1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம்

1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம் (1921 Buckingham and Carnatic Mills strike) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னையில் பின்னி அண்டு கோவால் நிர்வகிக்கப்பட்டுவந்த பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலையில் நடந்த வேலை நிறுத்தமாகும். 1921 சூன் முதல் அக்டோபர்  வரை நீடித்த இந்த வேலைநிறுத்தம், சென்னை பொருளாதாரத்தில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இது அப்போதைய ஆளுங்கட்சியான நீதிக்கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. பல ஆதி திராவிடர் தலைவர்களை அதைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கும் ஆளாக்கியது.

காரணங்கள் தொகு

சென்னை தொழிலாளர் சங்கமானது இந்தியாவில் முதன்முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும். இது பி. பீ. வாடியா மற்றும் வி. கலியாணசுந்தரம் முதலியார் ஆகியோரால் 1918 ஏப்ரல் 3 அன்று நிறுவப்பட்டது.[1] பக்கிங்காம் மற்றும் கர்னடிக் மில்லில் தொழிற்சங்கம் துவக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. இந்நிலையில் தொழிலாளர்களின் சிலவர்மீது ஆலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக 1920 ஆம் ஆண்டு, அக்டோபர் - திசம்பரில் வேலைநிறுத்தம் செய்தனர்.[2] 1920 திசம்பர் 9 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராகவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கமானது காவல்துறையை துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டது.

குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணி நிலைமை போன்றவை தொழிலாளர்கள் மத்தியில் பரந்த அளவிலான அமைதியின்மையை ஏற்படுத்தியது. அவர்களது கோரிக்கைகளை இந்திய தேசியவாதிகளான இராசகோபாலாச்சாரி, எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார், ஏ. ரெங்கசுவாமி ஐயங்கார், சிங்காரவேலு செட்டியார், வி. சக்கராஜ் செட்டியார், சத்தியமூர்த்தி ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரசு ஆதரித்து, அதன் ஒத்துழையாமை இயக்கவாதிகளால் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அதேசமயம் நீதிக்கட்சியானது பிரித்தானிய ஆட்சிக்கு ஆதரவாக இருந்தது.[3]

நிகழ்வுகள் தொகு

1921 மே 20 அன்று, பாக்கிங்காம் மற்றும் கர்னாடிக் ஆலையின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்தது. இதையடுத்து  வேலைநிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக சூன் 20 அன்று அறிவித்த பிறகு போராட்டமானது தீவிரம் பெற்றது. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு காங்கிரசின் வி. கலியாணசுந்தரம் முதலியார் தலைமை தாங்கினார்.[4] இந்திய தேசிய காங்கிரசு 1921 சூலை 10 இல் ஒரு கூட்டத்தைக் கூட்டியது; இந்தக் கூட்டத்தில் பாக்கிங்காம் மற்றும் கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்களுடன், சி. ராஜகோபாலாச்சாரி,  கலந்துரையாடி, அவர்களுக்கு ஆதரவு அளித்தார்.

வேலைநிறுத்தம் ஆறு மாதங்களுக்கு நீடித்தது.  போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகள் இரக்கமற்ற வழிமுறையைக் கையாண்டனர். 1921 ஆகத்து அன்று, காவல் துறையால் ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.[5] கிட்டத்தட்ட அனைத்து நீதிக் கட்சித் தலைவர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.[3] நீதிக் கட்சித் தலைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட  தொழிலாளர்களுக்கு வழங்கிய ஆதரவில் சாதி அடையாளங்கள் செல்வாக்கு பெற்றிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[6] தொழிலாளர்கள் மத்தியில் சாதிரீதியாக பிளவு ஏற்பட்டது. இதற்கு  காரணமாக வேலைநிறுத்தத்தில் இணைந்திருந்த ஆதிதிராவிடர்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் தனது உத்தியை தந்திரமாக வகுத்தது எனப்பட்டது.[3]

வேலைநிறுத்தத்தில் இருந்து ஆதி திராவிட தொழிலாளர்கள் ஒதுங்கி இருந்ததை, சென்னை மாகாண முதலமைச்சர், பனகல் அரசர் மற்றும் ஓ. தானிச்சச்சலம் செட்டி ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[7] இந்த வேலைநிறுத்தத்தில் ஆதி திராவிட தொழிலாளர்கள் மற்றும் இந்திய கிருத்துவத் தொழிலாளர்கள் கலந்து கொள்ளாமல், பணிக்குச் சென்றதால் கருங்காலிகளாக கருதப்பட்டு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இது படிப்படியாக சாதி இந்துக்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள், இந்திய கிறிஸ்தவர்கள் ஆகியோர் இடையேயான மோதலாக உருவானது.[6] 1921 சூலை 28 அன்று சாதி இந்து கும்பல் ஒன்று புலியந்தோப்பு ஆதி திராவிடர் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான குடிசைகளை எரித்தது. காவல்துறையும், அரசு அதிகாரிகளும், ஆதி திராவிடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி நீதிக்கட்சித் தலைவர் தியாகராஜ செட்டியார் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதினார். இதைஅடுத்து ஏற்பட்ட பல முரண்பாடுகளின் விளைவாக 1923 இல் ஆதி திராவிடர் தலைவர் எம். சி. இராஜா  நீதிக் கட்சியுடனான தன் உறவை முழுமையாக துண்டித்துக் கொண்டார்.

இந்த வேலைநிறுத்தம் இறுதியில் அக்டோபர் மாதத்தில் சி. நடேச முதலியாரின் மத்தியஸ்தம் மூலம் முடிவடைந்தது. அந்த மாதம், சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சர் பி. தியாகராய செட்டியிடம் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் ஒரு சிலரைத் தவிர, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் வேலூக்கு சேர்க்கப்படவில்லை.

குறிப்புகள் தொகு

  1. Padhi. Labour And Industrial Laws. PHI Learning Pvt. Ltd.. பக். 545. ISBN 81-203-2985-6, ISBN 978-81-203-2985-0. 
  2. Basu, Raj Sekhar (2011). Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850–1956. SAGE Publications Ltd. பக். 241–257. 
  3. 3.0 3.1 3.2 Reddy, Kanchi Venugopal (2005). Working class and freedom struggle: Madras presidency, 1918–1922. Mittal Publications. பக். 58–59. ISBN 81-8324-011-9, ISBN 978-81-8324-011-6. 
  4. "A street name unchanged". தி இந்து. December 22, 2008 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 3, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103185248/http://www.hindu.com/mp/2008/12/22/stories/2008122250770500.htm. 
  5. "Ambush British in India" (PDF). த நியூயார்க் டைம்ஸ். September 2, 1921. http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9407E5DA1439E133A25751C0A96F9C946095D6CF. 
  6. 6.0 6.1 Mendelsohn, Oliver; Marika Vicziany (1998). The Untouchables: Subordination, Poverty, and the State in Modern India. Cambridge University Press. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-55671-2. https://archive.org/details/nlsiu.305.56.men.13074. 
  7. The Calcutta Historical Journal. University of Calcutta. 2004. பக். 101.