அக்கார அடிசில்

(அக்காரவடிசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அக்கார அடிசில் என்பது வைணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் உணவுப் பொருளாகும். குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் கூடாரவல்லி பிரசாதம் என்கிற பெயரில் செய்யப்படும் இனிப்பு சிற்றுண்டி ஆகும். ஆண்டாள் திருப்பாவையில்[1] கூறியவாறு, "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்" என்று மார்கழி மாத முதல் தேதியில், பாவை நோன்பைத் துவங்குவோர், 27ம் நாள், தங்களின் விருப்பங்கள் நிறைவேறியதாக எண்ணி, மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப் பண்டத்தைச் செய்வர். பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இந்த உணவு செய்யப்படுகிறது. பொதுவாக, சோறு சமைக்கப்படும் போது அரி‌சி நீரில் வேகவைக்கப்படும். ஆனால், அக்கார அடிசில் செய்யும்போது, பச்சரிசியானது பாலில் வேகவைக்கப்படுகிறது. இது சர்க்கரைப் பொங்கல் ‌போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது.

புராணங்களில்

தொகு

ஆண்டாள் படைத்த அக்கார அடிசில்

தொகு

வைணவ நூலான, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நாச்சியார் திருமொழி, முதல் ஆயிரம், திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்., பா. 596இல், ஆண்டாள் நாச்சியார் அக்கார அடிசில் பற்றி கூறிய குறிப்பு உள்ளது. ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் [2]

நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;

நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்

எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?

என்று பாடித் தனது பாடல்களினாலேயே திருமாலிருஞ்சோலைப் பெருமானுக்கு அக்கார அடிசிலைப் படைத்து வழிபட்டாள்.சொன்னேன் சொன்னேன் என்பதால் நேர்ந்து கொண்டேன் என்பதே பொருள். ஆதலால் பெருமாளுக்கு அக்கார அடிசில் படைக்க வேண்டும் என்பது அவள் விருப்பம் என்பது தெரிகிறது.

இராமானுஜர் படைத்த அக்கார அடிசில்

தொகு

ஸ்ரீஆண்டாளின் நேர்த்தியை அறிந்த இராமனுஜர், அவளுடைய நேர்த்தியைப் பூர்த்தி செய்யத் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசிலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல்படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து, ஆண்டாள் அசரீரியாக, “வாரும் என் அண்ணலே” என்று அழைத்தார் என்று சொல்லப்படுகிறது. இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும், இந்தச் செயலின் காரணமாக, அவர் ஆண்டாளுக்கு அண்ணனானார் என்று கருதப்படுகிறது.

அக்கார அடிசில் செய்முறை

தொகு

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

தொகு
பொருட்கள் அளவு
பசும்பால் 1 லிட்டர்
நல்ல பச்சை அரிசி கால்கிலோ
வெல்லம் அரை கிலோ
நெய் கால்கிலோ
பாசிப்பருப்பு 150 கிராம்
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு தேவையான அளவு
குங்குமப்பூ தேவையான அளவு
ஏலக்காய் தேவையான அளவு


தயாரிக்கும் முறை

தொகு

பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும்  வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து வெண்கலப்பானையில் இட்டுப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவேண்டும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றிப் பால் கொதிக்க ஆரம்பித்த உடன், சுத்தம் செய்த பாசிப்பருப்பைக் களைந்து அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை அடிபிடிக்காமல் இருப்பதற்காக, கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்து விட்டு. மிச்சம் இருக்கும் பாலையும் கலந்து விட வேண்டும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வந்த பிறகு, சுத்தம் செய்த வெல்லத்தைத் தூளாக்கிச் சேர்க்க வேண்டும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து- இடைவிடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்க வேண்டும். நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சை  வறுத்துச் சேர்க்க வேண்டும்.

சான்றுகள்

தொகு
  1. "P202245.htm-ஆண்டாள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
  2. For the Love of God: Selections from Nalayira Divya Prabandham. The Azhwars. New Delhi: Penguin Books Australia. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0140245721.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140245723
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கார_அடிசில்&oldid=3704858" இலிருந்து மீள்விக்கப்பட்டது