அதிகாலையின் அமைதியில் (நூல்)
அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் (பிறப்பு 1924) எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கதை.
நூலாசிரியர் | பரீஸ் வஸீலியெவ் |
---|---|
உண்மையான தலைப்பு | The Dawns are quiet here |
மொழிபெயர்ப்பாளர் | பூ. சோமசுந்தரம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | போர்க்கால ருஷ்ய கதை |
வெளியீட்டாளர் | பாரதி புத்தகாலயம் |
வெளியிடப்பட்ட நாள் | 2006 |
பக்கங்கள் | 152 |
ISBN | 81-89909-04-5 |
சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய வீரத்தைக் கூறும் கதை. பெரும்புகழ் பெற்ற இந்நாவல் இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
தான் பிறந்த குடும்பப் பொறுப்பை 14 வயது சிறுவனாயிருந்த போதே ஏற்றுக் கொண்ட வஸ்கோவ் சார்ஜண்டு மேஜர். இருப்புப் பாதை கிளை நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்படும் ஆண்கள் சிறுமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, குடி போன்ற குணங்கள் இல்லாத படை வீரர்களை கேட்பதால் அவனது அமைதியை குலைக்கும் விதத்தில் பெண்கள் படையை அவனுக்கு கீழ் வேலை செய்ய அனுப்புகின்றனர்.
30 வயதிலேயே தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை அடுத்த தலைமுறையினர் போன்ற நோக்கோடு பார்க்கும் வஸ்கோவுக்கும் அவனது உற்சாகமான படைப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும், படையினரில் ரீதா என்ற பெண் இரண்டு ஜெர்மானியரைக் காட்டில் பார்த்து தகவல் சொல்ல ஜெர்மானியர் இருவர் என்ற அனுமானத்தில் தமது தலைமையில் ஐந்து படைப்பெண்களுடன் தனக்கு மட்டுமே தெரிந்த சதுப்புநில குறுக்குப் பாதை வழியாக அழைத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும், ஜெர்மானியர் பதினாறு பேர் என்று தெரிய வரவும் லீஸா என்ற படைப்பெண்ணை திருப்பி உதவிக்காக அனுப்புவதும், சிறிய அளவிலான லீஸாவின் ஒருதலை நேசமும், சதுப்பு நிலத்தில் மாட்டி உதவி கொண்டு வர முடியாமல் லீஸா உயிரிழப்பதும், மீதமுள்ள படைப்பெண்களுடன் ஜெர்மானியருடன் போராடி தனது கையையும், தனது படையைச் சேர்ந்த மற்றவர்களின் உயிரையும் இழக்க நேர்வதும், எதிரிகள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவிடாமல் ஜெர்மானியரை எதிர்கொண்டு அவர்களது முயற்சியைத் தடுப்பதும், இதற்கிடையில் தாய்நாட்டைக் காக்கும் முயற்சியில் அந்தப்பெண்களின் தீவிரத்தைக் கண்டு வஸ்கோவ் கொள்ளும் சகோதரபாசமும் ஆசிரியரால் உணர்வு பூர்வமாகவும் கதைக்களத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.
இந்நூல் திரைப்படமாக வெளிவந்து உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் வெளிவந்த ’பேராண்மை’ திரைப்படம் இத்திரைப்படத்தின் அடிப்படையில் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
உதவி நூல்
தொகுஅதிகாலையின் அமைதியில் : பரீஸ் வஸீலியெவ்; பாரதி புத்தகாலயம்