அட்டதச ரகசியம்
பிள்ளை லோகாச்சாரியர் 18 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றை ‘அட்டதச ரகசியம்’ என்பர்.
அட்டதச ரகசியம் என்பது இரகசியமாகக் கேட்டு உணரத்தக்க பதினெட்டு வைணவ நூல்களின் தொகுதி ஆகும். இப்பதினெட்டும் மணிப்பிரவாள நடையில் அமைந்த உரைநடை நூல்களாகும். இவற்றை இயற்றியவர் பிள்ளை லோகாசாரியார் ஆவார். இவை அனைத்துக்கும் மணவாள மாமுனி விளக்கம் அளித்தார்.[1] இவற்றின் காலம் 16ஆம் நூற்றாண்டு.[2]
இதில் அடங்கிய பதினெட்டு நூல்கள்
தொகு- முமுக்ஷூப்படி- திருமந்திரம், துவயம், சரம சுலோகம் என்னும் மூன்று மந்திரங்களின் விளக்கவுரை.
- தத்துவத்திரயம்- வைணவ சமயத்திற் கூறப்படுகின்ற சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் தத்துவம் மூன்றையும் பற்றிக் கூறுவது.
- அர்த்தபஞ்சகம்- வீடுபேற்றை விரும்புவார் அறிய வேண்டிய ஐந்து கருத்துக்களை விளக்கும் நூல். ஐந்து கருத்துக்களாவன: இறைவனியல்பு, உயிர் இயல்பு, உயிர் இறைவனையடையாமல் தடுத்துநிற்கும் வினையியல்பு, அத்தடையைப் போக்கி இறைவனை யடைதற்குரிய உபாயத்தினியல்பு, இறைவனை யடைந்து பெறும்பயன் என்பன.
- ஸ்ரீவசனபூஷணம் - வேதம் முதலிய நூல்கள், ஆழ்வார்களுடைய பாசுரங்கள், பூர்வாசாரியர்களுடைய ஒழுக்கங்கள் முதலியவற்றிலிருந்து அறிதற்குரிய நுண்பொருள்கள் பலவற்றைத் தொகுத்துரைக்கின்ற ஒரு சிறந்த நூல்.
- அர்ச்சிராதி - வைணவர்கள் வீட்டுலகை எய்தும்போது அவர்கள் செல்லும் வழி, ஆங்காங்கெய்தும் சிறப்பு இவற்றைக் கூறும் நூல்.
- பிரமேயசேகரம்- உய்தற்குரிய மக்கள் இறைவனருள் தொடங்கி வீடுபேறீறாக அடையும் நிலைமைகளைக் கூறும் நூல்.
- பிரபந்நபரித்ராணம்- வீடுபேற்றுக்குத் தன் முயற்சியைவிட்டு இறைவனையே தஞ்சமாக அடைந்த ஒருவனுக்கு அவ்விறைவனைத் தவிரப் பிறர் எவரும் ரக்ஷகரல்லர் என்பதை விளக்கும் நூல்.
- சாரசங்கிரகம்- வைணவர்களுக்கு மிக முக்கியமான மந்திரங்கள் மூன்றில் துவயம் என்னும் மந்திரத்திற்குப் பத்துப் பொருள் கூறி, அவற்றைத் திருவாய் மொழியின் பத்துப் பகுதிகளோடும், ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு பொருளாக, அமைத்துக் கூறும் நூல்.
- சம்சார சாம்ராஜ்யம்-உடம்பை ஓர் இராச்சியமாகவும், அறியாமை முதலிய தீக்குணங்களை அங்கங்களாகவும், உயிரை அரசனாகவும் உருவகப்படுத்திக் கூறிப் பின்னர், உயிர் நல்வழியடையு மாற்றைக் கூறும் நூல்.
- நவரத்ன மாலை -வைணவர்கள், இறைவனையும் அடியார்களையும் உலக மக்களையும் பிறரையும் எவ்வாறு கருதவேண்டும் என்பதுபற்றி ஒன்பது கருத்துக்களைக் கூறும் நூல்.
- நவவிதசம்பந்தம்- இறைவனுக்கும் உயிர்க்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை அட்டாக்கரமந்திரங் காட்டிக் கூறும் நூல்.
- யாத்ருச்சிகப்படி- திருமந்திரம், சரம சுலோகம், துவயம் என்னும் மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறும் நூல்.
- பரந்தபடி- இதுவும் மேற்கூறிய மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறுவதே. இது மிக விரிவாக உள்ளது.
- ஸ்ரீய: பதிப்படி- இதுவும் மேற்கூறிய மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறுவதே.
- தத்துவ சேகரம் திருமாலே முழுமுதற் கடவுள் என்பதை வேதம் முதலிய பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி நிறுவும் நூல்.
- தனித்வயம்- துவய மந்திரத்தின் விரிவான உரை.
- தனிச்சரமம்- சரம சுலோகத்தின் விரிவான உரை.
- தனிப்பிரணவம் - பிரணவத்தின் விரிவுரை.
உசாத்துணை
தொகு- ↑ தமிழ் கலைக்களஞ்சியம், தொகுதி 1, பக்கம் 286-287
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005