பருத்தி (Cotton) என்பது ஒரு மென்மையான, விரிந்து பருத்த முதன்மையான நாரிழை ஆகும்.இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும்.பருத்தி மால்வசியே குடும்பத்தின் கோசிப்பியம் பேரினத்தைச் சேர்ந்தது. இதன் நாரிழை முழுக்க முழுக்க செல்லுலோசுவால் ஆனதாகும். இயற்கையான நிலைமைகளில், பருத்திப் பந்துகள் விரிந்து விதைகளை வெளியிடும்.

இந்திய நூற்பாலையில் பதப்படுத்துவதற்கு முன்பு கையால் பருத்தி மாசுநீக்கல் (2010)
பருத்திக் காய்கள் வெடித்து பஞ்சு வெளிவந்துள்ள காட்சி

பருத்தி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மட்டுமே விளையும் செடிவகை இழைப் பயிராகும்.காட்டுவகைப் பருத்தியினத்தின் பேரளவு பன்முகப் பெருக்கம் முதன்மையாக மெக்சிகோவிலும் பிறகு ஆஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமைகிறது.[1] பருத்தி பழைய, புதிய உலகங்களில் தனித்தனியாக வீட்டினமாக்கப்பட்டது.இந்தச் செடியிலிருந்து நாம் பலவகையில் பயன்படுத்தும் மென்மையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. பருத்திச் செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.

பருத்தி நாரிழை நூலாக நூற்கப்படுகிறது அல்லது இழையாகத் திரிக்கப்படுகிறது. இதில் இருந்து மென்மையான காற்றூடும் துகில் (துணி) நெய்யப்படுகிறது. முந்து வரலாற்றுக் காலத்தில் இருந்தே பருத்தியாடைகள் வழக்கில் வந்துள்ளன; கிமு ஐந்தாய்ரம் ஆண்டுகட்கு முன்பே பருத்தியாடத் துண்டுகள் சிந்துவெளி நாகரிகத்திலும் ஆடையெச்சங்கள் கிமு ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்பே பெரு நாட்டிலும் கிடைத்துள்ளன.

பண்டைய காலத்தில் இருந்தே பயிரிடப்பட்டாலும், நூற்புக் கதிரின் இயற்றலுக்குப் பிறகே பருத்திநூல் விலை குறைந்து பருத்தியாடை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது; இன்று இதுவே மிகப் பரவலாகப் பயன்படும் இயற்கை நாரிழையாக ஆடைகளில் அமைகிறது.

பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பலபடிகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.

ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய நிலையில் ஏறத்தாழ, 25 மில்லியன் டன் அல்லது 110 மில்லியன் பருத்திச் சிப்பங்கள் 2.5% உலகின் வறட்சி நிலங்களில் விளைகின்றன. உலகின் பேரளவு பருத்தி விலைச்சல் சீனாவில் உள்ளது. என்றாலும் இந்த பருத்தி முழுவதும் உள்நாட்டிலேயே பயன்கொள்ளப்படுகிறது. பல்லாண்டுகளக ஐக்கிய அமெரிக்காவே பேரளவு பருத்தியைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நாடாக உள்ளது. [2]ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி சிப்பங்களில் அளக்கப்படுகிறது. ஒரு சிப்பம் 0.48 பருமீ பருமனும் 226.8 கிகி எடையும் கொண்டதாகும்.[3]

வகைகள்

தொகு

பண்டைய காலத்தில்லேயே வீட்டினமாக்கப்பட்ட பருத்தி இனங்களில் பின்வரும் நான்கு வகைகள் அமைகின்றன:

  • கோசிப்பியம் கிர்சுட்டம் (Gossypium hirsutum) – மேட்டுநிலப் பருத்தி, நடுவண் அமெரிக்காவைச் சார்ந்த மெக்சிகோ, கரீபிய, தென் புளோரிடா பகுதியைத் தாயகமாகக் கொண்டது (90% உலக விளைச்சல்)
  • கோசிப்பியம் பார்படென்சு (Gossypium barbadense) – நீளமிகு நூலிழைப் பருத்தி, வெப்ப மண்டலத் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது (8% உலக விளைச்சல்)
  • கோசிப்பியம் ஆர்போரியம் (Gossypium arboretum) – மரப் பருத்தி, இந்தியா, பாக்கித்தானைத் தாயகமாகக் கொண்டது ( 2% அளவுக்கும் குறைவான உலக விளைச்சல்)
  • கோசிப்பியம் எர்பேரியம் (Gossypium herbaceum) – இலெவாந்து பருத்தி, தென் ஆப்பிரிக்காவையும் அராபியத் தீவகத்தையும் தாயகமாகக் கொண்டது ( 2% அளவுக்கும் குறைவான உலக விளைச்சல் )

