சென்னை

தமிழ்நாட்டின், மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் தலைநகரம்

சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.[10] சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

சென்னை
மெட்ராஸ், மதராசுப்பட்டினம்
சென்னப்பட்டினம்
மாநகரம்
அடைபெயர்(கள்): தெற்காசியாவின்டிட்ராயிட், தென்னிந்தியாவின் தலைவாசல்
சென்னை is located in தமிழ் நாடு
சென்னை
சென்னை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
சென்னை is located in இந்தியா
சென்னை
சென்னை
சென்னை (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°5′N 80°16′E / 13.083°N 80.267°E / 13.083; 80.267ஆள்கூறுகள்: 13°5′N 80°16′E / 13.083°N 80.267°E / 13.083; 80.267
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
முன்னாள் பெயர்மதராசு
அமைப்பு1639
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகர சென்னை மாநகராட்சி
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • ஆணையாளர்ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்
 • காவல்துறை ஆணையாளர்சங்கர் ஜிவால்[2] ஐபிஎஸ்
பரப்பளவு[3][4]
 • மாநகரம்426 km2 (164.5 sq mi)
 • Metro[6][4]1,189 km2 (459.07 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை (2011)
 • மாநகரம்70,88,000[1]
 • தரவரிசை6வது
 • பெருநகர்[7]86,53,521
89,17,749 (Extended UA)[5]
 • பெருநகர தரம்4வது
இனங்கள்தமிழர்
மொழிகள்
 • சொந்தமொழிதமிழ்
 • அலுவல்மொழிதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீடு600xxx
தொலைபேசி குறியீடு+91-44
வாகனப் பதிவுTN-01 to TN-14, TN-18, TN-22, TN-85
பெருநகர மொ.உ.உ$59 - $66 பில்.[8][9]
இணையதளம்Chennai Corporation

சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014 இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.[11]

வரலாறுதொகு

 
சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு[12] செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும், பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522 ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - "புனித தோமஸ்") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துக்கீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி, போர்த்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது.

1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் 'சென்னப்பட்டணம்' என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும், அதனைச் சுற்றிய பகுதிகளும் 'சென்னை' என அழைக்கப்படுகிறது.

டிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில், சென்னையும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 22 ஆம் நாள் சென்னை நகரம் உருவாகி 375 ஆண்டுகள் நிறைவுற்ற தினமாகக் கொண்டாடப்பட்டது.[13][14][15][16][17][18][19]

புவியியல்தொகு

 
சென்னையிலுள்ள புகழ்பெற்ற‌ மெரீனா கடற்கரை
 
சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள குளம்

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.

சென்னை நகரத்தின் பரப்பளவு 426 கி.மீ.². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.

சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்குப் பருவமழையும், முக்கியமாக வடகிழக்குப் பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ. மழை பெய்கிறது.

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை, நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில், இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில், கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது.[20][21] கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில், கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 • மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும்,
 • அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும்,
 • அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

நிர்வாகம்தொகு

 
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம். 1913இல் ரிப்பன் துரையை கௌரவப்படுத்தும் விதமாகக் கட்டப்பட்டது.

சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் சைதை துரைசாமி என்பவரும் துணைமேயர் பெஞ்சமின் என்பவரும் அக்டோபர் 29, 2011 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.

தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.

தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

பொருளாதாரம்தொகு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.

1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) இந்திய இரயில்வேயின் முதன்மையான இரயில் உற்பத்தித் தொழிற்சாலையாகும். அம்பத்தூரில் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இருக்கின்றன; மற்றும் பாடி, ஆவடி, எண்ணூர், திருப்பெரும்புதூர், மறைமலைநகர் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ். குழுமத் தொழிற்சாலைகள், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , போர்ட் , மிட்சுபிசி, TI சைக்கிள்ஸ் , எம்.ஆர்.எஃப்., பி.எம்.டபிள்யூ. (BMW), ரெனோ நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடி யில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

மக்கள் தொகைதொகு

 
பரங்கிமலையிலிருந்து காணப்படும் சென்னை மாநகரம்

சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், இந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.

இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த மொழி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது.

கலாச்சாரம்தொகு

 
எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், இந்தோ-சார்சனிக் கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்; ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்பட்டு, 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.

சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன.

 
சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள 'விக்டோரியா பப்ளிக் ஹால்'.

சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் இரசிக்கப்படுகின்றன. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம்.

அரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

சமயங்கள்தொகு


 

சென்னையின் சமயங்கள் (2011)

  இந்து (81.3%)
  சைனம் (1.1%)
  மற்றவை (0.03%)
  குறிப்பிடவில்லை (0.82%)

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, சைனம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உள்ளன.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்காலக் கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.

தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் என்பவர், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது.

சென்னையில் மதங்களின் சதவீதம் (%)
வருடம் இந்து இசுலாம் கிறிஸ்தவம் சைனம் பௌத்தம் சீக்கியம் மற்றவை குறிப்பிடவில்லை
1951 81.6 9.9 7.8 0.4 0.07 0.07 0.09 0
2001 81.3 9.4 7.6 1.1 0.04 0.06 0.23 0
2011[22] 80.7 9.4 7.7 1.11 0.06 0.06 0.03 0.82

போக்குவரத்துதொகு

 
சென்னை போக்குவரத்து வரைபடம்

சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம்.

1832 ஆம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

1837இல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்குப் பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது.

1931 ஆம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே, புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னையில் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றிய போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கி வருகின்றன.

ஆகாய வழிப் போக்குவரத்துதொகு

 
சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்

சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.

கடல் வழிப் போக்குவரத்துதொகு

 
சென்னைத் துறைமுகம்

சென்னைத் துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

இரயில் வழிப் போக்குவரத்துதொகு

 
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
 
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய இரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் இரயில் நிலையமும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

சாலை வழிப் போக்குவரத்துதொகு

 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்
 
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து

சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர, நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை திருச்சி, திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, ஹைதராபாத், பெங்களூர், மும்பை,விஜயவாடா,கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன.

சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள், 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றன. இவை தவிர, பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தகவல் தொடர்புதொகு

தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை, இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு மற்றும் அகலப்பட்டைஇணைய இணைப்புகள் அளிக்கின்றன. ஆக்ட் பிராட்பேண்ட், ஹாத்வே, யூ பிராட்பேண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அல்லாத  அகலப்பட்டை இணைய இணைப்புகள் மட்டும் அளிக்கின்றன. பெரும்பாலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் குறைந்தது 100mbps வேகத்தில் அளிக்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்புகள் அளிக்கின்றன. ஏர்டெல், ஜியோ, வோடபோன் நகர்பேசி நிறுவனங்கள் 2G, 3G, 4G அலைக்கற்றை சேவைகளையும், பி.எஸ்.என்.எல். 2G, 3G அலைக்கற்றை சேவைகளையும் அளிக்கின்றன.

அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக், சன் நியூஸ், கே. டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம். மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை, ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப். எம். கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும்.

தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆஃப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.

மருத்துவம்தொகு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, MIOT மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.

காலநிலைதொகு

சென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர்.[23] அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக 38–42 °C (100–108 °F) இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை 18–20 °C (64–68 °F). மிகக் குறைந்த வெப்பநிலையாகப் 15.8 °C (60.4 °F) பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்சமாகப் 45 °C (113 °F) பதிவாகியுள்ளது.[24] சராசரி மழைப்பொழிவு 140 cm (55 in) [25] இந்நகரம் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் 257 cm (101 in) பதிவாகியுள்ளது.[26] ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும். [27] மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[28]

தட்பவெப்ப நிலைத் தகவல், சென்னை, இந்தியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
37
(99)
39
(102)
43
(109)
45
(113)
43
(109)
41
(106)
40
(104)
39
(102)
39
(102)
34
(93)
33
(91)
45
(113)
உயர் சராசரி °C (°F) 29
(84)
31
(88)
33
(91)
35
(95)
38
(100)
38
(100)
36
(97)
35
(95)
34
(93)
32
(90)
29
(84)
29
(84)
33.3
(91.9)
தாழ் சராசரி °C (°F) 19
(66)
20
(68)
22
(72)
26
(79)
28
(82)
27
(81)
26
(79)
26
(79)
25
(77)
24
(75)
22
(72)
21
(70)
23.8
(74.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14
(57)
15
(59)
17
(63)
20
(68)
21
(70)
21
(70)
22
(72)
21
(70)
21
(70)
17
(63)
15
(59)
14
(57)
14
(57)
பொழிவு mm (inches) 16.2
(0.638)
3.7
(0.146)
3.0
(0.118)
13.6
(0.535)
48.9
(1.925)
53.7
(2.114)
97.8
(3.85)
149.7
(5.894)
109.1
(4.295)
282.7
(11.13)
350.3
(13.791)
138.2
(5.441)
1,266.9
(49.878)
ஆதாரம்: இந்திய வானியல் துறை[29]

கல்விதொகு

 
சென்னை ஐஐடியில் உள்ள கசேந்திரா வட்டம் இரவில்
 
கிண்டி பொறியியல் கல்லூரி

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, இலயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர என்.ஐ.எஃப்.டி. (National Institute of Fashion Technology – தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ. (Asian College of Journalism), சென்னை சமூகப்பணிப் பள்ளி (Madras School of Social Work) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.

