செம்மண் என்ற மண்வகை, செவ்வாய் கோளிலும் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. நாம் வாழும் பூமியின் மண்ணைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

  1. செம்மண்
  2. செம்புறை மண்
  3. கரிசல் மண்
  4. வண்டல் மண் என்பனவாகும்.

செம்மண் தோற்றம்

தொகு

செம்மண் வகைகள் அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப்பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளதால், இவை சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆழமற்றது. இளகிய இயல்புடையது ஆகும்.

இந்திய செம்மண்

தொகு

இந்திய நாட்டின்பரப்பளவில் செம்மண் 3,50,000 சதுர கிலோமீட்டர்கள் பரவியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின், மொத்தப் பரப்பளவு 130இலட்சம் எக்டேர் ஆகும். இதில் 78 இலட்சம் எக்டேர் பரப்பளவுள்ள நிலம், செம்மண் நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர். [1]

செம்மண்ணின் குணங்கள்

செம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் மணலும் கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக நீர் பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை கயோலினைட்[2] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை.

வேதியியல் குணங்கள்

செவ்வல் மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும்.இவைகளில் கரையும் உப்புகளின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் மின் கடத்தும் திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. இரும்பு ஆக்சைடின் அளவு 6 சதம் என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து உரத்தை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 சதம் என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கரிமப் பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும்.

சுண்ணாம்புச்சத்து : இம்மண்ணில் சுண்ணாம்புச்சத்து 0.2 சதத்திற்கு குறைவாகவே உள்ளதால், சுண்ணாம்புச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பயிர்களுக்கு சுண்ணாம்புச்சத்தை இடுவது அவசியமாகும். அயனிகள் மாற்றும் திறன் 100 கிராம் மண்ணில் 15 மி.மி என்ற அளவிற்குக்குறைவாகவே உள்ளது. எனவே, ஊட்டச்சத்துக்களை மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் பயிரின் சத்துக்களை, பயிர் வளரும் பருவத்தில் 2 அல்லது 3 முறை சிறிது சிறிதாக பிரித்து இடுவது சிறந்தது.

இம்மண்ணில், தழைச்சத்து சராசரியாக ஒரு எக்டேருக்கு 150 கிலோ உள்ளது. இது பயிர்களின் தேவைக்கு குறைவான அளவாகும். மணிச்சத்து, ஒரு எக்டேருக்கு 15 கிலோ உள்ளது. சாம்பல்சத்து, ஒரு எக்டேருக்கு 250 கிலோ உள்ளது மணிச்சத்தும், சாம்பல்சத்தும் பயிர்களுக்கு தேவையான அளவு உள்ளது.

எனவே, தழைச்சத்தினை, இம்மண்ணிற்கு பொதுப்பரிந்துரையினை விட சற்றுக் கூடுதலாகவும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பொதுப்பரிந்துரையின்படியும் அளிக்க வேண்டும்.

செம்மண் வகைகள்

தொகு

இச்செம்மண்ணை, மேலும் ஐந்து உள் வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

  1. தொமிலி செம்மண்
  2. வளம் குன்றிய செம்மண்
  3. மணல் கலந்த செம்மண்
  4. ஆழம் குறைந்த செம்மண்
  5. ஆழமான செம்மண் ஆகியவையாகும்.

செம்மண்ணின் இடர்பாடுகளைச் சமன் செய்தல்

தொகு

செம்மண்ணின் இயல்புகளை அறிந்து, அதன் இடர்பாடுகளை பின்வரும் வழிகளில் சமன் செய்தால் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கலாம்.

சூழ்நிலை இடர்பாடுகள் : செவ்வல் மண்ணின் மிக முக்கியமான இடர்பாடுகள்

  1. மேல் மண் இறுக்கம்,
  2. அடி மண் இறுக்கம்,
  3. குறைவான நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை ஆகியன ஆகும்.

1) மேல் மண் இறுக்கம் :செவ்வல் மண்ணில் மழை பெய்து, வெப்பத்தால் காயும் போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.

1.1 மேல் மண் இளகியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் உள்ள நிலையில், மழை பெய்யும் போது மண் துகள்கள் சிதறி, மீண்டும் ஒன்றோடு ஒன்று இணையும்போது மண் இறுக்கம் ஏற்படுகிறது.

1.2 உவர்தன்மையுள்ள நீரைத் தொடர்ந்து மண்ணில் பாய்ச்சுவதால், நீர் ஊடுறுவும் தன்மை குறைந்து மண்ணிறுக்கம் ஏற்படுகிறது.

1.3 சிலிகா, கல்சியம்கார்பனேட் போன்ற பொருட்கள் மண்ணில் அதிகமாக இருந்தாலும், மண் துகள்கள் ஒருங்கிணைந்து மண் இறுக்கம் ஏற்படுகிறது.

இவ்வாறு மண் இறுக்கம் ஏற்படுவதால் மண்ணின் பருவஅடர்த்தி[3] அதிகமாகி, நீர் இறங்கும் திறனும், நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் குறைந்து விடுகின்றன.

