வேமண்ணா
வேமண்ணா (இயற்பெயர் வி. சி. வேலாயுதம், இறப்பு 2016 சூன் 8 ) என்பவர் ஈ.வே.ரா.வின் நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்த்து, கன்னட மக்களிடம் பெரியார் சிந்தனைகளை கொண்டு சென்ற எழுத்தாளர் ஆவார்.
வாழ்க்கை
தொகுவேமண்ணாவின் இயற்பெயர் வி. சி. வேலாயுதம் இவர் தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் என்ற ஊரில் பிறந்த தமிழர். 1946இல் வேலை தேடி பெங்களூருக்கு சென்றார். அங்குள்ள ராஜா நூல் ஆலையில் பணியாற்றிய இவருக்கு பெரியாரின் சுயமரியாதை கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 1960களில் பெரியார் பெங்களூர், கோலார் தங்கவயல் ஆகிய பகுதிகளுக்கு பொதுக் கூட்டங்களுக்கு சென்றபோது, வேலாயுதம், பெரியாருடன் உரையாடி, நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கன்னட மொழியைப் படித்தால் பகுத்தறிவு கருத்துகளை கன்னட மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுமே என்று பெரியார் கூறியதை ஏற்று, பெங்களூர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முறைப்படி கன்னடம் பயின்றார். பெங்களூரில் தன் தோழர்களுடன் சிந்தகர சாவடி என்ற பெயரில் சிந்தனையாளர் கழகத்தைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் சிந்தனைகளைத் தலைப்புவாரியாக பொருள்வாரியாகக் கன்னடத்தில் மொழிபெயர்பதில் முனைப்பாக ஈடுபட்டு, கன்னடத்தில் பெரியாரின் வாழ்க்கைவரலாற்று நூலையும், பெரியாரின் 30க்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்தும் பணியாற்றினார். கன்னட மொழியில் வேலாயும் மொழிபெயர்ப்பு நூல்களைப் பெற்று படித்த கன்னட பேரறிஞர் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கவிஞர் குவெம்பு பெரியாரை போற்றினார். அவரை அடுத்து, மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தராக வந்த ஐவேரா கவுடவும் கன்னடத்தில் பெரியாரை படித்தார். அதன் விளைவாக 1973 ஆண்டு ஈவேராவை திருச்சியில் கண்டு பேசி அவரே கன்னடத்தில் ஈவேராபற்றி ஒரு நூலை எழுதினார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா பல்கலைக் கழகத்தார் இவரின் பெரியார் சிந்தனைகள் கன்னட மொழிபெயர்ப்பு நூலை பெருந்தொகுதியாக வெளியிட்டனர்.[1] இவர் எழுதிய பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஹம்பி பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
தொகுஇவர் கன்னட மொழிக்கும் பெரியாரியலுக்கும் ஆற்றிய பணிகளை பாராட்டி, ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளை பல அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ வே. ஆனைமுத்து (சூலை 2016). "தந்தை பெரியாரின் சிந்தனைகளை கன்னட மொழியில் மொழிபெயர்த்த பேரறிஞர் வி.சி.வேலாயுதம் (எ) வேமன்னா மறைந்தாரே". சிந்தனையாளன்: 5.
- ↑ "பெரியார் நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்த வேமண்ணா முடிவெய்தினார்". கீற்று. 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.