நூலகங்கள்தொகு

 
அண்ணா நூற்றாண்டு நூலகம்
 • சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890 இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதராஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.[30]
 • செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி யால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ   180 கோடி செலவில் கட்டப்பட்டது.[31]

விளையாட்டுதொகு

 
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம்

மற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டாகும்.[32] சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் சனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி. பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.

எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995 ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன.

மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்தொகு

கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி. வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில், சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன், ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

பொழுதுபோக்குதொகு

உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகுக் குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், MGM Dizzee World உள்ளிட்டவைகள் சுற்றுலாத் தலங்களாகும்.

பிரச்சனைகள்தொகு

 • மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
 • அதிக மக்கள் தொகை அடர்த்தி
 • 25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
 • மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
 • வாகன நெரிசல்
 • மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை
சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள்

சென்னை ராஜீவ்காந்திசாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை போன்ற பகுதி மக்கள், 2013 ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை, அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன; சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு, மீண்டும் தண்ணீர்உறிஞ்சப்படஅனுமதிக்கப்பட்டபின்னர்இந்நிறுவனங்களின்தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.[33]

நிலத்தடிநீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால், வேறுவழியின்றி, விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி, சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப் படுகின்றது.[34]

சகோதர நகரங்கள்தொகு

உலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளன. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே.

நாடு நகரம் மாநிலம்/மாகாணம் வருடத்திலிருந்து
  ரசியா   வோல்கோகிராட்[35]   ஓல்கோகிராட் ஓபிளாசுடு 1966
  ஐக்கிய அமெரிக்கா   டென்வர்[36]   கொலராடோ 1984
  ஐக்கிய அமெரிக்கா சான் அன்டோனியோ[37]   டெக்சாசு 2008
  மலேசியா கோலாலம்பூர்[38]   கூட்டாட்சிப் பகுதி 2010

