வேக வரம்பு (speed limit) விதித்தல், சாலைகளில் ஓடும் வண்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல நாடுகளிலும் பயன்படும் ஒரு வழிமுறையாகும். வேக வரம்பு, அதியுயர் வேகத்தை அல்லது அதி குறைந்த வேகத்தை அல்லது இரண்டையும் குறிக்கக்கூடும். அதிகமான நாடுகளின் முக்கியமான சாலைகள் அனைத்துக்கும் வேக வரம்பு உண்டு. ஆனால், சில நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வேகத்துக்கு வரம்பு விதிக்கப்படாமல் இருப்பதும் உண்டு. பெரிய சாலைகளில் சிறிய வண்டிகளுக்கு ஒரு வேக வரம்பும், பார வண்டிகளுக்கு அதிலும் குறைவான வேக வரம்பும் விதிக்கப்படுவது உண்டு. சாலைகளுக்கான வேக வரம்புகளை, சாலைகளில் போக்குவரத்துக் குறிப்பலகைகளை இடையிடையே வைப்பதன் மூலம் மக்களுக்கு அறிவிக்கின்றனர். பொதுவாக வேக வரம்புகள், சட்டவாக்க அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு, காவல் துறையினரால் செயற்படுத்தப்படுகின்றன.

ஆசுத்திரேலியாவில் பயன்படும் 60 கிமீ/மணி குறிப்பலகை ஒன்று.
ஐக்கிய அமெரிக்காவில் 50 மைல்/மணி வேகக் கட்டுப்பாட்டை அறிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குறிப்பலகை.

உலகின் முதலாவது வேகக் கட்டுப்பாட்டை 1861 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தினர். அது ஒரு மணிக்கு 10 மைல்கள் ஆகும். 2005 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் விதிக்கப்பட்ட அதியுயர் வேக வரம்பு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அமீரகமான அபுதாபியில் செயல்படுத்தப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டில் 140 கிமீ/மணியாக மாற்றப்பட்டுள்ளது. சில சாலைகளுக்கு வேக வரம்பு விதிக்காத நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக செருமனியைக் குறிப்பிடலாம். இங்கே போக்குவரத்து நெரிசல் குறைவான நெடுஞ்சாலைகளில் உயர் வேக வரம்பு கிடையாது.

வேக வரம்பு, சாலைப் போக்குவரத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காகவே பயன்படுகின்றது. இவ்வாறு செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதும் ஆகும். "சாலைப் போக்குவரத்துக் காயங்களைத் தவிர்ப்பது தொடர்பான உலக அறிக்கை" (World report on road traffic injury prevention) என்று தலைப்பிட்ட உலக நல நிறுவனத்தின் அறிக்கை, சாலைச் சேதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக வேகக் கட்டுப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும், சாலை விபத்துக்களில் 1.2 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள் காயங்களுக்கு உள்ளானதாகவும் உலக நல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தினால் ஏற்படக்கூடிய சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும் வேக வரம்பு உதவுகின்றது. வேகமாகச் செல்லும் வண்டிகளினால் இரைச்சல், அதிர்வு, கேடு விளைவிக்கக்கூடிய வாயு வெளியேற்றம் என்பன கூடுதலாகக் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக_வரம்பு&oldid=2943534" இலிருந்து மீள்விக்கப்பட்டது