தற்கால உலகப் பருத்தி விளைச்சலில் பெரும்பகுதியை இரண்டு புத்துலகப் பருத்தி இனங்களே நிறைவு செய்கின்றன. ஆனால், பழைய உலகத்தின் இரண்டு பருத்தி இனங்களே 1900 கள் வரயுலகின் தேவை முழுவதையும் ஈடு செது வந்தன. ப்ருத்தி இயற்கையாக வெண்மை, பழுப்பு, வெளிர்சிவப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் விளைந்தாலும், வெண்பருத்தியின் மரபியலுடன் பிற வண்ணப் பருந்தி இனங்கள் கலந்து மாசுபடுத்தாமை இருக்க, வண்னப் பருத்தி இனங்களின் பயிரீடு நிறுத்தப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

மிக முந்திய வரலாறு

தொகு

தெற்காசியா

தொகு
 
சுற்றியுள்ள வட்டாரத்தில் மெக்ரகார் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது.

மிக முந்திய பழைய உலகப் பருத்தியின் பயன்பாடு கிமு 5500 ஆண்டளவுக்கும் முந்தையதாகும். இது புதிய கற்காலக் களமான மெக்ரகாரில் செம்பு மணிகளில் இன்றைய பக்கித்தான், பலூச்சித்தானில் போலன் கணவாயின் மலைச் சாரலில் கிடைத்தது.[4][5][6]

கி.மு 1500 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்தியப் பருத்தி பற்றிப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் நெய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).

அமெரிக்கா

தொகு

மெக்சிகோவில் பியூபுளாவின் தெகுக்கானில் உள்ள பழைய குகையருகில் பருத்திப் பந்துகள் கிமு 5500 ஆண்டுக்கு முன்பானவை கிடைத்துள்ளன. எனினும் இந்தக் காலக்கணிப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.[7] மெக்சிகோவில் கிடைத்த கோசிப்பியம் கிர்சுட்டம் பருத்தியின் காலம் கிமு3400 இல் இருந்து கிமு2300 வரையிலான கால இடைவெளியினது எனக் கணிக்கப்பட்டுள்ளது.[8]

பெரு நாட்டில், கோசிப்பியம் பார்படென்சு எனும் தாயகப் பருத்திப் பயிர்விளைச்சல் அன்கானில் கண்டுபிடித்த சான்றுவழி கிமு 4200 எனக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது,[9]இது கடற்கரைப் பண்பாடுகளான நார்தே சிக்கு, மோச்சே, நாசுக்காஆகிய பண்பாடுகளின் முதுகெலும்பாக விளங்கியுள்ளது.. பருத்தி ஆற்றின் கரைகளில் பயிரிட்டு வலைகள் செய்து, கடற்கரையோர மீன்பிடிக்கும் ஊர்களில் விற்ரு ஏராளமான மீன்கள் பிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சொகோவுக்கும் பெரு நாட்டுக்கும் வந்த எசுப்பானியர்கள் அங்கு மக்கள் பருத்தி விளவிப்பதையும் அவர்கள் பருத்தியடைகள் அணிவதையும் கண்டனர்.

தாயக அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக் காலத்துக்கு முந்தியவை.

அரேபியா

தொகு

பெருமன்னர் அலெக்சாந்தரின் போர்கள் நிகழும் வரை கிரேக்கரும் அராபியரும் பருத்தியை பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த மெகசுத்தனீசு முதலாம் செலியூக்க்கசு நிக்தேத்தரிடம், " இந்தியாவில் மரங்களில் கம்பளி காய்த்தது" என தனது இந்திகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்".[சான்று தேவை] இது இந்தியத்துனைக்கண்டத்தில் வளர்ந்த தாயகப் பருத்தியினமாகிய "மரப்பருத்தியை", அதாவது கோசிப்பியம் ஆர்போரியத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.

