அதிரம்பாக்கம்
அதிரம்பாக்கம் அல்லது அத்திரம்பாக்கம் (Attirampakkam அல்லது Athirampakkam) என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இது சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்தியாவில் பழமையான வரலாற்றுக்கு காலத்துக்கு முந்தைய கல் கருவி கலாச்சாரத் தளமாக இவ்விடம் உள்ளது.[1][2]
அதிரம்பாக்கம் தமிழக தொல்லியல் வரலாற்றில் உன்னதமான இடங்களில் ஒன்றாகும். இத்தலம் 1863 ஆம் ஆண்டு பிரித்தானியரான நிலவியலாளர் இராபர்ட் புருசு ஃபூட் என்பவரால் 1863 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இங்கு அவ்வப்போது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டது (கிருஷ்ணசாமி 1938; I.A.R 1965-67). இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தையக் கால ஆய்வுகளின் குறிப்பிடத்தக்க கருத்துரு வளர்ச்சியில் இவ்விடம் முக்கியத்துவம் வாய்ந்தாகும். இவ்விடம் தழும்பழி, கற்கோடாரிகள் தயாரிப்பு மையம் செயல்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் கொற்றலையாற்றின் வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள அதிரம்பாக்கம் கீழை மற்றும் மத்திய பழங் கற்காலத் தளங்களில் ஒன்றாகும். தற்போது இப்பகுதியில் 50,000m² பரப்பளவில் கருவிகள் மழைச் சிற்றாறுகளால் அரிக்கப்பட்டு வருகின்றன.[3]