வியப்பு அணி (உயர்வு நவிற்சி அணி) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது[1].

அதிசய அணி இலக்கணம்

தொகு

கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது அழகை உவந்து சொல்லும் போது, உலகவரம்பைக் கடவாதபடி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசயம் என்னும் அணியாகும். அதிசய அணி மிகைப்படுத்திக் கூறுவதுதான். இங்கு 'உலகவரம்பு கடவாமல்' கூறுதல் என்பது, கவிஞர்கள் வழக்கமாக மிகைப்படுத்திக் கூறும் மரபுக்கு முரண்படாமல் கூறவேண்டும் எனப் பொருள்படும்.

மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி
உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்
                                   --(தண்டிஇ நூ. 54)

(உவந்து = மகிழ்ந்து; உரைப்புழி = சொல்லும்போது; இறவா = கடவாத; சான்றோர் = உயர்ந்தோர்)

அதிசய அணியின் வகைகள்

தொகு

அதிசய அணி ஆறு வகைப்படும்.

  • பொருள் அதிசயம் (ஒரு பொருளின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • குண அதிசயம் (ஒரு குணத்தின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • தொழில் அதிசயம் (ஒரு தொழிலின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.
  • ஐய அதிசயம் (ஐயப்பட்டுக் கூறுவதன் மூலம் ஒருபொருளைஉயர்த்திக் கூறுவது.
  • துணிவு அதிசயம் (ஐயம் தெளிந்து கூறுவதன் மூலம் ஒருபொருளை உயர்த்திக் கூறுவது.
  • திரிபு அதிசயம் (ஒரு பொருளை வேறுவேறு பொருளாக மாற்றி (திரிபுற்று) வியக்குமாறு உயர்த்திக் கூறுவது.

பொருள் அதிசயம்

தொகு

ஒரு பொருளின் இயல்பை அதிசயம் தோன்றக் கூறுவது 'பொருள் அதிசயம்' எனப்படும்.

(எ.கா.)

பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்
அண்ட முகடு நெருப்பு அறாது - ஒண்தளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதல்மேல் விழி

(புரம் - திரிபுரம், அரக்கர்களின் மூன்று கோட்டைகள்; முகடு - உச்சி; வல்லி - மலைமகள்; உமையம்மை; மேரு = மேருமலை; வில்லி = வில்லாக உடையவர்; நுதல் - நெற்றி.)

பாடல்பொருள்:

ஒளிமிக்க தளிர் போன்ற கைகளை உடைய மலைமகள் தழுவியதால் குழைந்த திருமேனியையும், வட மேருமலையாகிய வில்லினையும், நெற்றியின் மேல் கண்ணினையும் உடைய சிவபெருமான் முன்னொரு காலத்தில் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது மென்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் கூறப்படும் பொருள் 'திரிபுரத்தை எரித்த தீ' ஆகும். சிவரெுமான் நகையிலிருந்து புறப்பட்ட தீயானது இன்றும் அண்டமுகட்டில் அணையாமல் உள்ளது என்று யாவரும் வியக்கும்படி கூறியதால் இப்பாடல் பொருள் அதிசயம் ஆயிற்று.

திரிபு அதிசயம்

தொகு

திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள். ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும். இதனை மயக்க அணி என்றும் கூறுவர்.

(எ.கா.)

திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பால் என்று வாய்மடுக்கும்; - அங்கு அயலே,
காந்தர் முயக்கு ஒழிந்தார், கைவறிதே நீட்டுவரால்
ஏந்திழையார் பூந்துகிலாம் என்று

(வள்ளம் - கிண்ணம்; காந்தர் - காதலர், தலைவர்; முயக்கு - புணர்ச்சி; வறிதே = வீணாக; துகில் - ஆடை.)

பாடல்பொருள்:

நிலவு சொரிந்த வெள்ளிய வெண்ணிறக் கதிர்கள், நிலா முற்றத்தில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்தன பசுங்கிளிகள், அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று மயங்கி, அதனை வாய்வைத்துப் பருக முயன்றன. அதுமட்டுமன்றி, அங்கு ஒரு புறத்தில் தம் காதலரைப் புணர்ந்து நீங்கிய மகளிர், நிலவுடைய வெள்ளிய நிலாக் கதிர்களைத் தமது வெண்துகிலாகக் கருதி, அதனைப் பற்றுவதற்காகக் கைகளை வீணாக நீட்டுவார்கள்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில், வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்த நிலவின் ஒளியைப் பசுங்கிளிகள் பால் என்றும், மகளிர் தம்முடைய துகில் என்றும் திரித்து மயங்கியதை அதிசயித்துக் கூறியதனால் இது திரிபு அதிசயமாயிற்று.

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_அணி&oldid=3170798" இலிருந்து மீள்விக்கப்பட்டது