வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு இந்து சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் என்பனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே.

வேதாந்தம் குறித்து சுவாமி விவேகானந்தர்

தொகு

வேதாந்தம் என்ற சொல்லுக்கு ’வேதங்களின் முடிவு’ என்று பொருள். வேதாந்தம் சுருதி என்ற தனிப்பெயராலும் சுட்டப்படுகின்றது. உலகின் மிகப்புராதனமான மதம் வேதாந்தம்.[1]

தனிப் பண்புகள்

தொகு

வேதாந்தத் தத்துவத்தின் தனிப்பண்பு, இது மனிதச் சார்பற்றது என்பது. எந்த ஒரு தனிமனிதனோ, மகானோ இதனை நிறுவவில்லை. மேலும் எந்த தனி மனிதனை மையமாக வைத்தும் பின்னப்படவில்லை. எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. தனிநபர் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேதாந்தம் மிகவும் தயங்குகிறது.[1]

அடிப்படை உண்மை

தொகு

வேதாந்தம் கூறும் அடிப்படை உண்மை மனிதன் தெய்வீகமானவன் என்பது.[1]

வேதாந்தத்தின் தனிக்கருத்து

தொகு

வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன.[1]

ஜாதிமுறை

தொகு

ஜாதிமுறை வேதாந்தத்திற்கு முரணான ஒன்று. ஜாதிமுறை என்பது சமுதாயப் பழக்கம்.[1]

பாவம்

தொகு

வேதாந்தம் ஒப்புக்கொள்ளும் ஒரே பாவம் , தன்னையோ, பிறரையோ பாவி,பலவீனர் என்று நினைப்பதே. தவறுகள் கருத்து உண்டு. ஆனால் பாவம் என்ற கருத்து இல்லை.[1][2]

நம்பிக்கை

தொகு

ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிய-நான் என்பது சார்ந்தது அல்ல. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 எழுந்திரு! விழித்திரு!; பகுதி 4; பக்கம் 3-98 (சொற்பொழிவுகள்)
  2. 2.0 2.1 எழுந்திரு! விழித்திரு!; பகுதி 4; பக்கம் 219-240 (சொற்பொழிவுகள்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாந்தம்&oldid=3913683" இலிருந்து மீள்விக்கப்பட்டது