வேலூர்

தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. வேலூரும் திருவண்ணாமலையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்

வேலூர் (Vellore) (அ) இராய வேலூர் (Raya Vellore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர்.

வேலூர்
இராய வேலூர்
அடைபெயர்(கள்): வெல்லூர், கோட்டை மாநகரம்
வேலூர் is located in தமிழ் நாடு
வேலூர்
வேலூர்
வேலூர், தமிழ்நாடு
வேலூர் is located in இந்தியா
வேலூர்
வேலூர்
வேலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°54′59″N 79°07′57″E / 12.916500°N 79.132500°E / 12.916500; 79.132500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
பகுதிதொண்டை நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்வேலூர் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்கதிர் ஆனந்த் (திமுக)
 • சட்டமன்ற உறுப்பினர்பி. கார்த்திகேயன்
 • மாவட்ட ஆட்சியர்பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.
பரப்பளவு
 • மாநகரம்
87.915 km2 (33.944 sq mi)
ஏற்றம்
239 m (784 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மாநகராட்சி1,85,803
 • தரவரிசை8
 • பெருநகர்
4,84,690
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
632 001
தொலைபேசிக் குறியீடு91- 416
வாகனப் பதிவுTN 23,
சென்னையிலிருந்து தொலைவு138 கி.மீ (86 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு212 கி.மீ (131 மைல்)
சேலத்திலிருந்து தொலைவு213 கி.மீ (132 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு269 கி.மீ (167 மைல்)
இணையதளம்vellore
வேலூர் கோட்டை சிவன் கோயில்

இது தமிழகத் தலைநகரான சென்னைக்கு மேற்கே சுமார் 138 கிலோமீட்டர் (86 மைல்) தொலைவிலும், திருவண்ணாமலைக்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.

இந்நகரம், 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 சதுர கிமீ ) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,77,413 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி,[3] மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 1,85,895 ஆகும். இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. சென்னை பன்னாட்டு விமானநிலையம் இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகனின் ஆயுதமான ஈட்டி எனவும், ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றார். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.[4]

மேலும் வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.

வரலாறு

 
வேலூர் பொற்கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடுகின்றன.

பொ.ஊ. 850 முதல் 1280 வரையான ஆண்டுக் காலத்தில் வேலூர்ப்பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் விசயநகர மன்னர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய குச்சி பொம்மு நாயக்கர் என்ற சிற்றரசர் வேலூர்க் கோட்டையைக் கட்டினார்.

17 ஆம் நூற்றாண்டில், வேலூர் ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாயப் பேரரசின் சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 1753க்கு பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது.

17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லி சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் திப்பு சுல்தானைத் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் கலகம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் தொகை

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
80.09%
முஸ்லிம்கள்
14.28%
கிறிஸ்தவர்கள்
4.79%
சீக்கியர்கள்
0.01%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
1.4%
மற்றவை
0.53%
சமயமில்லாதவர்கள்
0.05%

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூரில் 1,85,895 பேர் வசிக்கின்றனர்.[3] இம்மக்கள் தொகையில் 91,464 ஆண்கள் மற்றும் 94,431 பெண்கள் ஆவர். இந்நகரின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,032 பெண்களாக உள்ளது. இது தேசிய சராசரியான 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்பதைவிடக் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 86.67 சதவீதமாகும். இச்சராசரியில் ஆண் கல்வி 91.68 சதவீதம் மற்றும் பெண் கல்வியறிவு 81.84 சதவீதமாகும். நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18,363 பேர் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.

2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,85,895 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,84,690 ஆகவும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, வேலூரில் இந்துக்கள் 80.09%, முஸ்லிம்கள் 14.28%, கிறிஸ்தவர்கள் 4.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 1.4%, 0.53% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.05% பேர்களும் உள்ளனர்.

