1998 கலகெதர மடிகே கலவரம்

1998 கலகெதர மடிகே கலவரம் என்பது 1998 ஆம் ஆண்டு இலங்கை, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கலகெதர மடிகேயில் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் ஆகும். இக்கலவரம் மார்ச்சு 23, 1998ல் ஆரம்பமானது.

வரலாற்றுப் பின்னணி தொகு

கலகெதர வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாகும். இதன் நடுப் பகுதியில் கலகெதர மடிகே அமைந்துள்ளது. கலகெதர மடிகேயில் சுமார் 750 முஸ்லிம், சிங்களக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் முஸ்லிம்கள் பெருமளவு வியாபாரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். அண்மைக்காலமாக அரசாங்க சேவையிலுமகிவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கலகெதர பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணியை நோக்கும்போது அது சுமார் 500 வருடங்களுக்கு முன் உருவான பூர்வீக கிராமமாக உள்ளது. கண்டி அரசன் முஸ்லிம்களின் வியாபார முயற்சிக்கும், நல்லுறவுக்கும் வாய்ப்பளிக்கும் முகமாக மடிகேயை முஸ்லிம்களுக்குப் பரிசாக வழங்கியது என வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.

கலவரத்துக்கான காரணம் தொகு

கலகெதர மடிகேயைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் புதிதாக முச்சக்கரவண்டி ஒன்றை வாங்கித் தமது முச்சக்கரவண்டி தொழிலை ஆரம்பித்தார். ஆனால், அவர் அதை அவ்வூரில் உள்ள முச்சக்கரவண்டி சங்கத்தில் ரூபா. 5000 அங்கத்துவப் பணம் செலுத்திப் பதிவுசெய்து கொள்ளவில்லை. அவருக்கு முச்சக்கரவண்டியை நிறுத்துவதற்கான இடமும் சேவையில் ஈடுபடும் அனுமதியும் சிங்கள இளைஞர்களால் மறுக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட முஸ்லிம் நபருக்கும் சிங்கள வாலிபருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் வாலிபர்களுக்கும், சிங்கள வாலிபர்களுக்கும் இடையே சண்டை மூண்டதுடன் கலகெதர மடிகே முழுவதும் பரவ ஆரம்பித்தது.

கலவரத்தின் போக்கு தொகு

இக்கலவரம் சுமார் 3 நாட்களுக்கு நீடித்ததுடன், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களைத் தாக்கினர். இன்னொரு புறம் சிங்கள மக்கள் முஸ்லிம்களிடம் பொருட்கள் வாங்கக் கூடாதென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. சிங்கள மக்கள் சிங்களவர்களின் வியாபார நிலையங்களுக்கே செல்லுமாறு தூண்டப்பட்டனர். முஸ்லிம்களின் கருத்துப்படி அநேகமாக இப்பிரச்சினைகளில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களில் பலர் இங்கு பிறந்தவர்கள் அல்ல. இவர்கள் வெளியிலிருந்து இங்கு வந்த அண்மைக்காலங்களில் குடியேறியவர்கள். பிரதான வீதியில் இருந்த முஸ்லிம் கடைகள் அனைத்தும் தொடர்ந்து ஒரு மாதம் முற்றாக மூடப்பட்டிருந்தன. அத்துடன் அங்குள்ள முஸ்லிம் வியாபாரிகள் சுமார் 6 மாத காலம் வியாபாரம் செய்ய முடியாதிருந்தனர்.

1988இலும் தொகு

இதேபோன்று ஒரு பிரச்சினை 10 வருடங்களுக்கு முன்னரும் அதாவது 1988இலும் ஏற்பட்டுள்ளது. கலகெதரயில் சிங்களப் பெருநாள் விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட சிறு தகராறில் சிங்கள இளைஞர் ஒருவைரை முஸ்லிம் ஒருவர் அடித்ததிலிருந்து இது ஆரம்பாகியது. அப்போது ஏற்படவிருந்த கலவரத்தை சட்டமன்ற உறுப்பினர் பொலிஸ் உதவியுடன் தடுத்துநிறுத்தினார்.

அழிவுகள் தொகு

1998ம் ஆண்டு கலவரத்தின்போது 5 நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தபோதிலும் கூட, முஸ்லிம்களின் சொத்துகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டன. பிரதான வீதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 6 கடைகள் முற்றாகத் தாக்கப்பட்டன. 2 வீடுகளும் சேதமாக்கப்பட்டன. இதில் ஒரு வீடு முற்றாகச் சேதமடைந்தது. மற்றைய வீடுகளின் கதவுகள், யன்னல்கள் உடைக்கப்பட்டன. இதைவிட, இங்கு ரூபா 30 இலட்சம் பெறுமதியான மர ஆலை, ரூபா 15 இலட்சம் பெறுமதியான ஒரு லொறி, ரூபா 5 இலட்சம் பெறுமதியான ஒரு கம்பு மர ஆலை 5 வேன்கள் ஒரு பெரிய கோழிப்பண்ணை என்பன பாரிய சேதங்களுக்குள்ளாக்கப்பட்டன. இச்சேதங்களில் அநேகமானவை கொலஜ் ரோட் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்களுக்கே ஏற்பட்டன.

உசாத்துணை: தொகு

  • அனஸ் எம். எஸ். எம், அமீர்தீன். வீ, வஸீல் ஏ. ஜே. எல் - இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும், மே 2003 ISBN 955-97264-2-0
  • புன்னியாமீன், கலகெதர மடிகே பிரச்சினைக்குக் காரணம் என்ன? (ஆய்வு) , நவமணி மார்ச் 29. 1998
"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_கலகெதர_மடிகே_கலவரம்&oldid=2695599" இலிருந்து மீள்விக்கப்பட்டது