அடிபந்தாட்டம்

(அடிப்பந்தாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடிப்பந்தாட்டம் (Baseball) என்பது துடுப்பு மற்றும் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் குழு விளையாட்டு. விளையாடும் ஒவ்வொரு அணியிலும் 09 வீரர்கள் இருப்பர். வட அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிப்பந்தாட்ட விளையாட்டு உருவானது. ஐக்கிய அமெரிக்காவின் (USA) தேசிய விளையாட்டான இது ஹாலிவுட் படங்களினாலும், தொலைக்காட்சியினாலும் மற்றவர்களுக்கு சற்றேனும் அறிமுகமானதாக இருக்கிறது.[1][2][3]

சிக்காகோவின் ரிக்லி ஃபீள்ட் பேஸ்பால் மைதானம்

ஆடுகளம்

தொகு
 
அடிப்பந்தாட்டக்களம்

பந்துவீச்சு மற்றும் துடுப்பாடும் இடம் அகப்புலம் என்பர். அது சற்று கூர் உருளை (கூம்பு) வடிவிலிருக்கும். பந்துவீசும் இடம், வீச்சுத் தட்டு என்பர். இதன் குறுக்களவு சுமார் 18' இருக்கும். இந்த வீச்சுத்தட்டை மையப்பகுதியாக கொண்டு, வைர வடிவிலான சதுரம் அமைந்திருக்கும். இந்த சதுரங்கத்தின் ஒரு மூலையில் துடுப்பாடப்படும், இதனை வீட்டுத் தட்டு என்பர். வீட்டுத் தட்டுக்கும், வீச்சுத் தட்டுக்கும் இடையே உள்ள சுமார் 60' தூரமிருக்கும். மற்ற மூலைகளை, வீட்டுத் தட்டிலிருந்து இடஞ்சுழி முறையே 1ம் அடித்தளம், 2ம் அடித்தளம் மற்றும் 3ம் அடித்தளம் என்பார்கள். வீட்டுத் தட்டின் இருபுரத்திலும் இடக்கை மற்றும் வலக்கை துடுப்பாளர்கள் நிற்பதற்கான செவ்வகங்கள் இருக்கும். வீட்டு தட்டிற்குப் பின் கேட்சர் சதுரம் அமைந்திருக்கும்.

வீட்டுத் தட்டிலிருந்து விரிந்து செல்லும் முக்கோணத்தின் இருபக்க கோடுகளை பிழைக் கோடுகள் என்பனர். அகப்புலத்திற்கு அப்பார்பட்டு, பிழை கோடுகளுக்குள்ளே இருக்கும் ஆடுகளத்தை புறப்புலம் என்பர். வீட்டுத் தட்டிலிருந்து புறப்புலத்தின் எல்லை, சுமார் 290' முதல் 400' வரை இருக்கும்.

எல்லாப் போட்டிகளும், ஏதாவது ஒரு அணியின் சொந்த ஊரிலிருக்கும் ஆடுகளத்தில் நடக்கும். புறப்புலத்தின் பரிமாணங்கள் நிலையானதாய் இல்லாததால், எல்லா ஆடுகளங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக திகழும்.

விதிமுறைகள்

தொகு

ஒரு போட்டியில் இரு அணிகள் பங்குப்பெறும். ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள் அந்தப் போட்டியில் விளையாடுவார்கள். ஒரு போட்டியில் 9 ஆட்டங்கள் நடைபெறும், ஒரு ஆட்டத்திற்கு இரு அணிகளும் மாறி மாறி, மட்டையாடல் மற்றும் பந்துவீச்சில் ஈடுப்படும். சொந்த ஊரில் விளையாடும் அணி பெரும்பாலும் முதலில் பந்துவீச்சில் ஈடுப்படும்.இரு அணியின் மேலாளர்களும், இந்த போட்டியில் விளையாடும் தங்கள் அணியின் வீரர்களின் பட்டியிலை எதிர் அணியிடமும் நடுவர்களிடமும் தர வேண்டும். இந்தப் பட்டியலில் மாற்று வீரர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மட்டையாடுதல்