சமன் செய்தல்

  1. தாவரக்கழிவுகளை நிலப்போர்வையாக பயன்படுத்துவதால், மழைத்துளிகள் மண்ணை நேரிடையாகத்தாக்கி மண் இறுக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  2. மேல் மண் இறுக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: விதைத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மேல் மண் இறுக்கம் ஏற்பட்டால் முட்கலப்பைக்கொண்டு நிலத்தைக் கீறிவிட்டு முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்யலாம்.
  3. மேல் மண் இறுக்கம் ஏற்படும் நிலங்களில் சற்று அதிக அளவில் விதைகள் இடுவதால், பயிர் எண்ணிக்கை குறையாமல் இருக்கச் செய்யலாம்.
  4. சால் பாத்திகள் அமைத்து பக்கவாட்டில் விதைப்பதால், விதை முளைப்புத்திறன் அதிகமாகிறது.
  5. ஆணிவேருள்ள[4] பயிர்களான ஆமணக்கு, துவரை போன்ற பயிர்களை பயிர் செய்தால், அவை மண் இறுக்கத்தால் அதிகம் பாதிக்கடைவதில்லை.

2)அடிமண் இறுக்கம்: மண்ணின் மேல் பகுதியைவிட, அடிப்பகுதியில் களிமண்ணின் அளவு அதிகமாக உள்ளதால் அடிமண் இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் வேர்கள் ஆமாகச் செல்வது தடுக்கப்படுகின்றது. இதனால் அடி மண்ணிலிருந்து பயிர்களுக்குக் கிடைக்கக்கூடிய நீரும், பயிர்ச்சத்துக்களும் வேர் மூலம் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகின்றது.

அடிமண் இறுக்கத்தைப்போக்கும் வழிமுறைகள்:

2.1 உளிக்கலப்பை [5] மூலம் ஆழமாக உழுதுவிட வேண்டும்.

2.2 ஒரு எக்டேருக்கு 10 டன் என்ற அளவில் 'பிரஸ்மட்' என்ற சர்க்கரை ஆலைக்கழிவை இடலாம். 2.3 விதைப்பு வரிசையில் அதிக ஆழமாக உழுது விட வேண்டும். அதிக அளவில் தொழு உரம், மக்கிய தழை உரங்கள் இடுதல் வேண்டும்.

வேதியியல் இடர்பாடுகள்

  1. பயிர்ச்சத்துக்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை,
  2. மணிச்சத்தை நிலை நிறுத்தும் தன்மை,
  3. அமில நிலை,
  4. குறைவான சுண்ணாம்பு,
  5. கரிமப் பொருள்களின் அளவு ஆகியவை முக்கிய இடர்பாடுகளாகும்.

மாற்று நடவடிக்கைகள்:

பயிர்களுக்குச் சத்துக்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க உரங்களை 2 அல்லது 3 முறை பிரித்து இடுவது நல்லது. மணிச்சத்தை நிலைநிறுத்தும் தன்மையை மாற்ற, தொழுஉரம் எக்டேருக்கு 10 டன் என்ற அளவிலோ இட்டு மணிச்சத்தின் நிலைநிறுத்தும் தன்மையைக் குறைக்கலாம்.

அமிலத்தன்மை:

  • பொதுவாக செம்மண் நிலங்கள் அமிலத்தன்மை உடையதாக இருக்கும். எனவே, இவ்வகை நிலங்களில் பாறைப் பாசுபேட் [6] உரத்தையும்,
  • இரும்பு ஆலைகளிலிருந்து கிடைக்கும் இரும்பு ஆலைக்கழிவு[7] உரத்தையும் இட்டு, மணிச்சத்து பயிர்களுக்குக் கிடைக்கும் படி செய்யலாம்.
  • அமிலத்தன்மையுள்ள செம்மண் நிலங்களில் மாலிப்டினம் என்ற நுண்ணூட்டச்சத்து குறைவாகவே இருக்கும். எனவே, சோடியம் அல்லது அமோனியம் மாலிப்டேட் என்ற உரத்தை பயிர்களின் தேவைக்கேற்ப இடலாம்.

சுண்ணாம்புச்சத்து: செம்மண் நிலங்களில் சுண்ணாம்புச்சத்து குறைவாக இருப்பதால் பருத்தி, வெங்காயம், நிலக்கடலை, புகையிலை முதலிய சுண்ணாம்புச்சத்துத் தேவைப்படும் பயிர்களுக்கு சிப்சம் இட வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி -[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கயோலினைட் - Kaolinite
  3. மொத்த அடர்த்தி = bulkdensity
  4. ஆணிவேர் = முதன்மை வேர் = primary root
  5. உளிக்கலப்பை = chisel Plough
  6. பாறைப் பாசுபேட் = rock phosphate
  7. இரும்பு ஆலைக்கழிவு = basic slag

உயவுத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மண்&oldid=3390776" இலிருந்து மீள்விக்கப்பட்டது