எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து)
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
புலவர் | அரிசில் கிழார்
பதிற்றுப்பத்து - 8ஆம் பத்து - செய்திச்சுருக்கம்
கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
பாடிய புலவர் - அரிசில் கிழார்
பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல் இரும்பொறை
பாடிப்பெற்ற பரிசில் - 9,00,000 காணம் காசு கொடுத்த பின்னர் அரசனும் அரசியும் அரண்மணையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டு அரசுக் கட்டிலை (ஆட்சியை)ப் பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி அரசன் புலவரை வேண்டினான். புலவர் அதனைப் பெற்றுக்கொண்டு 'அரசே! நான் தங்களிடம் ஒன்றை இரக்கிறேன், நான் பெற்றுக்கொண்ட ஆட்சியைத் தாங்களே ஏற்றுக்கொண்டு அரசாள வேண்டும்' என்றார். அரசன் புலவர் சொல்லுக்குக் கட்டுபட்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டான்.
பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தை; செல்வக்கடுங்கோ வாழியாதன். தாய்; பதுமன் என்பவன் பெற்ற மகள். பதுமன் 'வேள் ஆவி' என்னும் குடிமக்களின் அரசன். இந்த ஆவியர் குடிமக்கள் பொதினி எனப்பட்ட இக்காலப் பழனிமலைப் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.
பாடல் 71 - குறுந்தாள் ஞாயில்
பெரும! உன்னை உசுப்பி விட்டவர் யாது செய்வதென்று தெரியாது கலங்கினர். மக்கள் நெல்லைக் கூடு கூடாகச் சேமிப்பது வழக்கம். அம்பணம் என்பது ஒரு கூட்டில் இருக்கும் நெல். விளையாடிய இரண்டு சிறுவர்கள் அப்படிச் சேமித்த நெல் கூட்டை ஓட்டை போட்டுவிட்டனர். நெல் பொதபொதவென்று கொட்டியது. சிறுவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். அதுபோலப் பகைவர் பெருஞ்சேரல் இரும்பொறையின் சினத்தைத் தூண்டி விட்டுவிட்டுத் துடித்தனர்.
தோட்டி மலை நகரக் கோட்டை ஆழமான அகழியும், உயரம் குறைந்த மதிலையும் கொண்டது. ஊரைச் சுட்டபின் நீ அதனைக் கைப்பற்றினாய்.
கழுவுள் என்பவனை வென்று அவன் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வந்தாய். அதனால் அவன் நாட்டில் தயிரைக் கடையும் மத்தும் கயிறும் ஆடாமல் போயிற்று. கழுவுள் பல ஊர்களில் விருந்தினனாகத் திரிந்த பின் உன்னைப் பணிந்து திறை தந்தான். உன்னை அணங்கு என்று வழிபட்டான். உரவர், மடவர் என்னும் இரு பாலாரையும் நீயே உணராவிட்டால் இவ் உலகில் மடவர்க்கு வாழ்வு ஏது? அருள்வாயாக.
(தோட்டி அரசனும், கழுவுள் என்பவனும் நெல்லுக் கூட்டைத் தொளையிட்ட சிறுவர் போல் செய்வது அறியாமல் திகைத்தனர்.)
பாடல் 72 - உருத்து எழு வெள்ளம்
உன் பகைவர் முன்பு உன் முன்னோரை ஓம்பி அரசாண்டனர். இப்போது பகைமை பெரிதுபட்டு, உன் திறமையை எண்ணிப் பார்க்காமல் போருக்கு எழுந்துள்ளனர். நீயோ கடலலைத் திவலையில் பாயும் கதிரொளி போன்றவன். அன்றியும் சிங்கத்தைப் போலச் சினம்கொள்ளக் கூடியவன். இனி அவர்கள் உன் பாதுகாப்பைப் பெறப்போவதில்லை.
பாடல் 73 - நிறம் திகழ் பாசிழை
(இந்தப் பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன)
உரவோரோ (=அறிவுவலிமை பெற்றவர்), மடவோரோ பிறர்க்கு நீ வாயில் (புகலிடம்) ஆவாய். உனக்குப் பிறர் யாரும் உவமை ஆகமாட்டார்கள்.
உனது மகளிர் தெய்வத்தையே உனக்குத் தரக்கூடிய நெஞ்சம் படைத்தவர்கள்.
நீ காவிரி பாயும் புகார் போல வனப்பு மிக்க செல்வன்.
பூழியர் குடிமக்களுக்குக் கவசம் போல விளங்குபவன்.
கொல்லிமலை அரசனோடு போரிட்டு வென்றவன். (ஓரி அரசனைக் கொன்று கொல்லிமலையைச் சேரலர் கோமானுக்கு வழங்கியவன் காரி)
உன்னோடு மாதவேண்டா என்று உன் பகைவரிடம் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் என் சொல்லைக் கேட்கவில்லை. இனி நான் எங்கு சென்று உரைப்பேன்? உன் படைவீரச் சான்றோர்கள்தாம் அவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
பாடல் 74 - நலம் பெறு திருமணி
நோன்பு இருந்து வேத மொழிகளைக் கேட்டு வேள்வி செய்தாய்.
கொடுமணம் என்னும் ஊரிலிருந்து வேலைப்பாடு அமைந்த அணிகலன்களைக் கொண்டுவந்தாய்.
பந்தர் என்னும் ஊரிலிருந்து முத்துக்களைக் கொண்டுவந்தாய்.
நீ பகைநாட்டில் தீது களைந்து தேர் ஓட்டியபோதெல்லாம் உன் மனைவி தன் தோளில் 'நலம்பெறு திருமணி' பூட்டி மகிழ்ந்தாள்.