தொகு
  • போட்டியின் ஆரம்பத்தில், மட்டையாடும் அணியிலிருந்து ஒரு வீரர் முதலில் ஆடுவார். பின்னர் வரும் ஆட்டங்களில், முந்தைய ஆட்டத்தில் எவர் கடைசியாக வெளியேற்றப்படுகிறாரோ, வரிசையில் அவருக்கு அடுத்து உள்ள வீரர் புதிய ஆட்டத்தில் மட்டையாட தொடங்குவார். உதாரணதிற்கு, முதல் ஆட்டத்தில் 4ம் வீரர் வெளியேறும் போது அந்த அணியின் மூன்று வீரர்களும் வெளியேறி விட்டால், அடுத்த ஆட்டத்தில் 5ம் வீரர் ஆரம்பிப்பார்.
  • எல்லா மட்டையாடும் வீரர்களும் மட்டையாடும் செவ்வகத்தில் நின்றுதான் ஆட வேண்டும். மட்டை கொண்டு அடிக்கும் போது, வீட்டுத் தட்டின் மேலையும் அடிக்கலாம், அதற்கும் பின்னரும் அடிக்கலாம்.
  • ஒவ்வொரு மட்டையாடும் வீரருக்கும், பந்தை அடிப்பதற்கு மூன்று நியாயமான வாய்ப்புகள் தரப்படும். மூன்று வாய்ப்புகளில் அடிக்க இயலவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார்.
  • ஒரு வேளை, பந்தை அடித்து விட்டால், அவர் கட்டாயமாக 1ம் அடித்தளத்தை நோக்கி ஓட வேண்டும். பந்தை அடுத்த அடித்தளத்திலுள்ள வீரரிடம் வீசும்முன் அந்த அடித்தளத்திலுள்ள தட்டை தொட்டு விட வேண்டும்.
  • ஒரு ஆட்டம் முடிவதற்குள் எல்லா அடித்தளங்களையும் ஓடிவிட்டு 'வீட்டுத் தட்டை' மீண்டும் வந்தடைந்தால், ஒரு 'ஓட்டமாக' கணக்கெடுத்துக்கப்படும்.

பந்துவீச்சு

தொகு
  • வீச்சாளர், பந்துவீச தயாரானவுடன் ஆட்டம் தொடங்கும். அணியில் ஒருவர் பந்தை வீசுவார், அவரை வீச்சாளர் என்பர், வீச்சாளர் தட்டிலிருந்து மட்டுமே பந்தை வீச முடியும். வீச்சாளால் ஸ்டிரைக் ஜோன்க்குள்ளே மட்டுமே பந்துகளை வீச முடியும். இல்லையென்றால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
  • மற்றொருவர் வீசும் பந்தைப் பிடிப்பார். இவரை கேட்சர் என்பர். இவர் 'கேட்சர் சதுர'த்தில் உட்கார்ந்திருப்பார். இவர் பந்தை பிடிக்க தவறினால், துடுப்பாளர் அடுத்த அடித்தளத்திற்கு ஓடுவார்.
  • மற்ற வீரர்கள் பந்தை அடித்தப்பின் அதை பிடிப்பதற்காக ஆடுகளத்தில் தயாராக இருப்பர். மூன்று வீரர்கள் அடித்தளத்தின் அருகிலும், மற்ற வீரர்கள் 'புறப்புலத்திலும் இருப்பர். பிடித்த பந்தை ஏதாவது ஒரு அடித்தளத்திற்கு வீச வேண்டும். இந்த வீரர்கள், மட்டையில் பட்ட பந்து தரையை தொடும் முன் பிடித்தால், பந்தை அடித்த, எதிரணி வீரரை வெளியேற்றலாம்.

ஓட்டம் எடுக்கும் விதிமுறைகள்

தொகு
  • ஒரு வீரர் எல்லா அடித்தட்டுகளையும் தாண்டிய பின்னர், வீட்டுத் தட்டிற்கு மறுபடியும் வந்து சேர்ந்தால் மட்டுமே, ஒரு ஓட்டமாக கணக்கெடுக்கப்படும்
  • வீச்சாளர் வீசும் பந்தை அடித்து விட்டு, ஒன்று அல்லது அதற்கு மேல் அடித்தட்டுகளை நொக்கி ஓடலாம். அவ்வாறு ஓடும் போது, அடித்தள தட்டைத் தொட வேண்டும். இவர்களை ஓட்டக்காரர்கள் என்பர்.
  • வீச்சாளர் 'ஸ்டிரைக் ஜோன்' அல்லாமல் மற்ற பகுதியில் நான்கு முறை ஒரே வீரருக்கு வீசினால், அந்த வீரர் இலவசமாக அடுத்த அடித்தளத்திற்கு செல்லலாம்.
  • கேட்சர் பந்தை பிடிக்க தவறும் தருணத்தில், மட்டையாடுபவர் மற்றும் ஓட்டக்காரர்கள் ஓடலாம். எத்தனை அடித்தட்டுகளுக்கு வேண்டுமானாலும் ஓடலாம், அது அந்த வீரரின் திறமையைப் பொருத்தது.
  • தங்கள் அணியின் வீரர் மட்டையாடும் போது, மற்ற அடித்தளங்களில் இருக்கும் ஓட்டக்காரர்கள், எப்போது வேண்டுமானாலும் (பந்தை அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும்) ஓடலாம். இவ்வாறு அடுத்த அடித்தளத்தை வெற்றிகரமாக சென்றடைந்தால், அதனை 'திருடப்பட்ட அடித்தளம்' என்பர்.
  • வீச்சாளர் வீசிய பந்தை அடித்தப் பின், பந்து புறப்புல எல்லையை தாண்டி, தரையில் படாமல் சென்றால், அடித்த வீரர் ஒரு முழு ஓட்டத்தை ஓடலாம். இதனை வீட்டுக்கு ஓட்டம் என்பர். இந்த தருணத்தில் மற்ற அடித்தளங்களில் ஓட்டக்காரர்கள் இருந்தால் அவர்களும் முழு ஓட்டம் ஓடலாம். எல்லா அடித்தளங்களிலும் ஓட்டக்காரர்கள் இருக்கும் தருணத்தில் இவ்வாறு 'வீட்டுக்கு ஓட்டம்' அடித்தால் அதனை, கிராண்ட் சிலாம் என்பர். அப்போது மட்டையாடும் அணிக்கு 4 ஓட்டங்கள் கிடைக்கும்

