வேடிக்கை விளையாட்டு

ஆங்காங்கே முளைத்து வளரும் புல் பூண்டுகளில் ஒளிந்துள்ள சில மர்மங்கள்ளைக் கண்டறிந்து விளையாடி மகிழ்வது வேடிக்கை விளையாட்டு.

கண்டறிபவை தொகு

நெய்த்தக்காளி
இதன் காய்களைப் பறித்து தன் நெற்றியில் குட்டுவர். அது 'சொடக்' என்று வெடிக்கும்.
அம்மாம் பச்சரிசி நெற்று
இதனை வாய் எச்சிலில் ஈரமாக்குவர். அது 'சொடக்' என்று வெடிக்கும்.
முறுக்கம்புல் (பன்னிமுறைச்சான் புல்)
இந்தப் புல்லின் நுனியில் பூத்துக் காய்திருக்கும் கொத்தைப் பறித்து வாய் எச்சிலால் ஈரமாக்குவர். அது தன் முறுக்கை உடைத்துக்கொண்டு தானே இரண்டு மூன்று சுற்றுகள் சுற்றும்.
கருவேலங்காய் நெற்று
இந்த நெற்றைப் பொறுக்கி இரண்டிரண்டு விதையுள்ள துண்டுகளாக நறுக்கி, அவற்றின் நடுப்பகுதியில் கட்டிச் சரமாக்கி, கணுக்காலில் கட்டிக்கொண்டு 'சல் சல்' என்னும் ஒலி வருமாறு நடப்பர்.
வாகை நெற்று
வாகை நெற்றுகளைப் பொறுக்கி ஊசியால் நூலில் கோத்து, இடுப்பிலும், கழுத்திலும் அணிந்துகொண்டு அசைந்தாடி நடப்பர். அப்போது அது 'சல சல' என்று ஒலிக்கும்.
அழிஞ்சில் கொட்டை
அழிஞ்சில் பழத்தைத் தின்ற பின்னர் அதன் நடுவில் உள்ள அழிஞ்சில்-கொட்டையை வழுக்கு முனையில் துளை உண்டாகும்படி தேய்த்து வாயில் வைத்துப் புல்லாங்குழல் துளையில் ஊதுவது போல ஊதியும், பண்ணிசை கூட்டியும் மகிழ்வர்.
ஈந்திலை முள்
ஈந்திலை வேப்பிலை அளவு இருக்கும். இலையின் நுனியில் கூர்மையான முள் இருக்கும். அவற்றில் பத்திருபது இலைகளைப் பறித்து மார்பு, வயிறு, கை, கால் போன்ற இடங்களில் அலகு போல் குத்தித் தொங்கும்படி செய்து பிறருக்குக் காட்டி மகிழ்வர்.
வாழைமட்டை சுடக்கான்
வாழைமட்டையை மூவிரல் அளவு அகலமுள்ளதாகச் சீவி எடுத்து, உட்புறமாக இரண்டாக மடித்து, ஒவ்வொன்றையும் வெளிப்புறமாக இரண்டாக மடித்து, நடுவில் உட்புறமாக மடிந்துள்ள பகுதியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் வெளிப்புறம் மடிந்து தொங்கும் பகுதியை விரைவாக உருவி மேலே இணையச் செய்தால் 'டப்' என்னும் ஒலி தோன்றும். கேட்டு மகிழ்வர்.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
  • கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) பொழுதுபோக்கு விளையாட்டுகள், சென்னை அருணோதயம் வெளியீடு, 1959
  • மு.வை அரவிந்தன், தமிழக நாட்டுப்பாடல்கள், சென்னை பாரிநிலையம் வெளியீடு, 1977
  • டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடிக்கை_விளையாட்டு&oldid=1020891" இலிருந்து மீள்விக்கப்பட்டது