1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம்

1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம் என்பது 1992 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைக் குறிக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக விக்கிரமசிங்கபுரத்தில் 17 பேர் உயிரிழந்தனர்[1][2].

வெள்ளத்திற்கான காரணங்கள்

தொகு

பாபநாசம் அணைப் பகுதியில் 310 மிமீ மழை பெய்தது. சேர்வலார் அணைப் பகுதியில் 210 மிமீ மழை பதிவாகியது. இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை ஆகிய இரண்டு பெரிய அணைகள் நிரம்பின. பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மிமீ மழை பதிவாகியது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 321 மிமீ மழை ஒரே நாளில் பதிவாகியது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் 260.8 மிமீ மழை பதிவாகியது. திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது.[1]

நீர் வெளியேற்றம்

தொகு

அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

பாதிப்புகள்

தொகு
  • ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரில், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் வீடுகளுக்கு புகுந்த வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்தனர். நவம்பர் 14 அன்று அதிகாலையில் இந்த நிகழ்வு நடந்தது.
  • சேர்வலார் ஆற்றின் குறுக்கே செல்லும் பழங்காலத்துப் பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
  • ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்குள் வெள்ளநீர் நுழைந்தது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் நீரில் மூழ்கின.[3] 48 மணி நேரங்கள் கழித்து வெள்ளநீர் வடியத் தொடங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Tirunelveli in 1992: 2 lakh cusecs released into Thamirabharani". தி இந்து. 9 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2015.
  2. "1992ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மீண்டும் ஏற்படுமா? தாமிரபரணியில் கூடுதல் நீர் திறப்பினால் அபாயம்". தினமலர். 10 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2015.
  3. "1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ள பாதிப்பில் பாடம் கற்றிருக்கிறோமா?". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2015.