வீரநிலைக் காலப்பாடல்கள்

வீரநிலைக் காலப்பாடல்கள் என்பது வீரம் என்ற பண்பைப் போற்றிய நிலையில் பாடப்படும் பாடல்களாகும். இப்பண்புகள் கொண்ட இலக்கியங்கள் உலக அளவில் எண்ணிலடங்காதவை உள்ளன. தமிழில் உள்ள சங்க இலக்கியங்களின் சாரம் காதலும் வீரமுமே என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். சங்கப் பாடல்களின் பாடுபொருள்கள் மூன்று நிலைகளில் சுட்டப்படுகிறது. அவை அகம்,புறம், அகப்புறம் சார்ந்தனவாகும். புறம் சார்ந்து பாடுகையில் வீரம் என்ற பண்பும் இடம் பெறுகின்றது. எனவே, வீரம் சார்ந்த கருத்துகள் மேலோங்கி இருந்த காலத்தில் பாடிய பாடல்கள் வீரநிலைக்காலப் பாடல்கள் என்று அறியப்படுகிறது.

பண்புகள் தொகு

பண்டைய உலக இலக்கியங்கள் பலவற்றை ஆராய்ந்த சி.எம்.பெளரா, வீரத்தின் பின்னணியில் போற்றப்பட்ட உயர் பண்புகளைக் கொண்ட பாடல்களின் பண்புகளைப் பின்வருமாறு கூறியுள்ளார்:

  • வாய்மொழிப் பாடற்பண்பு
  • போர்க்களத்தில் உயிர் துறத்தலே உயரியது எனக் கருதும் பண்பு
  • விழுப்புண்படாத நாளெல்லாம் வாழ்நாளல்ல எனக் கருதும் பண்பு
  • கவிதைகளில் செயல்முனைவுப் பண்பு (Action)மேலோங்கியிருத்தல்
  • நட்பின் திறம் போற்றப்படல்
  • பாணர்களைப் போற்றுதல்
  • விருந்தோம்பல்
  • உணர்ச்சிக் கவிதைகளாக இருத்தல்
  • வஞ்சினம் உரைத்தல்


போர்க்களத்தில் உயிர் துறத்தல் தொகு

வீரநிலைக் காலத்தில் போரிட்டு மடிதல் என்பது உயர்வாக கருதப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் போரில் இறந்த வீரர்களே துறக்க உலகம் சென்றடைவர் என்ற கருத்தும் போற்றப்பட்டது. இதனைப் புறநானூற்று பாடல் 'அரிது செல் உலகில் சென்றவன்' (260:21) என எடுத்தியம்புகிறது. அதேபோல போரில் விழுப்புண்பட்டு வீழ்ந்த மறவர்களை வரவேற்பதற்காக மணியும் முரசும் ஆர்ப்பரித்து வரவேற்பார்கள் என்பதை,

        "திண்தேர் இரவலர்க்கு இத்த தண்தார்
         அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி
         வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
         போர்ப்புறு முரசம் கறங்க 
         ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே'

என்ற புறநானூற்றுப்பாடல் (பா.எண்.241) விவரிக்கிறது.

நட்பின் திறம் போற்றப்படல் தொகு

வீரநிலைக் காலத்தில் மறம் போற்றப்பட்ட அதே நிலையில் நட்புத் திறமும் போற்றப்பட்டுள்ளது. பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் , பாரி-கபிலர், அதியமான்-ஒளவையார் ஆகியோரது நட்புத்திறத்தைக் கொண்டும் வீரம் வெளிப்படுத்தப்படுவதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

வஞ்சினம் உரைத்தல் தொகு

வஞ்சினம் உரைத்தல் வீரத்தின் உயர்பண்பாகப் போற்றப்படுகிறது. இது அஞ்சாமையின் அடையாளமாக வீரநிலைக் காலப் பாடல்களில் காணப்படுகிறது. தம் வீரத்தைப் பகைவர்க்கு உணர்த்த வேண்டிய சூழலில் வஞ்சினம் எழுகிறது.

கையறுநிலை தொகு

வீரநிலைக்காலப் பாடல்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் எழுகிறது. ஒருவரின் இழப்பைச் சுட்டும் நிலையில் அமையும். கையறு நிலைப்பாடல்களில் அவலச் சுவையை மிகுவித்துப் பாடினாலும், இறந்தோரின் வீரம் முதன்மையிடம் பெறுகிறது. இறந்தவரின் பெருமை, சிறப்பு, போர்த்திறம் முதலானவற்றில் வீரம் வெளிப்படுவதை உணர முடிகிறது.

சான்றுகள் தொகு

1. கி. இராசா. ஒப்பிலக்கியம் - பார்த்திபன் பதிப்பகம். திருச்சி, பதிப்பாண்டு - 2006.