இந்தியா அரசின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 36,728 குடும்பங்கள் இருந்தன. மொத்த மக்கள் தொகையில் 13.96% அதாவது 20,531 பேர் தாழ்த்தப்பட்டோர் வகுப்பையும், 0.22 சதவீத மக்கள் அதாவது 340 பேர் பழங்குடியினர் வகுப்பையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வூரில் உள்ள 57,905 தொழிலாளிகளில் 171 பேர் விவசாயிகளாகவும், 257 பேர் விவசாயத்தொழிலாளர்களாகவும், 6,237 பேர் குடிசைத் தொழில் புரிபவர்களாகவும் மற்றும் 51,240 பேர் மற்ற தொழிலாளர்களாகவும் உள்ளனர். மேலும் இங்குள்ள 2,674 குறுந்தொழிலாளர்களில் 23 பேர் குறு விவசாயிகளாகவும் 60 பேர் குறு விவசாயத்தொழிலாளர்களாகவும், 796 பேர் குடிசைத்தொழிலில் குறுந்தொழில் புரிபவர்களாகவும் எஞ்சியுள்ள 1,795 பேர் பிற குறு தொழிலாளர்களாகவும் உள்ளனர். உள்ளூரில் கிடைத்த வேலைவாய்ப்பு குறைந்ததாலும் வெளியூரில் கிடைக்கும் வேலைவாய்ப்பு எளிதாகவும் கூடுதலாகவும் இருந்ததாலும் மக்கள் இடம்பெயர்ந்ததாலும் 1981–2001 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்தது.

2001 கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள நிலப்பகுதியில், 69.88 % வளர்ச்சியடைந்த பகுதியாகவும் 31.12 சதவீத நிலப்பகுதி வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வளர்ந்த பகுதியாக காட்டப்பட்டுள்ளதில் 55.76% குடியிருப்பு நோக்கங்களுக்காகவும், 8.34%, வர்த்தக நோக்கிற்காகவும் 1.58% தொழிற் சாலைகளுக்காகவும் 3.3% கல்விக்காகவும் 16.46% பொது நோக்கிற்காகவும் 10.12% போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிலும் பயன்படுத்தப்படுகிறது. நகரின் சராசரி மக்கள் அடர்த்தி ஹெக்டேருக்கு 241 பேர் ஆகும். மேலும் மக்கள் அடர்த்தி நகர் முழுவதும் ஒரேசீரானதாக இல்லை. அருகந்தம்பூண்டி போன்ற பகுதிகளில் இது அதிகமாகவும் பூந்தோட்டம் போன்ற வெளிப்புறப் பகுதிகளில் குறைந்த அளவிலும் காணப்படுகிறது.

வேலூர் அகல்பரப்புக் காட்சி (இப்புகைப்படத்தை முழுமையாக பார்க்க, இப்படத்தை வலமிருந்து, இடப்புறமாக இழுக்கவும்)

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°55′13″N 79°08′00″E / 12.920219°N 79.133306°E / 12.920219; 79.133306 ஆகும். கடல் மட்டத்திற்கு இவ்வூர் சராசரியாக சுமார் 220 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. ஆண்டு முழுவதும் நகரத்தில் அதிக வெப்பமும் குறைவான மழை பொழிவும் கொண்ட ஒரு வறண்ட காலநிலை நிலவுகிறது. இந்நகரம் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் பாலாற்றின் வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவமைப்பானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்த சமவெளியாக காணப்படுகிறது. இங்கு குறிப்பிட்டு சொல்லும் வகையிலான எந்தக் கனிம வளமும் காணப்படவில்லை. களிமண் வேலூர் வட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது. நகரில் பெரும்பாலும் கல்லும் மண்ணும் சேர்ந்த செம்மண், சரளைமண் முதலிய வகைகள் காணப்படுகின்றன.

வேலூரில் ஆண்டு முழுவதும் சூடான மற்றும் வறண்ட வானிலை நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 40.5 °C (104.9 °F) ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 18.4 °C (65.1 °F) ஆகவும் ஆண்டுதோறும் பதிவாகிறது.