வெளியேற்ற விதிமுறைகள்

தொகு
  • ஒரு அணி பந்துவீசும் போது எதிரணியின் மூன்று வீரர்களை வெளியேற்றினால், அந்த ஆட்டத்தின் ஒரு பாதி முடிவடையும்
  • பிட்சர் வீசிய பந்துகள், 'ஸ்டிரைக் ஜோனி'ல் மூன்று முறை தாண்டிச் சென்று 'கேட்சர்' பிடித்தால், அதை எதிர்கொண்ட வீரர் வெளியேற்றப்படுவார்.
  • அவ்வாறு மூன்றாம் முறை வீசப்பட்ட பந்து மட்டையில் பட்டு பிழைக் கோடுகளுக்கு அப்பால் சென்றால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்.
  • பந்தை மட்டையால் இருமுறை அடித்தால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்
  • வீச்சாளர் வீசிய பந்தை அடிக்கும் போது, மட்டையிலிருந்து எழும்பி தரையில் படுமுன், எதிரணி வீரர்கள் பந்தை பிடித்தால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்.
  • ஓட்டக்காரர்கள், எப்போது வேண்டுமானாலும் அடுத்த அடித்தளத்தை நோக்கி ஓடலாம். அப்போது பிட்சர், அடித்தளத்தை நோக்கி பந்தை வீசி, அதை வேறொரு வீரர் பிடிக்கும் தருணத்தில், ஓட்டக்காரர் அடித்தளத்தின் தட்டை தொடவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார். இவ்வாறு பந்தை பிடிக்கும் வீரர் தட்டை காலால் தொட்டிருக்க வேண்டும். இவ்வாறு கேட்சரும் பிடித்த பந்தை, அடித்தளத்தில் இருக்கும் வீரரிடம் வீசலாம்.
  • ஓட்டக்காரர்கள் ஓடும் போது, எதிரணி வீரர் பந்தை கையில் வைத்துக் கொண்டு அவரை தொட்டால், அப்பொழுதும் அவர் வெளியேற்றப்படுவார்.
  • ஒரே பந்துவீச்சில் எத்தனை வீரர்களை வேண்டுமென்றாலும் வெளியேற்றலாம். ஒரே சமயத்தில், இருவரை வெளியேற்றினால், அதனை 'இரட்டை ஆட்டம்' என்பர்.

குறிக்கோள்

தொகு

மட்டையாடும் அணி அதிக ஓட்டங்களை எடுக்க முற்படுவர். பந்துவீசும் அணி அதை தடுக்க முற்படுவர். இரு அணிகளுக்கும் 9 வாய்ப்புகள், மட்டையாடுவதிலும் பந்துவீச்சிலும் தரப்படும். இந்த விளையாட்டின் குறிக்கோள், 9 ஆட்டங்களின் முடிவில் எதிரணியை விட அதிக பட்ச ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும்.

புள்ளி விபரங்கள்

தொகு

அடிபந்தாட்டத்தில் பல வகையான புள்ளி விபரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம் [4]

மட்டையாடுபவர் புள்ளி விபரங்கள்

தொகு

மட்டையாடும் போது ஏற்படும் புள்ளி விபரங்கள் கீழ் காணுங்கள்

  • ஒற்றை ஆட்டம் - அனைத்து போட்டிகளிலும் சேர்த்து முதலாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
  • இரட்டை ஆட்டம் - இரண்டாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
  • மூன்று ஆட்டம் - மூன்றாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
  • கிராண்ட் சிலாம் - அனைத்து போட்டிகளிலும் சேர்த்து எடுத்த மொத்த கிராண்ட் சிலாம்கள்
  • வீட்டு ஒட்டங்கள் - முழு வீட்டு ஓட்டத்தின் கூட்டு எண்ணிக்கை
  • ஸ்டிரைக் வெளியேற்றம் - மூன்று முறை வாய்ப்பிலும் பந்தை அடிக்காமல் வெளியேறிய மொத்த எண்ணிக்கை