சென்னை பெரு வெள்ளம்தொகு

2015 டிசம்பர் மாதம், சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி, தூர்வாரப்படாததால், உடையும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் படிக்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Chennai Corporation is re-christened Greater Chennai Corporation". The Hindu. பார்த்த நாள் 31-01-2016.
 2. "சென்னை காவல் ஆணையர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு". https://www.maalaimalar.com/news/district/2021/05/08011758/2611203/Tamil-News-TN-govt-order-3-IPS-Officers-Inculding.vpf. 
 3. "Chennai: PhaseII". மூல முகவரியிலிருந்து 24-04-2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 April 2014.
 4. 4.0 4.1 "Chennai Expansion Could Be Tricky, Suggests History". The New Indian Express. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2015/aug/24/Chennai-Expansion-Could-Be-Tricky-Suggests-History-804135.html. பார்த்த நாள்: 30-05-2017. 
 5. "INDIA STATS : Million plus cities in India as per Census 2011". National Informatics Centre. பார்த்த நாள் 20-08-2015.
 6. 6.0 6.1 "About Greater Chennai Corporation". Official Website of Greater Chennai Corporation. மூல முகவரியிலிருந்து 2015-06-02 அன்று பரணிடப்பட்டது.
 7. "Tamil Nādu (India): State, Major Agglomerations & Cities - Population Statistics in Maps and Charts". City population.de.
 8. "Global city GDP rankings 2008-2025". PwC. மூல முகவரியிலிருந்து 4 மே 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16-12-2009.
 9. "Global city GDP 2014". Brookings Institution. பார்த்த நாள் 8-05-2015.
 10. "`மெட்ராஸ்’ என்ற பெயர் வந்தது எப்படி? உலவும் கட்டுக்கதைகளும்... உண்மையும்!".
 11. http://www.nytimes.com/interactive/2014/01/10/travel/2014-places-to-go.html?_r=0 52 Places to go in 2014
 12. Roberts, J: "History of the World" (Penguin, 1994)
 13. http://www.bbc.co.uk/tamil/india/2014/08/140822_chennai375part1.shtml சென்னை 375 : சிறப்புத் தொடரின் முதல் பகுதி - காணொலி
 14. http://tamil.thehindu.com/multimedia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article6344759.ece சென்னை 375 - சிறப்பு வீடியோ பதிவு
 15. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6341380.ece#im-image-0 சென்னை 375 | அரிய புகைப்படத் தொகுப்பு
 16. http://www.dinamani.com/cinema/2014/08/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/article2386398.eceசென்னை 375-ஆவது ஆண்டு பாடல் வெளியீடு
 17. http://www.dinakaran.com/chennai/index.asp# சென்னை 375 - பழைய சென்னை நகர படக் காட்சிகள்
 18. http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/08/140825_chennai_birthday_four.shtml சென்னை 375: வளர்ந்த நகரமும் வளராத வசதிகளும் – காணொலி காட்சி
 19. http://www.bbc.co.uk/tamil/india/2014/08/140824_chennai_birthday.shtml சென்னை 375: சமூக நீதிப் பயணத்தில் சென்னை – காணொலி காட்சி
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-01-11 அன்று பரணிடப்பட்டது.
 21. Way back in the 17th-18th Century, the seashore extended as far inland as Angappa Naicken Street. Fishermen's huts lined the coastal stretch, right from Thiruvanmiyur to Thiruvotriyur. The land on which the Fort St. George stands was once a banana grove, said to be under the control of Madhuresan, a fisherman chieftain. The East India Company bought the garden from him and converted it into a trading centre.
 22. http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW33C-01%20MDDS.XLS
 23. ராமகிருஷ்ணன், T (மே 18, 2005). "Hot spell may continue for some more weeks in the State". த இந்து. Archived from the original on 2005-05-30. https://web.archive.org/web/20050530081653/http://www.hindu.com/2005/05/18/stories/2005051813790700.htm. பார்த்த நாள்: 2007-09-04. 
 24. "அதிகபட்ச வெப்பநிலை". த இந்து (The Hindu). May 30, 2003. Archived from the original on 2011-07-11. https://web.archive.org/web/20110711171303/http://www.hinduonnet.com/2003/05/31/stories/2003053104790101.htm. பார்த்த நாள்: 2007-04-25. 
 25. "இந்திய வானியல் துறை, Chennai Regional Website". மூல முகவரியிலிருந்து 2012-11-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011 பிப்ரவரி 17.
 26. ராமகிருஷ்ணன், T (சனவரி 3, 2006). "Entering 2006, city's reservoirs filled to the brim". த இந்து. Archived from the original on 2007-02-28. https://web.archive.org/web/20070228083427/http://www.hindu.com/2006/01/03/stories/2006010315310300.htm. பார்த்த நாள்: 2007-05-04. 
 27. "NASA climate data visualized". Classzone.com. பார்த்த நாள் 2010-09-01.
 28. கொட்டித் தீர்த்த மழை: குடியிருப்புகளில் தேங்கிய நீர்- கடும் அவதிக்குள்ளான மக்கள் தி இந்து தமிழ் 24 நவம்பர் 2015
 29. "Climatological Information for Chennai". Indian Meteorological Department. மூல முகவரியிலிருந்து 2009-03-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-25.
 30. "கன்னிமரா பொது நூலகம்". மூல முகவரியிலிருந்து 2007-09-11 அன்று பரணிடப்பட்டது.
 31. டெக்கான் எரால்டு
 32. "சென்னையைப் பற்றி". தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். மூல முகவரியிலிருந்து 2007-10-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-10-04.
 33. http://www.thehindu.com/news/cities/chennai/daily-chores-severely-impaired-due-to-water-crisis/article4857698.ece
 34. http://infochangeindia.org/agenda/the-politics-of-water/stealing-farmers-water-to-quench-chennais-big-thirst.html
 35. "International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai". The Hindu. 2006-11-26. Archived from the original on 2012-10-19. https://web.archive.org/web/20121019041811/http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm. பார்த்த நாள்: 2009-03-03. 
 36. "Overview of Chennai, India: Denver Sister Cities International". Denversistercities.org. மூல முகவரியிலிருந்து 2008-06-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-03-03.
 37. "Mayor announces Chennai, India Sister City Agreement". Official Website of the City of San Antonio (February 28, 2008). மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 October 2010.
 38. "Chennai, Kuala Lumpur sign sister city pact". The Hindu. November 26, 2010. Archived from the original on 29 நவம்பர் 2010. https://web.archive.org/web/20101129155307/http://www.hindu.com/2010/11/26/stories/2010112661760300.htm. பார்த்த நாள்: 26 November 2010. 

வெளி இணைப்புகள்தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை&oldid=3323617" இருந்து மீள்விக்கப்பட்டது