அணுக்கரு
அணுக்கரு (Atomic nucleus) என்பது ஓர் அணுவில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே நேர்மின்னி, நொதுமி ஆகிய அணுக்கருனிகள் உள்ளன.
இந்த அணுக்கருவின் ஆரம் (ஐதரசன் போன்ற பாரமற்ற அணுக்களில்) 1.6 fm (1.6 x 10−15 மீ) முதல் (யுரேனியம் போன்ற பாரமான அணுக்களில்) 15 fm வரையாகும்.
"அணுக்கரு" என்ற சொல் என்பது முதன் முதலில் 1844 இல் மைக்கேல் பாரடேயினால் "அணுவொன்றின் மையப்புள்ளி" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது. தற்கால எளிய விளக்கம் 1912இல் எருணசுட்டு ரூதர்ஃபோர்டுவினால் தரப்பட்டது.[1]
அணுக்கருவானது நேர்மின்னிகளையும் நொதுமிகளையும் (இரு வகை பாரியான்கள், baryons) அணுக்கரு விசை மூலம் பிணைப்பில் வைத்திருக்கிறது. இந்த பாரியன்கள் மேலும் உட்பகுப்பான நுண்அணுத்துகள்களான குவார்க்குகளினால் அணுக்கருப் பெருவிசை (strong interaction) மூலம் பிணைக்கப்பட்டிருக்கின்றன.
அணுக்கரு நிலைப்புத் தன்மை
தொகுகதிரியக்கமுடைய அணுக்கருக்கள் நிலையற்றன. அவை அழிந்து வேறு ஒரு தனிமமாக மாறுதலடைகின்றன. அணுக்கரு நிலைப்புத் தன்மைக்கு (Stability of atomic nucleus) நியூட்ரான்- புரோட்டான் விகிதம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த விகிதம் ஒன்றாக (1) உள்ள தனிமங்கள் அதிக நிலையானதாகக் காணப்படுகின்றன. தனிம அட்டவணையில் தொடக்கநிலை கருக்கள் (அணுஎண் 20 வரையிலான கருக்கள்) அதிக நிலைப்புடன் காணப்படுகின்றன. அவைகளின் N/P விகிதம் ஒன்றாகவே உள்ளன. ஈலியம், பெரிலியம், கார்பன், ஒட்சிசன், நியான் போன்ற தனிமங்கள் நிலையானக் கருக்களைக் கொண்டுள்ளன. இத் தனிமங்கள், ஒரு ஆல்பா துகளை அடுத்தடுத்த தனிமங்களுடன் சேர்ப்பதால் பெறப்படுகின்றன.
x-அச்சில் புரோட்டான்களின் எண்ணையும் y-அச்சில் நியூட்ரான்களின் எண்ணையும் எடுத்துக் கொண்டு பெறப்பட்ட வரைபடம் நிலையானக் கருக்கள் எல்லாம் ஒரு பட்டையில் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. இப்பட்டையின் மேலும் கீழுமுள்ள தனிமங்கள் கதிரியக்கமுடையனவாக உள்ளன[2].