கொலம்பியக் கலைக்களஞ்சியப்படி,:[10]

பருத்தி வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்தே பருத்தி நூற்று, பின்னியும், நெய்தும் சாயமிடப்பட்டு வந்துள்ளன. பண்டைய இந்திய, எகுபதிய, சீன மக்கள் இணையற்ற கைத்திறனுடன் நெய்த பருத்தியாடை அணிந்தனர். பின்னர், பருத்தியாடைகள் நடுத்தரைக் கடல் நாடுகளுக்குப் பரவியுள்ளன.

ஈரான்

தொகு

ஈரானில் (பாரசீகத்தில்), பருத்தி வரலாறு கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஆக்கியெமெனிடு ஊழியில் இருந்து தொடங்குகிறது. என்றாலும் இசுலாமுக்கி முந்திய இரானில் பருத்தி வளர்ப்புக்கான சில தகவல்கள் உள்ளன. ஈரானின் மெர்வு, இரே, பார்சு மாகாணங்களில் பருத்தி வளர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிதைகள், குறிப்பாக பெர்தோவின் சானாம் கவிதைகளில் பருத்தி (பாரசீக மொழியில் பான்பே) பற்றிய மேற்கோள்கள் உள்ளன. மார்க்கோ போலோ (13 ஆம் நூற்றாண்டு) பருத்தி உட்பட்ட பாரிய விளைபொருள்களைக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுப் பயணரான ஜான் சார்டின், சாபவிடு பேரரசுகாலத்தில் பாரசீகத்தில்லகல்விரிவான பருத்திப் பண்ணைகள் நிலவியதாகக்றார். [11]

சீனா

தொகு

சீனாவில் ஏன் பேரரசு காலத்தில் (கிமு 207 - கிபி 220), பருத்தி யுன்னான் எனும் தென்சீன மாகாணத்தில் பயிரிடப்பட்டுள்ளது.[12]

இடைக்காலம்

தொகு

கீழை உலகம்

தொகு

எகுபதியில் கிபி முதல் ஏழு நூற்றாண்டுகளில் பருத்திச் செடி வளர்க்கப்பட்டு நூற்கப்பட்டுள்ளது.[13]

ஐரோப்பா

தொகு
 
ஜான் மாண்டவில் 14 ஆம் நூற்றாண்டில் கற்பனைய்ல் வரைந்த பருத்திச் செடிகள்

இடைக்கால அறுதியில் வட ஐரோப்பாவில் பருத்தி இழைகள் இறக்குமதி செய்த பொருளாக அறியப்பட்டிருந்தது. அப்போது பருத்தி ஒரு தாவரம் என்பதைத் தவிர, அது எப்படி பெறப்பட்டது என்பது பற்றி அறிதிருக்கவில்லை. எரோடோட்டசு வரலாறுகள் எனும் தனது நூல் III, 106 இல் இந்தியக் காடுகளில் கம்பளிதரும் மரங்கள் வளர்ந்ததாகக் கூறுவதால் பருத்த்த் தாவரம் செடியல்ல மரம் என அறியப்பட்டிருந்தது. செருமன் உட்பட்ட பல செருமானிய மொழிகளின் பருத்திக்கான சொற்களின் பொருண்மையில் இந்தக் கூறுபாடு அமைகிறது. செருமானிய மொழியில் பருத்தி பவும்வோல் என அமைகிறது இச்சொல்லின் பொருள் மரப்பருத்தி என்பதாகும். பவும் என்றால் மரம்; வோல் என்றால் கம்பளி ஆகும்.

முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின், காலிக்கோ வகைத் துணிகளை இத்தாலி, எசுபானியம் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எசுபானியத்தில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். ஃபுஸ்தியன் (Fustian), டிமிட்டி (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிசு, மிலான் ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்தில் இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் குழுமம் அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.

