1999 மீயல்லை கலவரம்

1999 மீயல்லை கலவரம் இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் ஹக்மனைத் தேர்தல் தொகுதியில் மீயெல்லை என்ற கிராமத்தில் 1999 ஆம் ஆண்டில் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் ஆகும்.

பின்னணி

தொகு

மீயெல்லை கிராமத்தில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு மத்தியில் சுமார் 300 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சில காலமாக சிறுசிறு பிரச்சினைகள் இங்கு உருவாகி வந்தன. இந்நிலையில் 1999ல் மீயல்லைக் கிராமத்தில் நடைபெற்ற ஒரு சிறுசம்பவம் கலவரமாக மாறியது. மீயல்லையின் சில இளைஞர்களுக்கும், கனுமுல்தெனிய எனும் சிங்களக் கிராமத்தின் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு சூதாட்டத்தின் போது நடந்த பிரச்சினை பெரிதாகியது. சூதாட்டத்தில் சிங்கள இளைஞர்கள் தோல்வியுற்றனர். தோல்வியின் பின்னர் சூதாட்டத்தில் பங்கு பற்றிய முஸ்லிம் இளைஞர்களின் 10,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டனர். கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மீயல்லை இளைஞர்கள் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இனவாதமாக மாற்றப்படல்

தொகு

ஏற்கனவே நடந்துவந்த சில பிரச்சினைகளுக்குப் பழிவாங்குவது போல சிங்களவர்களால் இது ஆழமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்விடயம் இனவாதமாக மாற்றப்பட்டது. மீயல்லையின் வளர்ச்சியில் பொறாமையுற்ற சிலரும் இதில் பங்குகொண்டனர்.

கலவரமாக மாறல்

தொகு

தொழில் காரணமாக அயல் ஊர்களுக்குச் சென்று திரும்பிவந்து கொண்டிருந்த முஸ்லிம் தொழிலாளர்களும், முதலாளிகளும் சிங்களவர்களால் தாக்கப்பட்டனர். சுமார் 50 பேர் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகினர். வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டன.

உச்சக் கட்டம்

தொகு

முஸ்லிம் செல்வந்தர்களிடமிருந்து பயமுறுத்திப் பணம் பறிக்கப்பட்டது. மீயல்லைக்குள் புகுந்து சிங்கள இளைஞர்கள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தியதால் ஊரவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர். சிலர் பயத்தால் ஊரைவிட்டு வெளியேறினர். சிலருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டன. அதனாலும் சிலர் வெளியேறினர். இப்பிரச்சினைகளின் உச்சமாக முஸ்லிம் ஊர்த்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

பக்கசார்பு

தொகு

காவல்துறையிடம் நடந்த கலவரங்கள் பற்றியும், கொலை தொடர்பாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது. இவ்விடயங்கள் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மீயல்லைக் கிராமத்திற்கு பூரண பாதுகாப்பு அளிக்குமாறு அவர்கள் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

உசாத்துணை:

தொகு
  • அனஸ் எம். எஸ். எம், அமீர்தீன். வீ, வஸீல் ஏ. ஜே. எல் - இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும், மே 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97264-2-0
  • புன்னியாமீன், மீயல்லை கற்க வேண்டிய பாடம், நவமணி டிசம்பர் 21. 1999
"https://ta.wikipedia.org/w/index.php?title=1999_மீயல்லை_கலவரம்&oldid=2695602" இலிருந்து மீள்விக்கப்பட்டது