ஆனந்த விகடன்

தமிழ் வார இதழ்

ஆனந்த விகடன் (ஆங்கில மொழி: Anandha vikatan) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. வாரந்தோறும் நூறாயிரத்திற்கும் மேலான படிகள் அச்சாகி விற்பனையாகும் இதழ். இது இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் இதழ்களின் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது[1]

ஆனந்த விகடன்  
ஆனந்த விகடன்
துறை பல்சுவை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பா. சீனிவாசன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

விகடன் பத்திரிகை தமிழகத்தின் இரண்டாவது பத்திரிகையும் பொதுமக்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிக்கையும் ஆகும். (56 லட்சம் வாசகர்கள்)[2] இலக்கியம், அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, வாணிகம் எனப் பலதுறைகளிலும் தனது கருத்தாக்கங்களை ஆனந்த விகடன் வெளிப்படுத்தி வருகிறது. இதனுடைய வளர்ச்சியாகவே இக்காலத்தில் அவற்றுக்கெனத் தனி இதழ்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனந்த விகடன் என்னும் தனி நிறுவனம் தற்போது விகடன் குழுமமாகச் செயல்பட்டு வருகிறது.

இவை தவிரவும் இணைய தளத்திலும் விகடனின் பங்கு குறிப்பிடத்தக்கது. யூத்புல் விகடன், மின்னிதழ் விகடன் போன்ற வெளியீடுகள் இணையதள வாசகர்களுக்கானவை. அவ்வப்போது இணைப்பு இதழ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளுக்காகத் தற்போது 'என் விகடன்' என்னும் புதிய இணைப்பும் வெளிவருகிறது.

வரலாறு தொகு

ஆனந்த விகடன், மறைந்த பூதூர் வைத்தியநாதய்யர் அவர்களால் 1926 பிப்ரவரியில் மாதாந்திர வெளியீடாகத் தொடங்கப்பட்டது. 1927 திசம்பர் மாமத்துக்கான இதழ் நிதிச் சிக்கல்களால் வெளியிடப்படவில்லை. 1928 சனவரியில், எஸ். எஸ். வாசன் வைத்தியநாதய்யரிடம் இருந்து இதழின் உரிமைகளை வாங்கி, பிப்ரவரி 1928 முதல் புதிய வடிவில் வெளியீட்டை மீண்டும் தொடங்கினார்.[3] பத்திரிக்கையின் தமிழ் மொழிப் பெயரில் (ஆனந்த விகடன்) ஒரு எழுத்துக்களுக்கு ₹25 வீதம் ₹200 (2020 இல் ₹39,000 அல்லது US$510க்கு சமம்) உரிமையை வாங்கினார்.[4] மாதப் பத்திரிகையாக துவக்கப்பட்ட, 'மாதம் இருமுறை' ஆகி, பின் 'மாதம் மும்முறை' என்று வந்து, பிறகு 'வாரப் பத்திரிகை'யாக இதை ஒரு வார இதழாக உருவாக்கினார், விரைவில் விற்பனை உயர்ந்தது. ஆனந்தவிகடன் வாயிலாக கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தமது எழுத்தாற்றலினால் தமிழ்நாட்டில் பரவலாக வாசகர்களையும், பத்திரிகையை ஆவலோடு எதிர்பார்த்து வரவேற்றுப் படிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்தார். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஆனந்த விகடன் வெற்றிகரமாக வெளிவந்துகொண்டுள்ளது. மூத்த பத்திரிகையாளரும் ஊடகவியலாளருமான எஸ். பாலசுப்பிரமணியன் 2006 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இதழின் ஆசிரியராகவும், நிர்வாக இயக்குநராகவும், வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.[5] பாலசுப்ரமணியன் அடுத்தடுத்த தலைமுறை பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் "மானவர் திட்டம்" அல்லது மாணவர் இதழியல் திட்டத்தையும் அவர் தொடங்கினார். 1980களில் விகடனின் வெளியீட்டாளராக பல சாதனைகள் புரிந்ததோடு, ஜூனியர் விகடன் என்ற வாரம் இருமுறை தமிழ் புலனாய்வு இதழையும் அவர் தொடங்கினார். எஸ். எஸ். வாசனின் மகனான இவர், தனது மகன் பி. சீனிவாசனிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு குழுவின் ஓய்வு பெற்ற தலைவராகத் தொடர்கிறார்.

