மை. நம்பிக்கை நாளடைவில், பாவனையில், பயனர்கள் மத்தியில் ஏற்படும் ஒரு நிலையே. தமிழ் விக்கிப்பீடியா மீது நம்பிக்கை உணரப்படும், அல்லது ஒரு குறிப்பிட்ட பரிமான வளர்ச்சி அடையும் பொழுது ஏற்படும் என்றே கருத முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்ப, நிர்வாக கட்டமைப்புக்கள் முக்கியமானவை. அவை ஆங்கில கட்டமைப்புக்கு உட்பட்டவை அல்லது பிரதிபலிப்பவையே. இவற்றுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவிற்க்கு அதன் குமுகாய கட்டமைப்பும் முக்கியம். தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள், திறந்த மன பண்பாடோ, கூட்டு செயல்பாடோ அற்றவர்கள் என்ற கருத்துநிலை பொதுவாகவும் எம்மிடேயேயும் நிலவுகின்றது. (இக் கருத்துநிலையில் எவ்வளவு உண்மை உண்டு என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பு. சினிமா தயாரிப்பு, ஈழ போராட்டம் இக் கருத்துநிலைக்கு எதிரான இரு உதாரணங்கள்.) இணையம் ஏற்படுத்தியுள்ள இணைபின் மூலம் உலக தமிழ் ஆர்வலர்கள் ஒற்றுமையாக இணைந்து, குமுகாயமாகவும் அதேவேளை அவர் அவருக்கு ஏற்ற முறையிலும் பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியா வழி செய்கின்றது.

மேலும், விக்கியில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளை பற்றி குறிபிடுதல் வேண்டும். எந்தவொரு விக்கியிலும் குளப்பக்காரர்களால் வேண்டும் என்றே கட்டுரைகள் மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம். அப்பொழுது என்ன செய்வது? ஒரு கட்டுரை மாற்றம் அடையும் பொழுது, அம் மாற்றத்தை விக்கி வரலாற்றில் பதிவு செய்கின்றது. மாற்றங்கள் தகுந்ததாக அமையாவிட்டால், அந்த வரலாற்றை அவதானித்து வரும் பயணர்கள் அம் மாற்றங்களை நீக்கி பழைய கட்டுரையை மீழ் பதியலாம். குளப்பக்காரர்கள் விடாது வற்புறுத்தினார்கள் என்றால் அவர்களுடைய இணைய இலக்கத்தை விக்கி கண்காணிப்பாளர்கள் தடைசெய்ய முடியும். குளப்புக்காரர்கள் வேறு இணைய இலக்கத்தை பாவித்து மீண்டும் வர முடியும். இப்படியான சந்தர்ப்பங்களில் கண்கானிப்பாளர்கள் புதிதாய் மாற்றப்படும் பக்கங்களை ஒரு வித தணிக்கையில் வைத்து பின் வெளியிடலாம். இவை தவிர மேலும் சில படி நிலை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

விக்கிப்பீடியா பற்றிய மேலதிக தகவல்களை தரும் ஆங்கில கட்டுரைகள்: "The Book Stops Here" "Why Wiki Works" What Makes Wikipedia So Special K5 Article on Wikipedia Anti-Elitism

விக்கிப்பீடியாவை விமர்சித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரைகள்: "The Faith-Based Encyclopedia" Why Wikipedia Must Jettison Its Anti-Elitism

தமிழ் விக்கிப்பீடியாவை தவிர பல தமிழ் விக்கிகள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவுடன் தொடர்புடைய விக்கிகள், மற்றும் வேறு குழுக்களின் விக்கிகள்.

தமிழ் விக்சனரி http://ta.wiktionary.org/

தமிழ் விக்கி சோர்ஸ் http://wikisource.org/

தமிழ் விக்கிநூல்கள் http://ta.wikibooks.org/

தமிழ் விக்கிகோட்டு http://ta.wikiquote.org/

தமிழ் லினக்ஸ் விக்கி http://www.thamizhlinux.org/wiki/index.php

வலைப்பதிவர்களுக்கான விக்கி http://www.domesticatedonion.net/wiki/index.php/

தமிழில் கணினி விக்கி http://wiki.thamizhkanini.org/index.php

தமிழ் புத்தக விக்கி http://abbe.optics.utoronto.ca/tamilbooks/doku.php?id=start

இறுதியாக, தமிழ் விக்கிப்பீடியா தமிழில் பல்துறை சார் தகவல்களை உள்வாங்கி ஒரு தகவல் மையமாக பரிமானிக்க வேண்டும் என்பதே பல பயனர்களின் அவா. குறைந்த பட்சம் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும், நூலக வசதியற்ற பல இலங்கை, இந்திய வாழ் தமிழ் மாணவர்களுக்கு தரமான தகவல்களை திரட்டி, வகுத்து ஒரு மையத்தில் பெறக்கூடிவாறு வகை செய்தாலே நன்று. இப் பணியில் உங்கள் அனைவரையும், குறிப்பாக துறைசார் வல்லுனர்களை அழைக்கின்றோம். தமிழ் விக்கிப்பீடியா பற்றி உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும்.

Return to the project page "த.வி. முன்னோடி மயூரநாதன் சந்திப்பு வலைப்பதிவின் பதிவு".