ஸ்காட் ஹாமில்டன்

ஸ்காட் ஹாமில்டன் (Scott Scovell Hamilton, ஆகஸ்ட் 28, 1958): ஓர் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர். 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றவர்; உடல்வளர்ச்சிக் குறைபாடு என்ற நோயால் பாதிக்கப்பட்டும் கூட 1981 -1984 வரை நான்கு முறை உலக சாதனை நிகழ்த்தி அமெரிக்க சாதனையாளர் பட்டத்தையும் மேலும் நான்கு முறை (1981 -1984) உலக சாதனையாளர் பட்டத்தை வென்றவர்.

ஸ்காட் ஹாமில்டன்
வென்ற பதக்கங்கள்
Men's figure skating
நாடு  ஐக்கிய அமெரிக்கா
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 Sarajevo Singles

இளமை

தொகு

1958 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி அமெரிக்காவில் ஓஹையோவில் பிறந்தார் ஸ்காட் ஹமில்டன்.[1] அவர் பிறந்து ஆறே வாரங்களில் எர்னஸ்ட் ஹாமில்டன், டார்த்தி ஹலில்டன் என்ற தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர்.[2] இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.[3] இரண்டு வயதானபோது ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்காட். அந்த நோய் உடல் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் நோய். அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவமனைதான் ஹாமில்டனின் இரண்டாவது இல்லமாக இருந்தது.பலவிதமான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஹாமில்டனுக்கு இருப்பது சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்று தவறுதலாக கணித்த மருத்துவர்கள் ஹாமில்டன் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்வார் என்றும் கெடு கொடுத்தனர். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன்தான் அது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோய் (Shwachman-Diamond syndrome) என்பது தெரிந்தது. சிறப்பான உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம்பெற தொடங்கினார் ஸ்காட்.[1][4][5]

ஹமில்டனின் சகோதரி சூசன் பனிச்சறுக்குப் போட்டியில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த ஹாமில்டனுக்கு தானும் சறுக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஒருமுறை சறுக்கிப்பார்த்த ஹாமில்டனுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்திலிருந்தே தைரியமாகவும் மிகுந்த வேகத்துடனும் சறுக்கத் தொடங்கினார் ஹாமில்டன். குளிர்ச்சியான சூழ்நிலையில் அவர் செய்த கடுமையான சறுக்குப் பயிற்சியால் அவரது உடல் அதிசய வேகத்தில் குணமடையத் தொடங்கியது. ஹமில்டன் மீண்டும் வளரத் தொடங்கினார். இருப்பினும் ஒரே ஒத்த வயதுடைய பையன்களுடன் ஒப்பிடும்போது அவரது உயரம் குறைவாகவே இருந்தது. தனது 13 ஆவது வயதில் ஹமில்டன் தேசிய உள்ளரங்கு போட்டியில் கலந்துகொள்வதற்காக பயிற்சி செய்யத் தொடங்கினார். அந்தப் பயிற்சிக்கு செலவு அதிகம் என்பதால் அதிக பணம் சம்பாதிக்க தனக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவரது தாயார் சிரமப்பட்டு கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினார்.

பயிற்சியும் முயற்சியும்

தொகு

தன் முன்னேற்றத்திற்காக உழைத்த அந்த தாய் புற்றுநோயால் மரணமடைந்தபோது கலங்கிய ஹமில்டன், பனிச்சறுக்குப் போட்டியில் உலக விருதை வெல்வதே தன் தாய் தன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தான் செய்யக்கூடிய கைமாறு என்று உறுதி பூண்டார். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு தன் உடலை வருத்தி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். பனிச்சறுக்குப் போட்டிகளில் நடுவர்களாக இருந்த சிலர் ஹமில்டனைப் பார்த்து உலக அரங்கில் சறுக்குவதற்குரிய உயரமும், கம்பீரமும் அவருக்குக் கிடையாது என்றும் எனவே அந்த விளையாட்டை மறந்துவிடுமாறும் கூறினர். ஏற்கனவே வளர்ச்சிக் கோளாறைக் கடுமையாகப் போராடி வென்ற ஸ்காட் நடுவர்களின் கூற்றை பொய்யாக்கிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இன்னும் கடுமையாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதற்கான உழைப்பு வீண்போகவில்லை.

சாதனைகள்

தொகு

1980 ஆம் ஆண்டு ஸ்காட்டிற்கு 22 வயதானபோது தேசிய அளவிலான உள்ளரங்கு பனிச்சறுக்குப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவிலும் ஓர் இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு லேக் பிளஸிடில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவது இடத்தை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பனிச்சறுக்குபோட்டியில் முதல் இடத்தை வென்ற ஹாமில்டன் தான் கனவு கண்டதைப் போலவே உலக பனிச்சறுக்குப் போட்டியிலும் முதல் இடத்தை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெற்ற அனைத்து தேசிய மற்றும் உலகப் போட்டிகளிலும் ஹாமில்டனுக்கே முதலிடம். தொடர்ந்து எட்டு விருதுகளை வென்ற அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.

