வீங்கிய செல்கள்
வீங்கிய செல்கள் (Bulliform cells) என்பவை பெரிய, குமிழ் வடிவ புறத்தோல் செல்களாகும். இவை ஒரு வித்திலை தாவர இலையின் மேற்பரப்பில் ஒரு குழுவாக காணப்படுகின்றன. இவை பொதுவாக இலையின் மைய நரம்பின் அருகில் காணப்படுகின்றன. இவை அளவில் பெரிய, நிறமற்ற வெற்றுசெல்கள் ஆகும்.
செயல்பாடு
தொகுபோதுமான அளவு நீர் கிடைக்கும்போது இச்செல்கள் நீரை உறிஞ்சி விரைப்படைகின்றன. விரைப்படைவதால், இலை நீண்டு விரிவடைகின்றன. நீர் பற்றாக்குறையின்போது இச்செல்கள் நீரை இழந்து தளர்வடைகின்றன. தளர்வடையும் போது இலைகள் வெளிக்காட்டாமல் சுருண்டு விடுகின்றன. இதனால் நீரிழப்பு குறைக்கப்படுகிறது. இவ்வாறு வீங்கிய செல்கள் சாதகமற்ற சூழலில் நீரிழப்பை தடுக்க உதவுகின்றன. வறட்சி காலங்களில் புல் தாவரங்களில் நுண் குமிழ்களின் மூலம் ஏற்படும் நீரிழப்பு, வீங்கிய செல்களை தூண்டி இலையை மேற்புறமாக மடித்து மூடிக்கொள்ளச் செய்கிறது. சாதகமான சூழலில் வீங்கிய செல்கள் அளவில் பெரிதாகி இலைகளை மீண்டும் திறக்க உதவுகின்றன. இலைகள் மடிந்து கொள்வதால் சூரிய ஒளி படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவே நீராவிப்போக்கு குறைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பெரும்பாலும் ஒருவித்திலைத் தாவரங்களில் குறிப்பாக புல் தாவரங்களில் காணப்படுகிறது. வறண்ட மற்றும் ஈரமான சுழலில் இலைகளை மடிக்கவும், சுருட்டவும் வீங்கிய செல்கள் உதவுகின்றன. [1]
மேற்கோள்
தொகு- ↑ Moore, R. et al. (1998) Botany. 2nd Ed. WCB/McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-697-28623-1