நாட்டைக் காப்பாற்ற வல்ல நன்மகனைப் பெற்றாய்.
இவையெல்லாம் எனக்கு வியப்பாகத் தோன்றவில்லை. உன்னிடம் இருந்த வளம், மாண்பு, கொடையால் கிடைத்த பலன், மற்றும் எஞ்சியிருப்பவை அனைத்தையும் உன்னிடமிருந்த நரைமூதாளனுக்குக் கொடுத்து 'அனைத்தும் தவமுடையோர்க்கே' என்று அறிவித்தாய். இதுதான் எனக்கு வியப்பாகத் தோன்றுகிறது. - என்கிறார் புலவர்.
பாடல் 75 - தீஞ்சேற்று யாணர்
புலியைக் கொன்ற அரிமா யானையையும் தாக்கும். வேந்தரும் வேளிரும் கீழ்ப்பணியாவிட்டால் நீ அரிமா போலத் தாக்குவாய். நெல்லும் கரும்புச் சாறும் வழங்கும் வளம் வீங்கு இருக்கையும், கொள் விளைவிக்கும் நெல்லரிசி அறியாத நாடும் இனி என்னாவது?
பாடல் 76 - மா சிதறு இருக்கை
பண்ணியம் (செய்பொருள்) விற்பனைக்காக மரக்கலங்களில் கடலில் செல்வாரைப் போன்று விழுப்புண்ணைப் பொருட்படுத்தாது போருக்குச் சென்றாய். அங்குக் காயப்பட்ட களிற்றுத் தொகுதியின் துயரைப் போக்குவது போல உன்னிடல் இரந்தவர்களை வாழவைத்தாய். மேலும் இரந்து வருவோருக்கு அரியணையில் இருந்துகொண்டே குதிரைகளைக் குறைவின்றி வழங்கினாய். வெள்ளாடை போல் பகன்றைப் பூவைச் சூடிக்கொண்டு, மழை ஈரத்தில் சில்லேர் உழுது, பல்விதை பயிரிட்டு, கதிர்மணி பெறும் நாடு உன்னுடைய நாடு.
பாடல் 77 - வென்றாடு துணங்கை
வழிமேற் கொண்டவர்களே! பொறையன் படை எத்துணைப் பெரியது என்று வியந்து வினவுகிறீர்கள். கொங்கு நாட்டில் மேயும் ஆடுமாடுகளை விட அவனது படையிலுள்ள யானை, குதிரை, தேர், மறவர் ஆகியவற்றின் எண்ணிக்கையை மிகுதியாகக் காண்கிறேன்.
பாடல் 78 - பிறழ நோக்கு இயவர்
அதோ! அரசனின் வெற்றிமுரசம் போல முழங்கும் அருவி தூங்கும் மலை. விறலி! அங்குச் செல்வாயாயின் முல்லை நிலங்களில் கிளியோட்டும் மகளிர் அங்குப் பூத்திருக்கும் தாமரை மலரையும் ஆம்பல் மலரையும் பறித்து வீசி ஓட்டுவதைக் காணலாம். அங்குள்ள தகடூர் நோக்கிச் செல்லும்போது பல பயனுள்ள பொருள்கள் நிலையாகக் கிடக்கும் கடற்று வழியே செல்வீர்கள். தகடூரைச் சூழ்ந்துள்ள இறும்பு என்னும் காவல் காட்டில் வெற்றி பெற்ற போர்வீரர்கள் தமக்குள் மோதிப் பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். பெருஞ்சேரல் இரும்பொறை அங்குச் சென்றுதான் தாக்கினான். அந்நாட்டில் மேயும் ஆடுகளைப் போல் குதிரைகளையும், மாடுகளைப் போல் யானைகளையும் நடத்திச் சென்று தாக்கி வென்றான்.
பாடல் 79 - நிறம்படு குருதி
பெருஞ்சேரல் இரும்பொறையின் பண்புகள் இப் பாடலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1 போருக்கு நடுவில் தன் உயிரை மதிக்கவாட்டான். 2 இரவலர்க்கு நடுவில் தன் கொடையை தமிக்கமாட்டான். 3 பெரியோரைப் பேணுவான். 4 சிறியோர்க்கு நல்குவான். 5 அலனிடமிருந்து பிரிந்து செல்லும் புகழ் பிறரிடம் இழிவாக மாறும். 6 மகளிரிடம் இவன் ஆண்மை குழைந்துபோகும். 7 இச் சிறப்பானே இவனைக் 'கோதை மார்பன்' என்பர். 8 இவனிடம் தோற்ற அரசனின் முரசைக் கிழித்தும், அவனது களிற்றின் தந்தத்தை அறுத்தும் தனக்கு அரசுக்கட்டில் (அரியணை) செய்துகொண்டான். 9 தும்பைப் போரின்போது பகைவர் தம் முதுகில் காயம்பட்டு குருதியோடு ஓடுவதைக் கண்ட பின்னர்தான் சாப்பிடுவான்.
அயிரை மலைக் கடவுள் போல இவன் நிலைபெற்று வாழ வேண்டும்.
பாடல் 80 - புண்ணுடை எறுழ்தோள்
பொறையனின் பகைவர் படைவலிமை மிக்கவர். பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை உடையவர். அவர்களின் முன்னர் நின்று பொறையனின் வில்லாளர்கள் 'இடுக திறை' என்றனர். பொறையன் கற்பன் ('கற்ப') கற்பம் என்று போற்றப்படுகிறான். ஆற்றுநீரைத் தேக்கி உயர்த்தும் கல்லடுக்குக் கலிங்கு போன்றவன் என்பது இதன் பொருள்.