Event 1976–77 1977–78 1978–79 1979–80 1980–81 1981–82 1982–83 1983–84
Winter Olympics 5th 1st
World Championships 11th 5th 1st 1st 1st 1st
U.S. Championships 3rd 4th 3rd 1st 1st 1st 1st
Skate America 1st 1st 1st
Skate Canada International 1st
NHK Trophy 4th 1st
Nebelhorn Trophy 2nd

'ஹாமில்டனின் அமெரிக்கச் சுற்றுலா

தொகு
 
ஹாமில்டன் அமெரிக்கச் சுற்றுலாவில் நடத்திய ஸ்டார்ஸ் ஆன் ஐஸ் இறுதி நிகழ்ச்சி

தனது பனிச்சறுக்குச் சாதனைகளின் உச்சகட்டமாக 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றார் ஸ்காட் ஹாமில்டன். உள்ளரங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் பெண்களே சிறக்க முடியும் என்றும், அவர்களாலேயே ரசிகர்களைக் கவர முடியும் என்று கூறி ஹாமில்டனைத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயங்கின. இரண்டு ஆண்டுகள் ஐஸ்கபேப்ஸ் என்ற பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றார் ஸ்காட். அதில் தலைமை மாற்றம் ஏற்பட்டபோது ஸ்காட் வெளியேற்றப்பட்டார். ஆண் பனிச்சறுக்கு வீரர்களுக்கும் குறிப்பாக தனக்கும் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் வெறுப்படைந்த ஹாமில்டன், ஹாமில்டனின் அமெரிக்கச் சுற்றுலா (The Scott Hamilton America Tour) என்ற தனது சொந்த பனிச்சறுக்கு சாகசங்களை நிகழ்த்தி அமெரிக்கா முழுவதும் அதனைக் கொண்டு சென்றார். மிகவும் புகழடைந்த அந்த நிகழ்ச்சிதான் பின்னர் உலக புகழ்பெற்ற 'ஸ்டார்ஸ் ஆன் ஐஸ் (Stars on Ice)' என்ற நிகழ்ச்சியாக மாறியது.

உள்ளரங்கு பனிச்சறுக்கில் ஹாமில்டன் கொண்டு வந்த நளினமும், கம்பீரமும் பல புதிய பார்வையாளர்களை அந்த விளையாட்டிற்கு ஈர்த்தது. 12 ஆண்டுகள் அவரை ஒதுக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்னர் அவரைத் தேடி வந்தன. 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டிலும் உலக 'பனிச்சறுக்கு சாதனையாளர்' விருதை வென்ற ஸ்காட்டின் பெயர் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒலிம்பிக் சாதனையாளர்களில் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1997 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி ஹாமில்டனுக்கு ஆண்விரையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போராட்டத்திற்குப் பழக்கப்பட்டுப்போன ஸ்காட் தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு (The Only Disability in Life is a Bad Attitude )என்று கூறி அந்த புற்றுநோயையும் போராடி வென்றார்.

சேவைகள்

தொகு

வெற்றிகரமான அறுவை சிகிச்சை மற்றும் மூன்றுமாத சிகிச்சைக்குப் பிறகு ஹாமில்டன் மீண்டும் பனிச்சறுக்கில் சாகசம் காட்டத் தொடங்கினார். அதோடு நின்றுவிடவில்லை 'ஸ்காட் ஹாமில்டன் கேர்ஸ் (Scott Hamilton CARES)' என்ற புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி அந்த நோய்க்குத் தீர்வு காணும் எல்லா முயற்சிகளுக்கும் உதவி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் அந்த அறநிதி அமைப்பு புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், ஆராய்ச்சிக்காவும் சுமார் பத்து மில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர் நிதி திரட்டியிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு 'லேண்டிங் இட் (Landing It)' என்ற தனது தன்வரலாற்று நூலை எழுதி வெளியிட்ட ஸ்காட், 2001 ஆம் ஆண்டில் நிபுணத்துவ பனிச்சறுக்கிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் மேக் எ விஷ் ஃபவுண்டேஷன் (Make a wish Foundation), ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் (Special Olympics), எயிட்ஸ் அறக்கட்டளை, ஆகிய சமூக அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.

உசாத்துணை

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 http://www.britannica.com/EBchecked/topic/253417/Scott-Hamilton
  2. http://www.filmreference.com/film/80/Scott-Hamilton.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19.
  4. John Brannon (March 4, 2010). "John Brannon: Step aside world … here comes Sarah". The Tribune இம் மூலத்தில் இருந்து நவம்பர் 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113061704/http://www.sanluisobispo.com/2010/03/04/1052896_john-brannon-step-aside-world.html. பார்த்த நாள்: April 3, 2012. 
  5. Karen Guzman Raleigh (February 5, 2004). "Height of Fashion: Vertically challenged men need not be short on style". The Journal Gazette. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_multi=JG. பார்த்த நாள்: April 3, 2012. "A look at the Top 10 Best-Dressed Short Men in America for 2003 and their reported heights: ... 9. Scott Hamilton, figure skater and cancer survivor -- 5 feet, 6 inches." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_ஹாமில்டன்&oldid=3573544" இலிருந்து மீள்விக்கப்பட்டது