விண்வெளி நோக்காய்வுக்கலம்

விண்வெளி நோக்காய்வுக் கலம் (space observatory) விண்வெளியில் புறவெளி நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ள (தொலைநோக்கி போன்ற) எந்தவொரு கருவியும் ஆகும். இது தொலைதூரத்தில் உள்ள கோள்கள், விண்மீன் பேரடை மற்றும் பிற விண்வெளிப் பொருட்களை ஆய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய முதல் ஆய்வுக்கலம் 1990இல் ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ஆகும். தரையிலிருந்து ஆய்கின்றபோதுள்ள பல பிரச்சினைகள் விண்வெளி ஆய்வுக்கலங்களில் தவிர்க்கப்படுகின்றன; காட்டாக ஒளி மாசும் மின்காந்த அலைகள் வடிக்கட்டப்படுதலும் பிறழ்வடைதலும் தவிர்க்கப்படுகின்றன. இந்த நோக்காய்வுக் கலங்களுக்கும் விண்வெளியில் புவியை நோக்கி நிலைநிறுத்தப்படும் பிற நோக்காய்வுக் கலங்களுக்கும் வேறுபாடுள்ளது; பிந்தையது வேவு பார்த்தலுக்கும் புவி குறித்த தகவல்களை சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

விண்வெளி நோக்காய்வுக் கலம்
பெரும் நோக்காய்வுக் கலங்களில் ஒன்றான ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி.
இணையதளம்nssdc.gsfc.nasa.gov

புவியிலிருந்து நோக்காய்வு செய்வதிலுள்ள சிக்கல்கள் தொகு

புவியிலிருந்து நோக்காய்வு செய்யும்போது புவியின் வளிமண்டலம் கதிர்களை வடிகட்டுகின்றது. எனவே இங்கு பதியப்படும் தரவுகள் வளிமண்டலத்தால் வடிகட்டப்பட்ட மற்றும் உருத்திரிபு செய்யப்பட்ட தரவுகளாகும். ஒளி , வானொலி அலைக்கற்றைகளுக்கு வெளியே உள்ள அலைக்கற்றைகளை பெறுவதற்கு விண்வெளி செல்ல வேண்டும். காட்டாக எக்சு-கதிர் வானியல் ஆய்வு புவிப்பரப்பிலிருந்து இயலாதவொன்று. புவியைச் சுற்றிவரும் எக்சு கதிர் தொலைநோக்கிகள் தற்போது முதன்மை பெற்று வருகின்றன. வளிமண்டலம் அகச்சிவப்புக் கதிர், புற ஊதாக் கதிர்களையும் வடிகட்டி விடுகின்றது.

வரலாறு தொகு

 
விண்வெளி நோக்காய்வகங்களும் அவை வேலை செய்யும் அலைக்கற்றைகளும்.[1]

1946இல் அமெரிக்க வானியற்பியலாளர் லைமேன் இசுப்பிட்சர் தான் விண்வெளியில் தொலைநோக்கிகளை நிலைநிறுத்தும் எண்ணத்தை முன்வைத்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் முதல் செயற்கைக்கோள், இசுப்புட்னிக்கை விண்ணில் செலுத்தியது.[2]

ஓர் பெரிய தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தினால் புவியிலிருந்து காண்பதை விட நன்றாக ஆய்வுகள் நடத்த முடியும் என இசுப்பிட்சர் முன்மொழிந்தார். இவரது முயற்சிகளால் உலகின் முதல் விண்வெளி ஒளிக்கற்றை தொலைநோக்கி, ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, ஏப்ரல் 20, 1990 அன்று விண்ணோடம் டிஸ்கவரி (STS-31) மூலம் விண்ணில் நிறுத்தப்பட்டது.[3][4]

மேற்கோள்கள் தொகு