வெப்ப இறைப்பி
வெப்ப இறைப்பி (Heat pump) என்பது ஒரு வெப்பவழங்கி அல்லது வெப்பமூலத்தில் இருந்து 'வெப்ப ஏற்பி' என்னும் இன்னொரு இடத்திற்கு வெப்பத்தை மாற்ற உதவும் ஒரு கருவியாகும். வெப்ப இறைப்பியானது, இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் நிகழும் வெப்ப மாற்றத்திற்கு மாறாக அதன் எதிர்த்திசையில் வெப்பத்தை மாற்றவல்லது. காட்டாக, வெப்பம் குறைவான இடத்தில் இருந்து உறிஞ்சி அதைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு வெப்பத்தை மாற்றும். இவ்வாறாக வெப்பம் குறைவான ஒரு மூலத்தில் இருந்து வெப்பம் மிகுந்த ஒரு ஏற்பிக்கு வெப்பத்தை மாற்ற, வெளியே இருந்து சிறு மின்னாற்றல் திறனை வெப்ப இறைப்பிகள் பயன்கொள்ளும்.