ஓட்டக்காரர்கள் புள்ளி விபரங்கள்

தொகு
  • திருடிய ஒட்டங்கள் - ஆட்டத்தின் போது திருடிய அடித்தளங்களின் மொத்த எண்ணிக்கை
  • திருடிய வெளியேற்றம் - அவ்வாறு திருடும் போது வெளியேற்றப்பட்ட மொத்த எண்ணிக்கை
  • திருடிய அடித்தள சதவீதம் - திருடிய அடித்தளங்களும், திருடாத அடித்தளங்களும் உள்ளே சதவீதம்

பந்துவீச்சு புள்ளி விபரங்கள்

தொகு
  • மட்டையாளர்கள் எண்ணிக்கை - பந்துவீசும் போது எதிர்கொண்ட மொத்த மட்டையாளர்களின் எண்ணிக்கை
  • முழு ஆட்டம் - ஒரு போட்டி முழுவதும் தாமே பந்துவீசுய, மொத்த போட்டிகளின் எண்ணிக்கை
  • ஆட்டங்கள் - பந்துவீசிய மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை
  • ஆரம்ப பந்துவீச்சு - போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீசிய போட்டிகளின் எண்ணிக்கை
  • ஓட்டமின்மை - தாம் பந்துவீசும் போது, எந்த ஒட்டங்களும் எடுக்காத போட்டிகளின் எண்ணிக்கை

தடுப்பாளர்களின் புள்ளி விபரங்கள்

தொகு

ஆடிகளத்தில் பந்தை மட்டையாளர்கள் அடித்தப்பின், பந்தை பிடித்து அடித்தளத்திற்கு வீசி, எதிரணி வீரர்களை வெளியேற்றும் வீரர்களே, தடுப்பாளர்கள்.

  • உதவிகள் - வீரர்கள் பந்தை பிடித்து/மடக்கி வீசும் போது, அடித்தளத்தில் நின்று பந்தை பிடிப்பது, உதவியாகும். அத்தகைய உதவிகளின் மொத்த எண்ணிக்கை
  • இரட்டை ஆட்டம் - இரட்டை ஆட்டங்களின் மொத்த எண்ணிக்கை
  • ஆட்டங்கள் - ஒரே இடத்தில் ஆடிய மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை

உபகரணங்கள்

தொகு
  • மட்டை உருட்டுக் கட்டை போன்ற வடிவில் அதிகபட்சமாக் 106செ.மீ (42") வரை நீளம் கொண்டதாக இருக்கும். பெரும்பாலான மட்டைகள் சுமார், 34 (86 செ.மீ) இருக்கும். அதன் குறுக்களவு பந்து படும் இடத்தில் 2.5 (6.4 செ.மீ) இருக்கும்
  • பந்து மையத்தில் கார்க் கொண்டு, அதனை சுற்றி நூல் புரி மற்றும் வெள்ளை மாட்டுத் தோல் கொண்டிருக்கும். இதனை சிவப்பு தையல்கள் மூலம் தைத்திருப்பனர். இதன் அளவு சுமார் நம் கை முட்டி அளவிலிருக்கும், அதாவது 9"(23 செ. மீ) குறுக்களவு கொண்டிருக்கும்.
  • களத்தில் இருப்பவர்கள் பந்தைப் பிடிப்பதற்காக ஒரு கரத்தில் பெரிய அளவு கையுறை அணிந்திருப்பார்கள். மேலெழும்பி வரும் பந்தை பிடிக்க வசதியாக, இந்தக் கையுறையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் வலை பின்னப் பட்டிருக்கும்.
  • மட்டையாளர்கள் தலைக்கவசமும், மட்டையாளருக்கு பின் நின்று பந்தை பிடிப்பவர் தலை, மார்பு, கால் முதலியவற்றிற்கு கவசமும் அணிந்திருப்பார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sargis, Joe (August 3, 1981). "The World Games slipped out of town Monday, quietly..." United Press International. பார்க்கப்பட்ட நாள் August 13, 2018.
  2. "Official Baseball Rules" (PDF) (2019 ed.). Major League Baseball. Archived (PDF) from the original on May 2, 2019. பார்க்கப்பட்ட நாள் September 3, 2021.
  3. League, Little. "Rules, Regulations, and Policies – Little League" (in en-US). Little League. https://www.littleleague.org/playing-rules/rules-regulations-policies/. 
  4. http://mlb.mlb.com/documents/0/4/0/224919040/2017_Official_Baseball_Rules_dbt69t59.pdf

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிபந்தாட்டம்&oldid=3752088" இலிருந்து மீள்விக்கப்பட்டது