திறனாய்வு தொகு

ஆனந்தவிகடன் பத்திரிக்கையின் நடை போக்கு குறித்து குறிப்பிடும் வல்லிக்கண்ணன் குறிப்பிடுகயில்;

வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பதும், வாழ்க்கையின் துன்ப துயரங்கள், ஏமாற்றங்கள், வெறுமை, வறட்சி முதலியவைகளைக் காண மறுப்பதும், பொதுவாக இனிமைகளையும் சுகங்களையும் கிளுகிளுப்பூட்டும் விஷயங்களையும் கதைப்பொருள் ஆக்குவதுமே விகட மனோபாவமாகவும், 'கல்கி'யின் நோக்கு ஆகவும் இருந்தது. அவ் வழியில் அவரைப் பின்பற்றி எழுதுகிறவர்கள் பெரும் பலர் ஆயினர். இந்த ரக எழுத்து பொழுதுபோக்கு அம்சத்தையே வலியுறுத்தியது. ‘விகடன்' அரசியல் கருத்துக்களையும்-முக்கியமாக தேசியப் பார்வையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் செயல்களையும் பிரசாரப்படுத்தும் எழுத்துக்களை- அந்த அந்தக் காலத்திய அதிவிசேஷமான செய்திகளையும், சங்கீதம், சினிமா போன்ற கலை விஷயங்களையும் வெளியிட்டதுடன் கதைகளுக்கு அதிக இடமும், பழந்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சில பக்கங்களும் ஒதுக்கியது. 'தொடர்கதை'யை வாசகர்களை வசீகரித்து, விடாது பிடித்து வைத்திருக்கும் உத்தியாகவும், பத்திரிகையின் விற்பனையை வளர்க்கத் துணைபுரியும் ஒரு சாதனமாகவும் ஆக்கியது.[6] என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியப் பங்களிப்பு தொகு

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலரையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை ஆனந்த விகடனுக்கு உண்டு. குறிப்பாக ஆனந்த விகடனில் வெளியிடப் பெற்ற முத்திரைக் கதைகள் பல கதாசிரியர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வித்தன. கார்ட்டூன் எனப்படும் கருத்தோவியச் சித்திரங்களும் ஆனந்தவிகடனில் பெயர் பெற்றவை.

இதற்கு முன் வெளியான பிரபலமான தொடர்கள்  தொகு

நானும் விகடனும்  தொகு

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் பக்கம். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய பிரபலங்கள் பங்கெடுக்கின்ற தொடர்.

வட்டியும் முதலும் தொகு

வட்டியும் முதலும் தொடர் எழுத்தாளர் ராஜு முருகனால் எழுதப்படுகிறது. இத்தொடரில் தன் வாழ்வில் பல்வேறு சம்பவங்களையும், சமூக நல கருத்துகளையும் எழுத்தாளர் பதிவு செய்கிறார்.

வலைபாயுதே தொகு

சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்ட நகைச்சுவைகள், தகவல்கள் நடப்பு செய்திகள் இப்பகுதியில் எழுத்தாளர் பதிவு செய்கிறார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.printweek.in/news/irs-2017-vanitha-continues-lead-regional-language-magazines-27929.
  2. "Saras Salil continues its lead in the overall magazine genre". Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  3. S. Pasupathy (10 March 2003). "S. S. Vasan". Archived from the original on 14 March 2017. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  4. "With a finger on people's pulse". தி இந்து. 23 May 2003. Archived from the original on 1 September 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. K. Ramachandran. "Trophy to Remember". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040101101139/http://www.hindu.com/2003/11/16/stories/2003111602121000.htm. 
  6. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_விகடன்&oldid=3742056" இலிருந்து மீள்விக்கப்பட்டது