அஞ்சல்தலை வழு
அஞ்சல்தலை வழு என்பது, அஞ்சல்தலைகளை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பல்வேறு வகையான தவறுகளைக் குறிக்கும். இது பெரும் வடிவமைப்புத் தவறுகள் முதல் மோசமான அச்சுப்பதிப்பு வரை இருக்கலாம். மிகவும் விரும்பப்படுகின்றனவும் விலை கூடியனவுமான அஞ்சல்தலைகளும், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தேவைப்படுகின்ற அஞ்சல்தலைகளும் இவற்றுள் அடக்கம்.
பிழைகளுடனான அஞ்சல்தலைகள் அச்சகத்தை விட்டு வெளிவராமல் இருக்க அஞ்சல் நிர்வாகங்கள் மிகுந்த கவனம் எடுக்கின்றன. வழுவுடன் கூடிய அஞ்சல்தலைகள் வாடிக்கையாளருக்கு விற்கப்பட்டிருந்தால் மட்டுமே அவற்றுக்குப் பெறுமதி ஏற்படுகிறது. அச்சக ஊழியர்களால் வெளியே கடத்திக் கொண்டுவரப்படும் வழுவுள்ள அஞ்சல்தலைகள் அச்சகக் கழிவு எனப்படுகின்றன. அவற்றுக்கு மதிப்புக் கிடையாது. இத்தகைய அஞ்சல்தலைகள் பறிமுதல் செய்யப்படவும் கூடும். அண்மைக் காலத்தில், அஞ்சல்தலை வழுவாகக் கருதப்பட்ட நிக்சன் தலைகீழ் வழு அஞ்சல்தலை பின்னர் அச்சகப் பணியாளர் ஒருவரால் திருடப்பட்டது என்ற உண்மை வெளிப்பட்டது. தலைகீழ் ஜென்னி வழு தொடர்பில் இடம்பெற்றதுபோல நிர்வாகங்கள் முறையாக விற்கப்பட்ட வழுவுள்ள அஞ்சல்தலைகளையும் திரும்பப்பெற முயற்சிசெய்வது உண்டு. ஆனாலும், சேகரிப்பவர்கள் இவ்வாறான அதிட்டத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
வழுக்களின் வகைகள்
தொகு- வடிவமைப்பு வழு: படம் பிழையான விடயம் தொடர்பானதாக இருத்தல், நிலப்படங்கள் பிழையான எல்லைகளைக் காட்டுதல், பிழையான உரைகளைக் கொண்டிருத்தல், எழுத்துப் பிழைகளைக் கொண்டிருத்தல் போன்றவை.
- பெறுமான வழு: பல்வேறு கூறுகளைக்கொண்ட அச்சுக்களைப் பயன்படுத்தும்போது பிழையான கூறுகள் கலந்துவிடுவதால் இவ்வழு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, கூடிய பெறுமானத்துக்கு வடிவமைக்கப்பட்ட அஞ்சல்தலைகளுக்கு குறைந்த பெறுமானம் அச்சிடப்பட்டிருக்கலாம்.
- விடுபாட்டு வழு: அஞ்சல்தலை வடிவமைப்பின் ஒரு பகுதி விடுபட்டுப்போதல்
- இரட்டை அச்சு: அஞ்சல்தலை அல்லது மேலச்சு இருதடவை அச்சிடப்படல். ஒரு அச்சுப்பதிவு சற்றுத் தள்ளியிருத்தல்.[3]
- தலைகீழ் வழு: அஞ்சல்தலையின் ஒரு பகுதி தலைகீழாக அச்சிடப்பட்டிருத்தல்.
- தலைகீழ் மேலச்சு
- நிற வழு: பிழையான நிறத்தில் அஞ்சல்தலை அச்சிடப்பட்டிருத்தல்.
- தாள் வழு: அஞ்சல்தலை பிழையான தாள் வகையில் அச்சிடப்பட்டிருத்தல்.
- துளையில்லா வழு: அஞ்சல்தலையின் ஒரு பக்கத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களிலோ துளைவரிசை இல்லாதிருத்தல்.