தமிழகத்தில் நிலவுவது போலவே ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பமான மாதங்களாகவும் டிசம்பர் முதல் சனவரி வரை குளிரான மாதங்களாகவும் இங்கு இருக்கிறது. வேலூரின் மழை அளவு ஆண்டிற்கு 996.7 மிமீ (39.24) ஆகும். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை, ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை மழை அளவையே கொண்டு வருகிறது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழையால் இந்நகரம் ஓரளவுக்கு மழை பெறுகிறது. வேலுர் நகரின் ஈரப்பதம் குளிர்காலத்தில் 67 முதல் 86 சதவீதமாகவும் கோடைக்காலத்தில் 40 முதல் 63 சதவீதமாகவும் இருக்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், வேலூர் (2000–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
11.0
(51.8)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை,[5]

பொருளாதாரம்

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேலூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 43.64% ஆகும். வேலூர், மாவட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும், சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 83.35 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 13.52 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 43.64 சதவீதமும் பெண்களின் பங்கு 24.39 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு வேலூர் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தங்கநாற்கர சாலை கணிசமாக இப்பகுதியில் தொழில்துறை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது

வேலூரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில், வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (TEL) காட்பாடியில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட இந்திய அரசாங்கத்தின் வெடிபொருட்கள் நிறுவனம் ஆகும். மற்றும் வேலூர் அருகே உள்ள இறையங்காடு என்ற ஊரில் உலோக மற்றும் வாகன, தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட பிளாஸ்டிக் ஒருங்கிணைந்த பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இவ்வூரில் உள்ள ஆபிசர்ஸ் லைன், காந்தி ரோடு, லாங்கு பஜார், மக்கான், சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகள் வியாபார மையங்களாக விளங்குகின்றன.

நகரின் இதயப் பகுதியான ஐடா ஸ்கடர் சாலையில் கிருத்துவ மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இம்மருத்துவமனை வேலூரின் மிகப் பெரிய வணிகத்தொழில் மற்றும் சேவை நிறுவனமாகும். இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து போகுமிடமாக இம்மருத்துவமனை விளங்குகிறது. உறைவிடம், மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் முதலியன நகரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. தமிழக அரசின் வேலூர் மருத்துவக் கல்லூரி அடுக்கம்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவை தவிர நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம், அப்போலோ மருத்துவமனை முதலியன இங்குள்ள மருத்துவ நிறுவனங்களாகும். இங்குள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology - VIT) அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. விவசாயம் தவிர சிற்றூர்ப்பகுதி மக்கள், நெசவு, பீடி மற்றும் தீக்குச்சி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.

கல்வி

இந்தியாவின் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் வேலூரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, கிருத்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை இரத்தவியல் மற்றும் உயிர் வேதியியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் உலகத்தரம் பெற்றிருந்த காரணத்தால் மத்திய அரசாங்கத்தின் உயிரியல் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து நாட்டின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தை திசம்பர் 2005 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவியது. இதன் தொடர்ச்சியாக இக்கல்லூரி முதிர்ந்த எலியிடமிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மறு செயலாக்கத் திட்டத்தின்மூலமாக மனித கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள் போன்று செயல்பட வைத்து நாட்டின் மருத்துவ மற்றும் அறிவியல் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டின் வடகிழக்கு மண்டலமான வேலூருக்கு அருகில் உள்ள விரிஞ்சிபுரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த 32 ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். வேலூரின் மானாவாரிப் பகுதிகளில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தேசிய நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் (NWDPRA) அக்டோபர் 1997 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 18 நீர்நிலைகளில் நீர் மற்றும் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகள் நடத்துவது ஆகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. வேலூரில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் முதலியன திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கின்றன. தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி மட்டுமே அரசு நடத்தும் பொறியியல் கல்லூரியாக உள்ளது. இந்தியாவின் சிறந்த தனியார் பொறியியல் பல்கலைக்கழகமாக, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) விளங்குகிறது என்று இந்தியா டுடே வார இதழ் மதிப்பீடு செய்துள்ளது.

கிருத்துவ மருத்துவ கல்லூரியும், மருத்துவமனையும்

 
கிருத்துவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

இந்தியா மற்றும் ஆசியாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று கிருத்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும். வேலூர் நகரின் இதய பகுதியில் உள்ள இம்மருத்துவமனை நகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரம் வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது.

1954 இல் நிறுவப்பட்ட ஆக்சிலியம் மகளிர் கல்லூரி வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். இது தவிர நகரத்தில் சாயிநாதபுரம் அருகே தனபாக்கியம் கிருஷ்ணசுவாமி முதலியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓட்டேரி அருகே முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, புகழ் பெற்ற சி.எம்.சி கண் மருத்துவமனைக்கு அருகில் ஊரிசுக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. 1898 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமை வாய்ந்த ஊரிசுக் கல்லூரியில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு எஸ். இராதாகிருட்டிணன் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.

