24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

இக்கட்டுரையில் 24 மனை தெலுங்குச் செட்டியார் சாதியின் திருமணச் சடங்குகள் விளக்கப்பட்டுள்ளன

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் தொகு

24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்றன.

16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோலயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென்னையவர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர்

8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லிவங்கவர் 6. தவ்ளையர் 7. சொப்பியர் 8. லொட்டையவர்

ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது தொகு

ஆண் கோத்திரங்கள் (16 மனைகள்அல்லது வீடுகள்) சகோதர கோத்திரங்களாகக் கருதப்படுதுவதாலும் (பங்காளிகள்); அது போல பெண் கோத்திரங்கள் (8 மனைகள் அல்லது வீடுகள்) சகோதர கோத்திரங்களாகக் கருதப்படுதுவதாலும், திருமணம் ஆண் கோத்திரத்தைச் சேர்ந்த 16 மனைகள் அல்லது வீடுகளுக்குள்ளோ அல்லது பெண் கோத்திரத்தைச் சேர்ந்த 8 மனைகள் அல்லது வீடுகளுக்குள்ளோ ந்டைபெறாது. எனவே ஆண் கோத்திரத்தார் பெண் கோத்திரத்திலும் - பெண் கோத்திரத்தார் ஆண் கோத்திரத்திலும் திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வைதீக மரபு சாரா திருமண முறைகள். தொகு

24 மனை தெலுங்கு செட்டியார் திருமண முறைகள் பிறமொழிக் கலப்பு இன்றியே காலங்காலமாய் நிகழ்ந்து வந்தன. சமீப காலங்களிலேயே வேத மந்திரங்களோதி வைதீக முறைப்படி திருமணங்கள் நடைபெறுகின்றன. 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சேர்ந்த 'செட்டுமைக்காரர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். செட்டுமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும்.

திருமண முன் ஏற்பாடு தொகு

மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். அந்நாளில் திருமண அமைப்பாளர்கள் அல்லது நிறுவனங்கள் என்று எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர் (திருமணத்தரகர்)’ என அழைப்பர். இவர் மூலம் சாதகப் பரிவர்த்தனை நடைபெறும். ஒரு நாளில் நல்ல சகுனம் பார்த்து சாதகம் பொருத்தம் பார்க்கச் செல்லு வார்கள்

சாதகம் பொருந்தி வந்தாலும்கூட குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தினர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர்.

நிச்சயதார்த்தம் தொகு

நிச்சயதார்த்தம் என்பது திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை. குறிப்பிட்ட நாளில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டிற்குச் சென்று திருமணத்தை உறுதி செய்வது மரபு. மணமகள் வீட்டார் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்தம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். நிச்சயதார்த்தம் நிகழும் இடத்தில், விருந்தினர்கள் அமர விரிப்புகளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டுப் பெரியவர்கள் மற்றும் செட்டுமைக்காரர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர். இரு வீட்டாரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தாம்பூலத் தட்டுக்களையும், வ்ழிபாட்டுப் பொருட்களையும் கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.

மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் செட்டுமைக்காரர் அமர்ந்திருப்பார். அவர் முன் எதிர் எதிராக மணமகன் தந்தையாரும் , மணமகள் தந்தையாரும் உறுதி செய்யும் நாள் ஞாயிறு,திங்கள்,வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன் ,வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்வார்கள். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும். பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணிவித்து, பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்குச் சிறப்புச்செய்தபின்பு தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . இவ்வாறு இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர். பின்னர் மணமகன் மற்றும் மணமகள் பற்றிய விவரங்கள், முடிவு செய்த திருமண நாள், நேரம், திருமணம் நடைபெறும் இடம் போன்ற எல்லா தகவல்களும் அடங்கிய முகூர்த்தபட்டோலையை சபையில் அனைவரும் அறிய வாசிப்பார்கள். செட்டுமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் சீர் தட்டுக்களைக் கொடுப்பார். மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவாள். அடுத்து மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டார் கொண்டு வந்த சேலை உடுத்தி, நகைகளை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக உட்கார வைத்து, சபையில் மாலை அணிவிப்பார்கள். மணமகள் பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப் பெண்கள் எல்லோரும் மணமகளுக்குச் நலுங்கு (சந்தனம் பூசிப் பூ) வைப்பர். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். நிச்சயம் முடிந்த பின்பு மணமகள் வீட்டு சார்பில் நிச்சியதார்த்த விருந்து நடைபெறும்.

