விழிப்புணர்வற்ற மனக் கோட்பாடு

விழிப்புணர்வற்ற மனக் கோட்பாடு (Psycho Analytic Theory) என்பது, சிக்மண்டு ஃபிராய்டால் 19 ஆம் நூற்றாண்டின் பிறபகுதியில் வெளியிடப்பட்ட ஒரு கோட்பாடாகும். இந்த கோட்பாட்டை ஆங்கிலத்தில் PSYCHO ANALYTIC THEORY என்கின்றனர். வரலாற்றின் போக்கை மாற்றிய இருபது சித்தாந்தங்களில் இதுவும் ஒன்றாய் கருதப்படுகிறது.

சிக்மண்டு ஃபிராய்டு

ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வு சார்ந்த சித்தாந்தத்தின் படி, நமது மனம் விழிப்புணர்வு ரீதியாக மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதன் அடிப்படையில், மனதை நீரில் மிதக்கும் பனிப்பாறைக்கு ஒப்பிடலாம். நீர்மட்டத்திற்கு மேல் தெளிவாகத் தோன்றும் பகுதி; இது நம் மனதின் 'விழிப்பு நிலை' (CONSCIOUS MIND) அடுக்கு எனலாம். நீர்மட்டத்திற்கு கீழ் மறைந்து இருப்பினும் ஓரளவு புலப்படும் பனிப்பாறைப் பகுதி; இது மனதின் 'ஆழ் நிலை' (PRE CONSCIOUS STATE) அடுக்கு எனலாம். நீர்மட்டத்தின் வெகு ஆழத்தில், முற்றிலும் புலப்படாத அடிப்பகுதி; இதை மனதின் 'விழிப்பு உணர்வற்ற நிலை' (UNCONSCIOUS STATE) அடுக்கு என்று கூறலாம்.

முழுப் புரிதலுடனான நமது அனைத்து விதமான சிந்தனைகளும், பேச்சு மற்றும் செயல்களுமே மனதின் 'விழிப்பு நிலை' அடுக்காகும். நமது இயல்பான நினைவாற்றல் (ORDINARY MEMORY), மனதின் 'ஆழ் நிலை' அடுக்காகும்; அது எல்லா நேரத்திலும் முழு விழிப்புணர்வோடு இல்லாவிட்டாலும், தேவைப்படும்போது, சிறு முயற்சியில், 'தெளிவாகப் புலப்படா' (HAZY) நிலையிலிருந்து அவற்றை முழுப் புரிதல் நிலைக்கு (CONSCIOUS) நம்மால் கொணர முடிகிறது.

நம்முள் ஆழப் புதைந்திருக்கும், இருப்பினும் பெரும்பாலும் அவற்றின் இருப்பைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாத, ஆனால் நமது இயல்பு, நம் உணர்வுகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகள், கவலைகள், அச்சங்கள், நம்பிக்கைகள், நினைவுகள் போன்றவற்றின் தேக்கமே 'விழிப்புணர்வற்ற' மூன்றாம் மன அடுக்கு. இவற்றைப் பெரும்பாலும் நம் பெருமைக்குரிய உடைமைகளாக நம் மனமே ஏற்பதில்லை; ஆதலால் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதும் இல்லை; உண்மையில் அவற்றை மூடிமறைக்கவே நாம் முயற்சிக்கின்றோம். இருப்பினும், அதையும் மீறி, அவை நமது இயல்பான உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் சக்தி படைத்தவை.

உளப்பகுப்பாய்வுக்கு (PSYCHOANALYSIS) அடித்தளம் அமைத்தவராய் கருதப்படும் ஃபிராய்டு, மனிதனின் நடத்தை மற்றும் சிந்தனைகளை 'விழிப்புணர்வற்ற மன அடுக்கு' எவ்விதம் ஆளுமை செய்கிறது என்று பகுப்பாய்வு செய்தார். "எந்தவொரு மனிதனையும் ஒரு குறிப்பிட்ட சூழலில் சுதந்திரமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அனுமதித்தால், தன்னைப் பற்றிய மேலும் அதிக ஆச்சர்யமான விழிப்புணர்வை அவன் பெறுவான்" என்பது அவரது ஆய்வுகளின் முடிவு.

"அவரவருக்குள் அவரவரே அறியாது, ஒரு 'நிஜமனிதன்' ஒளிந்து வாழ்கிறான். ஒவ்வொரு தனிமனிதனின் தனித்துவமும், அவனே அறியாது, முகம் மறைத்த அம்மனிதனின் ஆளுமைக்குட்பட்டது" எனும் இக்கோட்பாடே, குற்றவியல் முதலான பல துறைகளில் உண்மையறிதல் சோதனைகளின் அடிப்படை.

ஃபிராய்டு காலத்திற்குப் பிற்காலத்தவராகிய நாம், ஒவ்வொரு மனிதனையும் இயக்குவதில் அவனது உணர்ச்சி வேகத்திற்குப் பெரும் பங்குள்ளது என்பதை மிக உறுதியாக நம்புவோம்.

[1]

  1. மனோரமா இயர்புக் 2016 தொகுத்தவர்: மாம்மன் மாத்யூ (பக்கம் எண்: 332)