மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.[1]

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (பெயரளவு) அளவைக் கொண்டு, அமெரிக்க டாலரில், உலகப் பொருளாதாரங்களின் நிலப்படம், அனைத்துலக நாணய நிதியம், 2014.
முதல் பத்தி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை)

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான ஜிடிபி என்பதை பரவலாக தனிசொல்லாகவே பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட உதவும் இச்சொல் ஓர் பகுதி அல்லது ஓர் தொழிற்றுறையை அளவிடவும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது விற்பனையை விட மதிப்புக் கூட்டலையே அளக்கின்றது; ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகின்றது. ( வெளிவரும் பொருட்களின் மதிப்பிலிருந்து அதனை உருவாக்க பயன்பட்ட மதிப்பைக் கழித்துப் பெறுவதாகும்). காட்டாக, ஓர் நிறுவனம் இரும்பை வாங்கி அதிலிருந்து தானுந்து தயாரிக்கின்றது; இரும்பின் மதிப்பையும் தானுந்து மதிப்பையும் கூட்டினால் ஜடிபி இரட்டிப்பாக எண்ணப்படும்.[2] எனவேதான் மொ.உ.உற்பத்தியில் மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஓர் நிறுவனம் அதே வெளியீட்டிற்கு தயாரிப்புச் செலவையோ பயன்படுத்தப்படும் பொருட்களையோ குறைத்தால் மொ.உ.உ மதிப்பு கூடுகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பொருளாதார வளர்ச்சியை காலாண்டுக்கு காலாண்டோ ஆண்டுக்கு ஆண்டோ ஒப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றி/தோல்விகளை தீர்மானிக்கவும் பொருளாதார பின்னடைவை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).

மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)

இதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேர்ந்திருப்பதன் காரணமாக மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.

உள்நாட்டு உற்பத்தி எதிர் தேசிய உற்பத்தி தொகு

மொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, Gross National Product) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.

மேற்சான்றுகள் தொகு