தாலி – கொம்புத்தாலி / பொட்டுத் தாலி தொகு

தமிழ்நாட்டில் தாலி சங்க காலம் முதல் மணமான மகளிரால் அணியப்பெற்று வருகிறது. 24 மனை தெலுங்கு செட்டியார் கலாச்சாரத்தில் திருமாங்கல்யம் அல்லது தாலி முக்கியமானது ஆகும். இவர்கள் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். இந்த தாலியானது பல வகைப்படுகிறது:

1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டு தாலி, 5. சங்கு தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டை தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இருதாலி, 12. தாலிக்கட்டி ஆகியவை ஆகும். இதில் காமாட்சியம்மன் தாலியைப் போன்ற சிறிய வட்ட பொட்டுத் தாலி என்பது தெலுங்கு வைணவக் கலாச்சாரத்தையும்; கொம்புத்தாலி அல்லது தொங்கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும் பின்பற்றி அணிவது மரபு.

மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல் தொகு

திருமாங்கல்யம் சுமங்கலியின் சின்னம் . போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகளில் ஒன்று . எனவே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகன் வீட்டார் நல்ல நாளில் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யும் பணியைத் துவக்குதல் என்பது ஒரு முக்கிய சடங்காகும். சில இடங்களில் பொற்கொல்லர் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் மரபு. நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சிகட்குச் செல்ல மாட்டார்கள்.

முகூர்த்தப் பட்டுப்புடவை எடுத்தல் தொகு

இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் முகூர்த்தப் பட்டுப்புடவை மற்றும் கூறைப்புடவை எடுப்பர். சில குடும்பங்களில் மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். மாமன்சீர்மார்காரர், போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர்.

குலதெய்வ வழிபாடு தொகு

குலதெய்வம் , மற்றும் இஷ்ட தெய்வ ப்ரார்தனை மற்றும் காணிக்கை முடிதல் என்பது திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது தெய்வ பக்தியுள்ள குடும்பங்களின் மரபு.

திருமண அழைப்பு தொகு

பழங்காலத்தில் திருமண அழைப்புகள் பனை ஓலையில் எழுதப்பட்டது. கிராமங்களில் கணக்கர் என்பவர் பொறுப்பில் திருமண ஓலை முறையாக எழுதப்பட்டது. இன்றைய நாட்களில் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், முதல் அழைப்பிதழை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித் தனியே தங்கள் குல தெய்வக் கோவில்களுக்கு எடுத்துச் சென்று சமர்ப்பித்த பின்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து நேரில் சென்று தாய்மாமன், வீட்டு மைத்துனர் மற்றும் மாப்பிள்ளைகளுக்கு பணம் பாக்கு வெற்றிலை (தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் ரூபாய் பதினொன்று (அல்லது ஒன்றேகால்) மட்டும்) வைத்து அழைப்பது மரபு. பின் உறவினர்களையும் மற்றவர்களையும் நண்பர்களையும் திருமணத்திற்கு அழைப்பது வழக்கம்.

திருமணச் சட்ங்குகள் தொகு

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சட்ங்குகள் மூன்று நாட்கள் நடக்கும். திருமணம் குறிப்பிட்ட முஹூர்த்த நாளன்று பெண் வீட்டிலோ அல்லது இரண்டு வீட்டுக்கும் பொதுவாக ஒரு திருமண மண்டபத்திலோ நடக்கும். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

முதல் நாள் தொகு

24 மனை தெலுங்கு செட்டியார்கள் இனத்தில் நடைபெறும் முதல் நாள் திருமண நிகழ்ச்சிகளில் வைதீகம் சாராத மிக முக்கியமான சடங்குகள் நடைபெறுவது மரபு.

நாள்விருந்து / சோறாக்கிப் போடுதல் தொகு

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நாள்விருந்தை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இந்த நாளன்று மணமக்களின் தாய்மாமன், அத்தை, மாமன்-மைத்துனர்கள், சகோதரிகள் மற்றும் மாப்பிள்ளைகள் போன்ற உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். திருமணம் இன்று திருமண சத்திரம் அல்லது மண்டபங்களில் நடைபெறுவதால் மணமகன் மற்றும் மணமகள் வீடுகளில் தனித்தனியே பந்தக்கால் நட்டு பந்தல் அமைப்பார்கள். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தல்காலிடுவார்கள்.

மணப்பெண் புறப்படுதல் தொகு

திருமணத்திற்கு முதல் நாளன்று பெண் வீட்டில் பெண்ணிற்கு நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.

மணமகன் புறப்படுதல் தொகு

திருமணத்திற்கு முதல் நாளன்று மணமகன் வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழன் அவருடன் உற்றார் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று மாப்பிள்ளை அழைப்புக்காக காத்திருப்பார்.

