வி. மி. ஞானப்பிரகாசம்

வண. வி. மி.ஞானப்பிரகாசம் அடிகளார் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், கத்தோலிக்கத் துறவியும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஞானப்பிரகாசம் திருச்சிராப்பள்ளி வளனார் மேனிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் நிறைவேற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. வரதராசனாரின் வழிகாட்டுதலில் வீரமாமுனிவர் பற்றி ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். கத்தோலிக்கத் துறவிக்குரிய குருத்துவக் கல்வியைச் செண்பகனூரிலும், புனேயிலும் நிறைவு செய்தார்.

1957 முதல் 1973 வரை, சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாகப் பணியாற்றினார். பின், 1973 முதல் 1974 வரையும், பின், 1977 முதல் 1985 வரையும், பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றினார். 1974 முதல் 1977 வரையில் அருளானந்தர் கல்லூரியில் பணியாற்றியுள்ளார்.

செண்பகனூர் ஆவணக் காப்பக ஒருங்கிணைப்பாளராக, 1985 முதல் 1988 வரை பொறுப்பேற்றுப் பணி புரிந்துள்ளார். 1988-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கிறித்துவ இயல்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கோலாலம்பூரிலும், பாரிசிலும் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, கட்டுரை வழங்கிய இவர், வெளிநாட்டு நூலகங்களில் உள்ள பழம் நூல்களைப் பார்வையிட, பிரான்சு, இங்கிலாந்து, உரோம் முதலிய நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

தவத்திரு தனிநாயகம் அடிகளார், தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வந்த முத்திங்கள் இதழ், ஒரு சமயத்தில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் தோன்றியது. அப்போது இலயோலாவில் பணியாற்றிய ஞானப்பிரகாச அடிகளார், பேராசிரியர் க. ப. அறவாணன் போன்றோர் துணையுடன், அந்த இதழ் தொடர்ந்து வெளிவரப் பெரிதும் துணை நின்றார். கருத்தரங்குகள் நிகழ்ந்தன. இதழ்கள் சிலவும் வெளிவந்து, சில காலத்திற்குப்பின் நின்றும் போயின. இந்தக் காலகட்டங்களில், Tamil Culture Academy உறுப்பினராகவும், பின் செயலராகவும் ஞானப்பிரகாச அடிகளார் தொண்டாற்றினார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • திருக்குறள் - வீரமாமுனிவர் (இலத்தீன்) மொழிபெயர்ப்பு (2004)
  • தமிழில் அறிவியல் கருத்துக்கள் (க. ப. அறவாணனுடன் இணைந்து, 1975)
  • நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள் (க. ப. அறவாணனுடன் இணைந்து, 1974)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._மி._ஞானப்பிரகாசம்&oldid=2761569" இலிருந்து மீள்விக்கப்பட்டது