வியான்டென் சண்டை
வியான்டென் சண்டை (Battle of Vianden) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. வியான்டென் லக்சம்பர்கில் உள்ள ஒரு சிறு நகரம். இச்சண்டை இருகட்டங்களாக நடைபெற்றது.
வியான்டென் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
லக்சம்பர்க் எதிர்ப்புப் படை | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
விக்டர் ஏபென்ஸ் ஜோஸ் கீஃபர் | தெரியவில்லை | ||||||
பலம் | |||||||
30 | 250 | ||||||
இழப்புகள் | |||||||
1 (மாண்டவர்) & 6 (காயமடைந்தவர்)[1] | 23 (மாண்டவர்கள்)[1] |
முதல் கட்டத்தில் லக்சம்பர்க் எதிர்ப்புப்ப் படைகள் ஜெர்மானிய எஸ். எஸ் படை வீரர்களின் தாக்குதலிருந்து வியாண்டென் நகரைப் பாதுகாத்தன. லக்சம்பர்க் நாடு 1940 முதல் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தது. செப்டம்பர் 1944ல் நேச நாட்டுப் படைகளால் மீட்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் லக்சம்பர்க் எதிர்ப்புப் படையினர் ஜெர்மானிய எதிர்ப்புப் படைகளை எதிர்த்துப் போராடி வந்தனர். லக்சம்பர்க் மீட்கப்பட்ட பின்னர் அப்படையினரே லக்சம்பர்கின் காவல் படையினராகச் செயல்பட்டனர். வியாண்டென் நகரத்திலிருந்த பழைய வியாண்டென் கோட்டை ஊர் ஆற்றங்கரையில் ஒரு முக்கிய கண்காணிப்பு நிலையாக விளங்கியது. அதனை மீண்டும் கைப்பற்ற நவம்பர் 15, 1944ல் ஜெர்மானிய எஸ். எஸ் படைகள் முயன்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இச்சண்டையில் லக்சம்பர்க் காவல் படைகள் ஜெர்மானியத் தாக்குதல்களைச் சமாளித்து முறியடித்தன.
ஒரு மாதம் கழித்து இரண்டாம் கட்டச் சண்டை நடைபெற்றது. டிசம்பர் 16ம் தேதி பல்ஜ் தாக்குதல் தொடங்கிய போது ஜெர்மானியப் படைகள் பெரும் எண்ணிக்கையில் மீண்டும் வியான்டெனைத் தாக்கின. அவர்களைச் சமாளிக்க முடியாமல் லக்சம்பர்க் படைகள் பின்வாங்கி விட்டன. பல்ஜ் தாக்குதல் முறியடிக்கப்பட்டபின் வியான்டென் ஜெர்மானியர் வசமிருந்து மீட்கப்பட்டது.