அரசினர் சட்டக்கல்லூரி 2008 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவப்பட்டது. காட்பாடியில் அமைந்துள்ள இக்கல்லூரியில் ஆண்டுக்கு 80 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மூன்றாண்டு சட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இவை தவிர இங்கு அதிகமான அரபிக் கல்லூரிகளும் உள்ளன.

சுற்றுலா

 
வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேசுவரர் கோயில் அகல்பரப்புக் காட்சி

பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன. இந்த நகரில் பல பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது. வேலூருக்கு அருகில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.

 
இரத்தினகிரி
 
இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

வேலூர் நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடம் வேலூர்க்கோட்டை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, திப்பு சுல்தானின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கடைசி அரசன் விக்கிரம ராசசிங்கா ஆகியோர் அரசாங்கக்கைதிகளாக இக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தனர். இக்கோட்டையில் ஒரு தேவாலயம், ஒரு மசூதி மற்றும் ஒரு சிவன் கோவில் ஆகியன உள்ளன. சலகண்டீசுவரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன்கோயில் அதன் சிறப்பான சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடமென அறியப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டையில்தான் வெடித்தது. கனத்த மதில்களும், அவற்றில் சீரற்ற இடைவெளியில் எழுப்பிய கொத்தளங்களும் வட்டக்கோபுரங்களும் இணைந்து வேலூர் கோட்டையின் முக்கிய பாதுகாப்பு அரணாக விளங்கின. கோட்டையின் தலைமை மதில்கள் பெரிய கருங்கற்களால் (கிரானைட்) கட்டப்பட்டவை. நிலத்துக்கு அடியிலுள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் பெறும் வகையில் அகன்ற அகழி கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ளது.

வேலூர்க் கோட்டைக்குள் இக்கோட்டையின் வயதொத்த சலகண்டேச்சுரர் கோவில் அமைந்துள்ளது. வேலுர்க் கோட்டையின் அமைப்புமுறை தென்னிந்திய இராணுவக் கட்டுமானத்திற்கு ஒரு குறிப்பிடதகுந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆங்கிலேயருடனான போரின்போது இக்கோட்டைக்குள் இடம்பெற்றுள்ள திப்புமகாலில், திப்புசுல்தான் தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. திப்புவின் மகன்களுடைய கல்லறைகள் வேலூரில் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இக்கோட்டையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக சிறப்புடன் பாதுகாக்கப்படுகிறது.

அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்து இருக்கிறது. இது 1985 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கலை, தொல்லியல், வரலாறு, ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல, மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயவியல், அஞ்சல், தாவரவியல், மண்ணியல், விலங்கியல் தொடர்புடைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்படாத வடஆற்காடு மாவட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ள கண்காட்சியகத்தில் உள்ளன. சிறப்புக் கண்காட்சியில் இம்மாவட்டத்தின் கி.மு 400 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தாலான இரட்டை வாள், பிற்காலப் பல்லவர்கள் முதல் விசயநகர அரசர்கள் காலம் வரையிலான கற்சிற்பங்கள் , கடைசி இலங்கை மன்னன் விக்ரமராசசிங்கா பயன்படுத்திய தந்தத்தினாலான சதுரங்கப் பலகைகள் மற்றும் சதுரங்கக்காய்கள் முதலிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கலை முகாம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வெட்டுகள் மற்றும் படிமவியல் ஆய்வு முதலியன அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