மாப்பிள்ளை அழைப்பு தொகு

பெண்வீட்டார் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை பிள்ளையார் கோவிலிலிருந்து திருமண மண்டபத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளத்தோடு வானவேடிக்கையோடு ஊர்வலமாக அழைத்து செல்லுவார்கள். மண்டபத்தின் வாசலுக்கு வந்தவுடன் பெண்ணின் தந்தை அல்லது அக்குடும்பத்தில் வயதில் மூத்தவர் மணமகனுக்கு எதிர்மாலை அணிவித்து வரவேற்கிறார். சில குடும்பங்களில் மணப்பெண்ணின் சகோதரன் அல்லது சகோதர் முறையுடையவர் மாப்பிள்ளையை மாலை சூடி வரவேற்பார். அதற்கு பதில் மரியாதையாக மாப்பிள்ளை மைத்துனனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். இதன் பின் மணப்பெண்ணுக்கு சகோதரி முறையுடைய சுமங்கலிப் பெண்கள் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மண்டபத்துக்கு அழைத்துச் சென்று மணமகன் அறையில் தங்க வைப்பார். மணமகன் மண்டபத்துக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு செட்டுமைக்காரர் தலைமையில் நடைபெறும்.

முகூர்த்தக்கால் போடுதல் தொகு

திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். செட்டுமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மாவிலை, மற்றும் மஞ்சள் தோய்ந்த துணியில் வெள்ளி நாணயம், பூ, நவதானியத்தைக் கட்டி செட்டுமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல் தொகு

முன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொகை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக (அரசு + ஆணை + கால்) மாறியிருக்கலாம். திருமண மேடையில் அரச மரத்தின் கிளை மற்றும் மங்கலப் பானைகள் ஆகிய இரண்டையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால் நடுதல் என்றழைக்கப்படுகிறது. மங்கலப் பானை ஒன்றுக்கு ஐந்து வாழ்வரசியார் கூடி நின்று மஞ்சள் குங்குமம், பூ அணிவித்துப் பந்தலின் கீழ்ப்புறத்துக் கால்களுக்கு இடையே நிறைகுடங்களையொட்டி, கெட்டி மேளங்கொட்ட நடுவர். திருமணத்திற்கு இது ஆணிக்கால் எனவே, இதை "அரசாணிக்கால்" என்பர். இது மும்மூர்த்திகளின் அடையாளமாகும்.

முளைப்பாலிகை இடுதல் தொகு

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு. பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும்.

இரண்டாம் (முகூர்த்த) நாள் தொகு

மணப்பொங்கல் தொகு

மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச்செர்ந்த ஐந்து வழ்வரசியார்கள் தனித்தனியே மணப்பொங்கல் வைத்து மணப்பந்தலின் கீழ்ப்புறமாக வைத்து தங்கள் குலதெய்வங்களுக்குப் படைப்பார்கள்.

தலைப்பால் தொடுதல் தொகு

மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித்தனியே மணமக்களுக்கு தலைக்கு பாலும் நெய்யும் தலையில் வைத்து அதன் பின் புனித நீராடும்படி செய்வார்கள்.

கங்கணம் / காப்புக்கட்டுதல் தொகு

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்: கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. மாப்பிள்ளையும் பெண்ணும், மண மனையில், பெண் வலம் இருக்கும்படி, அமர்ந்தும், செட்டுமைக்காரர் அரசாணிக்காலுக்கு மஞ்சள் கொம்பு கட்டிய கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார். காப்புக் கட்டும் போது கெட்டி மேளம் கொட்டும். திருமணம் இடையூறின்றி நடைபெறச் செய்யும் வேண்டுகோட் செயலிது ஆகும். மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும்.

. நலங்கு தொகு

மணநாள் காலை, மணமகனைப் பந்தலில் அமரச் செய்து, பெண் வீட்டு, பிள்ளை வீட்டு வாழ்வரசியார் நலங்கு வைப்பர். பிறகு மணமகளுக்கு அப்படியே நலங்கு வைப்புர். மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். மணமகளை தோழி அழைத்துவருவார்.

மெட்டி மாலை அணிவித்தல தொகு

திருமண நாள் அன்று காலை முகூர்த்தத்திற்கு முன்னர் பெண்ணின் மாமன்மார்களையும், மாமன் முறையுடைய மற்றவர்களையும் அழைத்து புத்தாடை கொடுத்து விபூதி சந்தனம் அணியச் செய்து மாலை போட்டு மரியாதை செய்வர். மாமா முறையுடைய அனைவரும் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்பதை இது குறிக்கும். மணமகன் மற்றும் மணமகள் கால்களில் இரண்டாவது விரல்களில் வெள்ளியினாலான மிஞ்சி அல்லது மெட்டியை அவரவர் தாய் மாமன்கள் மாமன் சீராக கொடுத்து அணிவிப்பார்கள்.

