அணுக்கருனி

அணுக்கருனி (நியூக்ளியான், Nucleon) என்பது அணுக்கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். நேர்மின்னியும், நொதுமியும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் தனிமங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. ஹைட்ரஜன் அணுவில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற எல்லாத் தனிமங்களிலும் இருவகையான அணுக்கருனிகள் உண்டு. அணுக்கருனிகளின் மொத்தத் திணிவே (பொருண்மையே) அணுவின் பொருண்மைக்கு மிக அணுக்கமானதாக இருக்கும். ஏனெனில் எதிர்மின்னிகளின் திணிவு மிகக் குறைவே.

அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும், நொதுமியும் அணுவின் அடிப்படைத் துகள்கள் என 1960கள் வரை நம்பி வந்தனர். அணுக்கருவினுள் ஒரே வகையான நேர்மின்மம் கொண்ட நேர்மின்னிகளும், மின்மம் அற்ற நொதுமிகளும் ஒன்றாக கருவினுள் இருக்கத் தேவையான அணுக்கருவினுள் நிகழ்ந்த விசை உறவாட்டங்களை அணுக்கருவின் உள்விசை நிகழ்வுகள் என்று அறிந்திருந்தனர். இதற்கு அடிப்படையானதை அணு விசை அல்லது அணுக்கருப் பெருவிசை (Strong Force) என்று அழைத்தனர். ஆனால் இன்றைய இயற்பியலில், அணுக்கருவினுள் உள்ள அணுக்கருனிகள் அடிப்படைத் துகள்கள் அல்ல என்றும் அவையே மேலும் நுட்பமான அடிப்படை நுண்துகள்களாகிய குவார்க் என்பவைகளால் ஆனவை என்று அறிந்துள்ளனர். இன்றைய இயற்பியலில் அணுக்கருவில் இரு பாரியான்கள் (baryons) இருப்பதாகக் கூறுவர். பாரியான் என்பது கிரேக்கச் சொல்லாகிய barys = heavy (கனமானது, எடை, திணிவு, பளு, பாரம் மிக்கது) என்பதில் இருந்து 1953 ஆம் ஆண்டளவில் ஆக்கிய சொல். இந்த பாரியான்கள் மூன்று குவார்க் என்னும் அடிப்படை நுண்துகளால் ஆனவை. அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும் நொதுமியும் பரவலாக அறிந்த பாரியான்கள் ஆகும், ஆனால், மிகக்குறுகிய நேரமே தோன்றி மறையும் பாரியான்களும் உண்டு. நேர்மின்னியானது இரண்டு மேல் குவார்க்கும் ஒரு கீழ்க் குவார்க்கும் சேர்ந்து ஆன பாரியான். நொதுமியானது இரண்டு கீழ்க் குவார்க்கும் ஒரு மேல் குவார்க்கும் கொண்ட பாரியான் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கருனி&oldid=2266934" இருந்து மீள்விக்கப்பட்டது