சலகண்டேச்சுரர் கோயில், இலட்சுமி தங்க கோவில், வாலாசா தன்வந்திரி கோயில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் ஆகிய கோயில்கள் வேலூரைச் சுற்றியுள்ளன. ஸ்ரீ லட்சுமி கோவில் தற்பொழுது மிகவும் புகழ்பெற்றுப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைக்கோடியில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் ஆன்மீகப் பூங்காவாக திகழ்கிறது. சக்தி அம்மா என்பவரின் தலைமையில் உள்ள நாராயணி பீடத்தில் இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கட்டிடக்கலையில் சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான தங்கக் கைவினைஞர்களால் நுண்ணிய கை வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இங்குதான் 300 கோடி ரூபாய் செலவில் சுமார் 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி கோவிலின் வெளிப்புறம் தங்கத்தகடுகள் மற்றும் தங்கத்தட்டுகளால் வேயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகருக்கு அருகிலுள்ள இரத்தினகிரியில் பாலமுருகனடிமை சாமிகளால் எழுப்பப்பட்டுள்ள முருகன் கோவில் இங்குள்ள மற்றொரு முக்கியமான இந்து மதமதக் கோவில் ஆகும். வேலூர் கோட்டையின் உள்ளே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செயிண்ட் ஜான் தேவாலயம் நகரில் அமைந்துள்ள தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் மிகப்பெரிய அரபிக்கல்லூரியை உள்ளடக்கிய பெரிய மசூதி நகரின் மையப்பகுதியில் உள்ளது.

போக்குவரத்து

பேருந்து சேவைகள்

 
நெடுஞ்சாலை 46- ல் உள்ள மேம்பாலம், வேலூர்
வழி சேருமிடம்
காட்பாடி மார்க்கமாக

சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்னூல், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.ஜி.எப் மற்றும் ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

ஆற்காடு மார்க்கமாக
ஆரணி மார்க்கமாக ஆரணி, திண்டிவனம், புதுச்சேரி, செஞ்சி, விழுப்புரம், கடலூர், அவலூர்பேட்டை, வேட்டவலம், மேல்மலையனூர், மேல்மருவத்தூர், வந்தவாசி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, மரக்காணம், நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள்
கண்ணமங்கலம் மார்க்கமாக கண்ணமங்கலம், படவேடு மற்றும் நகரப் பேருந்துகள்
போளூர் மார்க்கமாக

போளூர், திருவண்ணாமலை, செங்கம், திருக்கோவிலூர், தானிப்பாடி, சாத்தனூர் அணை, திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, அறந்தாங்கி, விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, மார்த்தாண்டம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரியலூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள்

ஆம்பூர் மார்க்கமாக ஆம்பூர், கே.ஜி.எப், பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், கோபிச்செட்டிப்பாளையம், தர்மபுரி, பென்னாகரம், தேன்கனிக்கோட்டை, அரூர், ஊத்தங்கரை, ஓசூர், மேட்டூர், நாமக்கல், குப்பம், பாலக்கோடு, அருப்புக்கோட்டை, பள்ளப்பட்டி, தேனி, கரூர், திருநெல்வேலி, ஒகேனக்கல், சிவகாசி, விருதுநகர், மற்றும் கர்நாடக மாநிலம், கேரள மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள்
ஸ்ரீபுரம் மார்க்கமாக ஸ்ரீபுரம், அணைக்கட்டு, ஒடுகத்தூர், ஜவ்வாது மலை செல்லும் பேருந்துகள்

தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர வேலூரில் இருந்து பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை வேலூருடன் இணைக்கிறது. வேலூர் கோட்டைக்கு எதிரில் நகரப் பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் பசுமை வளையத்திற்கு அருகில் மத்திய பேருந்து நிலையமும் அமைந்துள்ளன. இவைதவிர வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் சித்தூர் பேருந்து நிலையம் உள்ளது.

தொடருந்து போக்குவரத்து

விமானப் போக்குவரத்து

வேலூர் நகரிலுள்ள அப்துல்லாபுரம் என்னும் பகுதியில் ஒரு விமான நிலையம் உள்ளது. 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்நிலையம் வானூர்தி பயிற்சி திட்டங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 200 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 100 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