. மண ஆடை வழங்கல் தொகு

மணமகனை மணப் பந்தலுக்கு மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். அவருக்குரிய மண ஆடை, மாலைகளை அவருக்கு வாழ்த்தி வைதிகர் அளிப்பார். இது போல தோழி அழைத்துவர மணமகளும் பந்தலுக்கு வந்து, மண ஆடை மாலைகளைப் பெற்றுச் செல்வார்.

திருமண வேள்வி தொகு

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

திருப்பூட்டுதல் தொகு

தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். செட்டுமைக்காரர் விநாயகரை வணங்கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டை பெரியவர்களிடம் ஆசி வாங்குவதற்காக ஒரு பெரியவரிடம் கொடுப்பார். பெரியவர் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல்லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர்த்த வேளை நெருங்கினால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத்திலிருந்தே ஆசீர்வதிப்பர். தட்டிலிருந்து செட்டுமைக்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விருப்பார். மாங்கல்யத்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும். மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக் கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மணமக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).

மாலை மாற்றுதல் தொகு

மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.

தீவலம் வருதல் தொகு

திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் தீவலம் வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.

அம்மி மிதித்து அருந்ததி காட்டல் தொகு

அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள். அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் துருவ நட்சித்திரம் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும்.

பாத பூசை தொகு

மணமகனும், மணமகளும் தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர்.

தாரை வார்த்தல் தொகு

மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மணமகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லுவார்கள். இனி மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைத்து வழக்கம். ‘தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்து’ என்கிறது மங்கல வாழ்த்து.

பால்பழம் கொடுத்தல் தொகு

பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச்சடங்கு.

காப்புக் களைதல் தொகு

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து வைதிகரின் தட்சணையும் சேர்த்து வைதிகரிடம் கொடுக்கவேண்டும்.

மணமக்கள் வரவேற்பு / சடங்குகள் (புகுந்த வீடு) தொகு

நல்ல நேரம் பார்த்து மணமகன் விட்டுக்குப் மணப்பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் சகோதரி அண்ணி போன்றோர் உடன் செல்வர். பெண்ணின் உடன் செல்லும் பிறந்த வீட்டு துணைகள் அவளுக்கு பிறந்த வீட்டு ஏக்கம் வராமலிருக்கவும், புகுந்த வீட்டு மனிதர்களிடம் இயல்பாக ஏற்படும் பயத்தைப் போக்கவும் உதவி செய்வார்கள் என்பது எதிர்பார்ப்பு.

புகுந்த வீட்டில் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். வலது காலை எடுத்து வைத்து தம்பதிகள் வீட்டுக்குள் நுழைவார்கள். புகுந்த வீட்டில். பெண் தான் புகுந்த வீட்டில் முதன்முதலில் பூஜை அறையில் விளக்கேற்றுவாள். பின்பு சமையலறையில் பால் காய்ச்சுவாள். வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதியரை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும்.

சாந்தி முகூர்த்தம் தொகு

பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. அன்று மாலையில் மணமக்களை அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்து செல்லுவார்கள். மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும் . பால் , பழங்கள், ம்ற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும். மணமகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள்.

மூன்றாம் நாள் தொகு

சம்பந்தம் கலக்கல் தொகு

நல்ல நாள் பார்த்து நாள் பின் பெண்ணை மறுவீடு அழைத்து வர மணமகள் வீட்டார் புகுந்த வீடு செல்வர். திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களை அறிமுகம் செய்து வைக்க நேரம் இருக்காது. எனவே திருமணம் முடிந்து இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும். குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் மணமக்களோடு சென்று பொங்கல் வைத்து பூசை செய்து வழிபடுவர். உறவினர் வீடுகளுக்கு விருந்துண்ண செல்வர். சீர் செய்த சகோதரி இல்லம் சென்று சிறப்புச் செய்வர்.

தாலி பெருக்கம் தொகு

திருமணம் முடிந்த மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின்முன் அமர்த்தி , ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாப்பிள்ளைவீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் அல்லது புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி காசு குண்டு இணைத்து கோர்க்க வேண்டும். இந்த சடங்கை முதிர்ந்த சுமங்கலி பெண் செய்து கொடுப்பது உத்தமம். தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக்கூடாது.