ஹதீஸ்

இஸ்லாத்தில் ஹதத் அல்லது அதர் என்பது இஸ்லாமிய தீர்க்கதரிசி முஹம்மதுவின் சொற்கள், செயல்கள் மற்

ஹதீஸ் (அரபு:حديث‎, ஹதீத்) என்பது நபிகள் நாயகம் முகமது நபியின் (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். [1]மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீதுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் 'சிஹாஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவை தவிர பிரபலமான வேறு பல ஹதீத் கிரந்தங்களும் உள்ளன.

ஹதீதுல் குத்ஸி எனப்படுகின்ற நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். இவற்றின் வசன அமைப்பும், பொருளும் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை போல் தோன்றினாலும், அவை முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உரியவையாகும். எனினும் இறைவன் கூறுவதாகக் குறிப்பிடுவதும், நேர்கூற்றாகக் கூறப்படுவதும் இவற்றின் சிறப்புப் பண்புகளாக அமைகின்றன. இவை முழுவதுமே 'ஆஹாத்' என்னும் இறை அறிவிப்பு மூலம் கிடைக்கப் பெற்றதாக இருப்பதால் திருக்குர்ஆனிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. இவை 'வஹி ஹைலு மத்லு' மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருக்கின்றன.

(உ-ம்) எனது அடியார்களே! அநியாயம் செய்வதை நான் என்மீது தடை செய்திருக்கிறேன். எனவே நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அநியாயம் செய்யவேண்டாம்

ஹதீஸ் (நபிமொழிகள்) தொகு

மனித சமுதாயத்தை இறைவனான அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்ட மனிதனுக்கு அவன் வாழ்க்கைக்குரிய அனைத்து விஷயங்களையும் நடைமுறைபடுத்தகூடிய வழிகாட்டிகளை நபிமார்களை அவர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து நல்வழி படுத்தினான். எனினும் உலகில் பல்வேறு காலகட்டங்களில் பல பகுதிகளுக்கு அனுப்பட்ட இறை தூதர்களை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றவில்லை.

அவ்வாறு இறைத்தூதர்களில் கடைசியான முஹம்மத் (ஸல் ) அவர்களுக்கு இறைவனால் 6666 வசனங்களை கொண்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது. அந்த குர்ஆனை தனது வாழ்வில் நடைமுறைமுறை படுத்தி காட்டிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களது சொல், செயல்பாடுகள், அனுமதித்த, அனுமதிக்காத, அங்கீகரித்த அனைத்தும் அவர்களது தோழர்களால், மனைவிகள் மற்றும் அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்களால் மனதளவில் பதியப்பட்டு பின் சொல்வழக்கில் இருந்தது.

பின்னர் ஹதீஸ் தொகுப்பாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் நடை முறையில் சொல்வழக்கில் இருந்தவைகளைப் பல பரிசோதனைகளுக்கு பிறகு அதை தொகுத்து உள்ளார்கள். அப்படி தொகுக்கப்பட்ட நபி மொழி தொகுப்புகளில் ஆறு கிரந்தங்கள் பிரசித்திப்பெற்றவை.

இஸ்லாமியர்கள் முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னத் (ஸுன்னா) (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறார்கள். இதனை ஹதீத் என்றழைக்கப்படும் நபிமொழிகள் வாயிலாக அறியப்படுகிறது.

ஹதீத் என்ற அரபி சொல்லுக்கு செய்தி என்று பொருள். முகம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முகம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள்.

நபிமொழிக்காக உழைத்த நல்லோர் தொகு

இதற்கு பிறகு வேறு இறைவேதமோ, இறைத் தூதரோ வரப்போவதில்லை, எனவே இதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாத நமது கடமை என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மிகத்துரிதமாக செயலாற்றினர். இப்பணியில் அரபு மக்களுடன் அரபி அல்லாதவர்களும் கைகோர்த்தனர். அரபி அல்லாதவர்களே இதில் முன்னோடிகளாவும் திகழ்ந்துள்ளார்கள். அவர்கள் இப்பணிக்காகவே அரபி மொழியை கற்றார்கள். அதில் முக்கியத்துவம் பெற்று மார்க்கத் தொண்டாற்றியுள்ளார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் மற்றும் நம் சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷைக் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) ஆகியோர்கூட அரபி அல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டுவகை ஹதீத் தொகுப்புகள் தொகு

ஹதீஸ் கிரந்தங்களை தொகுப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் இன்னும் இதுபோன்ற மூல கிரந்தங்கள்.
  1. மூல கிரந்தங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ரியாலுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ் போன்ற தொகுப்பு நூல்கள்.

ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீஸ்களும் -அது எந்த கிரந்தத்தில் இடம்பெற்றிருந்தாலும்- ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஸஹீஹான(ஆதாரம் உள்ள) ஹதீஸ்களுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

முத்தஃபக்குன் அலைஹி தொகு

ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.

வடிகட்டி தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தொகு

அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்(அ)செய்யமுடியும்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்(ஆராய்ச்சிக்கு உட்பட்டது).

ஹதீஸ்களையும் பதிவு செய்தவர்களில் வித்தியாசங்கள் உண்டு தொகு

சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.

சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்,இவை பிரபலம்(அ)தெளிவான விளக்கம் இல்லாமல் பதிவுகளில் இல்லை.

இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூல்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றது.

இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.

கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில், அறிஞர்கள் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.

நான்கு வகை ஹதீஸ் தொகு

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.

  1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
  2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
  3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
  4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.

ஆதாரப்பூர்வமானவையும் ஆதாரமற்றவையும் தொகு

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.

உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.

1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ

2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ

1) -> அபூ அவானா -> குதைபா -> 2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.

1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும். 2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும். 4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம்.

அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

தப்ஸீர்களில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்? அவர்கள் அறிவில் குறைந்தவர்களா? நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்பவர்களுக்கு கீழ்கண்டவாறு இஸ்லாமிய அறிஞர்கள் பதில் தருகிறார்கள்.

அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.

திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

  1. "Are Hadith Necessary? An Examination of the Authority of Hadith in Islam". Yaqeen Institute for Islamic Research (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹதீஸ்&oldid=3685936" இலிருந்து மீள்விக்கப்பட்டது