பயனளிக்கும் சேவைகள்

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வேலூர் நகருக்குத் தேவையான மின்சாரம் ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. வேலூரும் அதன் புறநகர் பகுதிகளும் இணைந்தது வேலூர் மின்வினியோக வட்டமாக செயல்படுகிறது. இவ்வட்டத்திற்கென ஒரு தலைமை விநியோகப் பொறியாளர் பிராந்திய தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நகருக்குத் தேவையான குடிநீர் வழங்கல் சேவையை மாநகராட்சி அளித்து வருகிறது. பாலாறு நீர் தேக்க பணி மற்றும் கருகம்பத்தூர் நீர் தேக்கப் பணி திட்டங்கள் மூலம் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பத்து மேல்நிலை தொட்டிகளில் பாலாற்று நீரை சேகரித்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரிலிருந்த 33,772 குடும்பங்களுக்கு 16,371 இணைப்புகள் இருந்ததாக 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2000–2001 ஆண்டு காலத்தில் சுமார் 7.4 மில்லியன் லிட்டர் குடிதண்ணீரை மாநகராட்சி தினசரி விநியோகித்துள்ளது. இவைதவிர ஓட்டேரி ஏரி, பொன்னை ஆறு, ஆழ்துளைக் கிணறுகள் முதலியன நகருக்கு குடிநீரளிக்கும் பிற நீர் ஆதாரங்களாகும்.

2011 ஆம் ஆண்டுள்ள நகராட்சி தரவுகளின் படி, சுமார் 83 மெட்ரிக் டன் திடக்கழிவு ஒவ்வொரு நாளும் குடியிருப்பு வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் சுகாதார துறை மூலமாக 16 வார்டுகளிலும் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதாள சாக்கடைதிட்ட வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீரானது சாக்கடைகள், திறந்த வெளிகள் மூலமாக அப்புறப்படுத்தப் படுகின்றன. தற்பொழுது 2011 ஆவது ஆண்டில் திட்டங்கள் துவக்கப்பட்டு சுமார் 145 கிலோமீட்டர் நீளத்திற்கு வசதிகள் உருவாக்கப்படுள்ளன. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 24 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் ஒரு கால்நடை மருத்துவமனையும் நகரமக்களின் சுகாதாரத்தை கவனித்து வந்தன. 5241 தெருவிளக்குகள், 735 சோடியம் விளக்குகள், 73 பாதரசஆவி விளக்குகள் மற்றும் 4432 குழல் விளக்குகள் மூலமாக மாநகராட்சி நகரத்தை ஒளியூட்டுகிறது. இவைதவிர நகராட்சியால் நேதாஜி தினசரி அங்காடி ஒன்றும் பராமரிக்கப்படுகிறது.

அரசியல் மற்றும் நகராட்சி நிர்வாகம்

மாநகராட்சி அலுவலர்கள்
மேயர்
ஆணையர்
துணை மேயர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்ட மன்ற உறுப்பினர் பி. கார்த்திகேயன்
நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்

வேலூர் மாநகராட்சியானது வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கதிர் ஆனந்த் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த பி. கார்த்திகேயன் வென்றார்.

1866 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த வேலூர் நகரம் 1947 ஆம் ஆண்டில் முதல் நிலை நகராட்சியாக உயர்வடைந்து 1970 ஆம் ஆண்டில் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஆகத்து 2008 ஆம் ஆண்டில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் 60 தொகுதிகள் (வார்டு) உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உள்ளார். மாநகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம், பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்கு பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் ஆட்சித்துறைத் தலைவரான நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. மாநகராட்சித் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்கள் 60 பேர் கொண்ட அமைப்பு சட்டமியற்றும் பணியை மேற்கொள்கிறது.

தமிழ்நாடு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான உட்பிரிவு மூலமாக நகரின் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள நான்கு காவல் நிலையங்களில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றும் அடங்கும். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப்பதிவேடுகள் பிரிவு முதலிய சிறப்புப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

  1. "Vellore Corporation GO No.221 dated 28.09.2010" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  2. "Primary Census Abstract - Urban Agglomeration". Registrar General and Census Commissioner of India. Archived from the original (XLS) on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  3. 3.0 3.1 http://www.census2011.co.in/census/city/472-vellore.html
  4. 4.0 4.1 Conversion of City Corporate Plan to Business Plan for Vellore Corporation (PDF) (Report). Commissioner of Municipal Administration, Government of Tamil Nadu. 2008. Archived from the original (PDF) on 1 செப்டெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2012.
  5. "Climatological Information for Tirupattur,India". India Meteorological Department.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்&oldid=3970035" இலிருந்து மீள்விக்கப்பட்டது