விரல் (கணிதம்)

விரல் (கணிதம்) அல்லது விரற்கடை (ஆங்கிலம்: Finger (unit)) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது

எண் 6 காட்டும் அளவு ஒரு விரற்கடை.

ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.[1][2][3]

இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

தமிழ் இலக்கியங்களில் விரற்கடையின் பயன்பாடு காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

"கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்

நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்

கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே."

-திருமந்திரம் பாடல் எண்: 557.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Noah Webster; John Walker (1830). American dictionary of the English language. digit: Converse. p. 247. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
  2. Ronald Edward Zupko (1985). A dictionary of weights and measures for the British Isles: the Middle Ages to the twentieth century. American Philosophical Society. pp. 109–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87169-168-2.
  3. The American Journal of the Medical Sciences. Charles B. Slack. 1839. p. 363. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்_(கணிதம்)&oldid=4102982" இலிருந்து மீள்விக்கப்பட்டது