மதுராந்தகன் கண்டராதித்தன்

சோழ மன்னர் உத்தம சோழனின் மகன்

மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவர் சோழ மன்னரான உத்தம சோழனின் மகனும், சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவரும் ஆவார். இவரது தந்தை இராஜர சோழனுக்கு சிற்றப்பா ஆவார். அவருக்கு அரசாளும் ஆசை இருப்பதை அறிந்து அவருக்கு இராஜராஜ சோழன் அரசர் பதவியை விட்டுக் கொடுத்து. அவர் இறந்த பிறகு மன்னராக பதவியேற்றார். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் உத்தம சோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்தன் கோயில் காரியங்களும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணிக்கும் அலுவலில் இருந்தார்.[1]

பணிகள்

தொகு

தொண்டை நாட்டு பாடல்பெற்ற தலமான திருமால்பூர் கோயில் இறைவனுக்குத் திங்கள்தோறும் நூற்றெட்டுக் குடங்கள் தேன், நெய், தயிர் போன்றவற்றை அபிசேகம் செய்ய மதுராந்தகன் கண்டராதித்தனால் நிபந்தம் அளிக்கப்பட்டது. மேலும் கோயிலில் விளக்கு எரிக்கவும் பொருள் தொடுத்தார்.

மேலும் இவர் திருமாற்பேறு அக்னிசுவரர் கோயில் கணக்குகளை ஐவர் அடங்கிய ஒரு குழுவுடன் ஆய்ந்தார். அப்போது கோயில் நிலங்கள் பிறரால் கைக்கொள்ளப்பட்டமையையும், இறைவனுக்குரிய நிவேதனம் இரண்டு நாழி அரிசியாகக் குறைக்கப்பட்டுள்ளதையும் கண்டு பிடித்தார். இதற்கு காரணமான மடைப் பள்ளிக்குப் பொறுப்பாளர்களின் குற்றத்தைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டம் விதித்தார்.

அதேபோல 26-9-991 அன்று ஐப்பசித் திங்களன்று திருத் தீக்காலி வல்லத்துப் பெருமாளை வழிபாட சென்றார் மதுராந்தகன் கண்டராதித்தன். அப்பொழுது இறைவனுக்குப் படைக்கப்பெறும் திவேதனம் இரண்டு நாழி அரிசியாக இருப்பதையும், கறியமுது நெய்யமுது தயிரமுது போன்றவை படைக்கப் படாமல் இருப்பதையும், திருநுந்தா விளக்கு ஏற்றப்படாததையும் கண்டார். அத்திருக்கோயிலை நிர்வகித்துவந்த சிவப் பிராமணரையும் தீக்காலி வல்லத்து அவையாரையும் அழைத்து, ’’இக்கோயில் பெருமானுடைய வரவும் செலவும், அரசன் ஆணைக்கும் திருவோலைக்கும் உரிய வண்ணம் சொல்லுக ’’ என்று கேட்டு, கோயில் கணக்குகளையெல்லாம் ஆராய்ந்தார். ஆய்வின் முடிவில் அக்கோயிலுக்கு நாள்வழிபாடு நன்கு நடைபெற வருவாய் குறைந்திருப்பதைக் கண்டு, இவரே ஏழு கழஞ்சு நான்கு மஞ்சாடி பொன் அளித்தார். மேலும் கோயில் நிலங்களைச் தமக்குரியதாக ஆக்கிகொண்ட சிவப் பிராமணர்கள் செயலையும் கண்டுபிடித்து. அவ்வாறு செய்தவர்களுக்கு 74 கழஞ்சு பொன் அபராதம் விதித்தார்.

இவர் இதுபோன்று பல கோயில் பணிகளை ஆய்வு செய்தும், பல்வேறு அறக் கொடைகளை அளித்துள்ளது கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்றது.[2]

குறிப்புகள்

தொகு
  1. டாக்டர். மா. இராசமாணிக்கனார், சோழர் வரலாறு நூல், பக்கம் 180, பதிப்பு பிப்ரவரி, 1947, கட்டுரை, பராந்தகன் மரபினர்
  2. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 55-60, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, மதுராந்தகன் கண்டராதித்தன்