அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பற்றி யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத் தொடரில் (29 C/40) பிரேரணையாக? முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் சூலை 29. 1998 ம் திகதி இடப்பட்ட CL/3494 இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைசர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமை வணிகம்

தொகு

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

வரலாறு

தொகு

ஆப்பிரிக்கஅமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ” விற்குத் தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425), 2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை

தொகு

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

உரோமர் நாகரிகத்தில் அடிமைமுறை

தொகு

உரோமர் காலத்திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்தது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர். கி.பி.400 களில் அங்கு அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

அத்திலாந்திக் அடிமை வணிகம்

தொகு

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர். அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

அடிமை வியாபாரம்

தொகு

ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

தொகு

வில்லியம் வில்பர்போர்ஸ்

தொகு

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்' முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சி

தொகு

பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

ஹெய்டி எழுச்சி

தொகு

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும், கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும், டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும், ஈகுவடார் 1854இலும், பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

அமெரிக்காவின் நிலை

தொகு

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர்.

இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது. உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள், தனிக் கோவில்கள், தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின. கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

தற்காலத்தில் அடிமைகள்

தொகு

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக 'அடிமை ஒழிப்பு சங்கம்' தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.

  • அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும், தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
  • இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டு, வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.
  • கட்டாய சேவை – அரசாங்கம், அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, கட்டாய வேலைகளை – துன்புறுத்தியோ, வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.
  • அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ, கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.
  • ஆள் கடத்துதல் – மனிதர்கள், பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது, ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு எடுத்துச் செல்லுதல்.
  • சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில், குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.
  • வீடுகளில் பணிப்பெண்கள் நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

எமது கடமை

தொகு

தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

உலக சமயங்கள் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவு அளித்தல்: திசம்பர் 2, 2014

தொகு

”அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்” திசம்பர் 2, 2014ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வகையில் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நாளில், உலகத்தில் நிலவுகின்ற பலவகையான அடிமை முறைகளை அழித்தொழிப்பதற்கு நாடுகள், சமயங்கள், சமூகக் குழுக்கள் முன்வர வேண்டும் என்று சமயத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

வத்திக்கான் நகரில் கத்தோலிக்க கிறித்தவம், கீழை மரபுவழி கிறித்தவம், ஆங்கிலிக்கம் ஆகிய கிறித்தவ திருச்சபைகளின் தலைவர்களும், இசுலாம் சமயத் தலைவர்களும், யூதம், இந்து சமயம், பவுத்தம் போன்ற உலக சமயங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து 2014, திசம்பர் 2ஆம் நாள் “அடிமை முறை ஒழிப்பை ஆதரிக்கும் அறிக்கை” ஒன்றில் கையெழுத்திட்டனர்.[1]

வெளி இணைப்புகள்

தொகு
  1. அடிமை முறை ஒழிப்பு நாள் அறிக்கை 2014