1500 களின் தொடக்கத்தில் அங்கு சென்ற எசுபானியர்கள் அப்பகுதி மக்கள் பருத்தி பயிரிடுவதையும், அதிலிருந்து ஆடைகள் செய்து அணிவதையும் கண்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்கா, ஐரோப்பாசியா, அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கத்தையும், குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதையும் தொடர்ந்து இந்தியாவின் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் குழுமத்தினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப் பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டுவந்து இந்தியாவில் விற்றுப் பொருளீட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்தியப் பருத்தி தொழில் நசிவடைந்ததற்கான காரணமாகும்.

தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் (Lewis Paul), ஜான் வியாட் (John Wyatt) ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு எந்திரம் (spinning jenny), 1769ல் ரிச்சார்ட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டகம் (spinning frame) என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செசுட்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு காட்டனோபோலிஸ் (cottonopolis) என்னும் பட்டப்பெயர் வழங்கியது. அத்துடன் மான்செசுட்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கும் பருத்தி பிரிப்பி (cotton gin) என்னும் எந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டுவந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்கப் பிரித்தானியருக்கு உதவியது. குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று இலங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய், ஆங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

1840களில், எந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் வழி இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம், கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் பயிரிடுகை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் விளைவிக்கப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ,புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன. பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இசுமாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகையைக் கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வீழ்ச்சிநிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது.

இக்காலத்தில் பிரித்தானியப் பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக இந்தியாவில் பருத்தி விளைச்சல் அதிகரித்தது. இது அமெரிக்காவின் தென்பகுதிகளில் ஏற்பட்ட பருத்தி விளைச்சல் இழப்பை ஈடு செய்தது. வரிகளை விதிப்பதன் மூலமும் பிற கட்டுப்பாடுகளாலும் இந்தியாவில் துணி உற்பத்தி செய்வதைக் குடியேற்றவாத அரசு தடுத்துவந்ததுடன், பருத்தியை மூலப் பொருளாகவே இங்கிலாந்துக்கு அனுப்பியது. இது குறித்து மகாத்மா காந்தி பின்வருமாறு விவரித்தார்:

பிரித்தானியர், இந்தியக் கூலிகளால் நாளொன்றுக்கு 7 சதம் பெற்றுக்கொண்டு அறுவடை செய்யும் பருத்தியை வாங்குகிறார்கள். அவர்கள் அதனை மூன்று வாரக் கடற்பயணத்தின் மூலம் இலண்டனுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதற்காக நூறுவீத இலாபத்தைப் பெறும் அவர்கள் அதனைக் குறைவு என்கின்றனர். இப் பருத்தி லங்காஷயரில் துணியாக நெய்யப்படுகிறது. இந்தியர் பென்னிகளைப் பெற்றுக்கொண்டு செய்யும் இவ் வேலைக்குப் பிரித்தானியருக்கு ஷில்லிங்குகள் கூலியாகக் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் பிரித்தானிய உருக்காலைகள் தொழிற்சாலைகளைக் கட்டுவதன் மூலமும், இயந்திரங்களை உற்பத்தி செய்வதன் மூலமும் இலாபம் பெறுகின்றன. இவையனைத்தும் இங்கிலாந்திலேயே செலவு செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஐரோப்பியக் கப்பல்களுக்குக் கட்டணம் கொடுத்து இந்தியாவுக்கு எடுத்து வருகிறார்கள். இதிலும், ஐரோப்பியர்களான கப்பல் தலைவர்களும், அலுவலர்களும், மாலுமிகளுமே பயன்பெறுகிறார்கள். கொண்டுவரப்பட்ட துணிகள் இந்தியாவில் அரசர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் விற்கப்படுகிறது. இவர்கள் 7 சதம் கூலிபெற்று வேலை செய்யும் ஏழைக் குடியானவர்களிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு இத்தகைய விலையுயர்ந்த துணிகளை வாங்குகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால் தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நிலாவில் பருத்தி

தொகு

சீனாவின் சாங்கே-4 பருத்தி விதைகளை நிலாவின் கட்புலனாகாத பகுதிக்குக் கொணர்ந்தது. சீனா 2019 ஜனவரி 15 ஆம் நாள் பருத்தி விதை நிலாவில் முளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வரலாற்றில், உண்மையிலேயே இதுவே முதல் புறவுலகப் பயிராகும். செவ்வாய் வான் கார்மன் குழிப்பள்ளத்தில், பெட்டகமும் பருத்தி விதைகளும் சாங்கே-4 தரையிறங்கு கலத்தில் அமர்ந்துள்ளன.[14]

பயிர்விளைச்சல்

தொகு

தற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் 2015 ஆண்டின் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி விளைச்சலில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. [15] பிடிக்க வாய்ப்புள்ளதால் பேரளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு விளைச்சல் செய்யப்பட்டது.

பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முதன்மை அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா (Spodoptera exigua) புழுக்கள் அதிக அளவில் விளைச்சலுக்கு ஊறு விளைவிக்கின்றன.

மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் எந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல ஈடுகள் தொடர்ந்து வளரக்கூடியது.

பயன்கள்

தொகு

பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது.

பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணெய் ஆட்டப்படுகிறது. தூய்ம செய்யப்பட்ட பின், இது மனிதர்களால் மற்ற எண்ணெய்கள் போலவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது.

பன்னாட்டு வணிகம்

தொகு

முன்னணி பருத்தி விளைச்சல் நாடுகள்

தொகு
முதல் பத்து பருத்தி விளைச்சல் நாடுகள் ( 1000 மெட்ரிக் டன்களில்)
தரம் நாடு 2019
1   இந்தியா 5,770
2   ஐக்கிய அமெரிக்கா 3,999
3   சீனா 3,500
4   பிரேசில் 2,787
5   பாக்கித்தான் 1,655
6   துருக்கி 806
7   உஸ்பெகிஸ்தான் 713
8   ஆத்திரேலியா 479
9   துருக்மெனிஸ்தான் 198
10   புர்க்கினா பாசோ 185
Source: UN Food & Agriculture Organization[16]


வணிக நீதி இயக்கம்

தொகு

பருத்தி உலகெங்கிலும் ஒரு முதன்மையான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி வேளாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியமும் இலாபமும் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் வேளாளர்களுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது.

பிரித்தானியச் செந்தர நூல் அளவுகள்

தொகு
  • 1 புரி = 55 அங் or 140 cm
  • 1 குஞ்சம் = 80 புரிகள் (120 yd or 110 மீ)
  • 1 சிலுப்பை = 7 குஞ்சங்கள் (840 yd or 770 மீ)
  • 1 பொந்து = 18 சிலுப்பைகள் (15,120 yd or 13,830 மீ)

இழை இயல்புகள்

தொகு
இயல்பு மதிப்பீடு
உருவடிவம் அகலம் ஓரளவு சீரானது, 12–20 நுண்மீ;
நீளம் 1 cm முதல் 6 cm வரை மாறுகிறது (½ to 2½ளாங்குலங்கள்);
வகைமை நீளம்s 2.2 cm முதல் 3.3 cm வரை (⅞ to 1¼அங்குலங்கள்).
மிளிர்வு உயர்வானது
இழுவலிமை (வலிமை)
உலர்நிலை
ஈரநில்லை

3.0–5.0 g/d
3.3–6.0 g/d
மீள்திறம் தாழ்வானது
அடர்த்தி 1.54–1.56 g/cm³
ஈரம் உறிஞ்சல்
கச்சாநிலை: பதனிட்டது
நிறைவுறல் நிலை
கலப்புநிலை: பதனிட்டது
நிறைவுறல் நிலை

8.5%
15–25%
8.5–10.3%
15–27%+
அளவு நிலைதிறம் நல்லது
எதிர்ப்புத் திறன்
அமிலத்துக்கு
காரத்துக்கு
கரிமக் கரைப்பானுக்கு
சூரிய ஒளிக்கு
நுண்ணுயிரிக்கு
பூச்சிகளுக்கு

சிதைவு, நலிந்த நாரிழைகள்
எதிர்ப்பது; தீங்கான விளைவேதும் இல்லை
பெரும்பாலானவற்றுக்கு உயர் எதிர்ப்பு
நெடுநேர வெளிப்பாடு இழைகளை நலிய செய்கிறது.
மெல்லீரமும் அழுகலும் குச்சுயிரிகளை உண்டாக்கி இழைகளைச் சிதைக்கும்.
அந்துப் பூச்சி இழைகளைச் சிதைக்கும்.
வெப்ப எதிர்வினைகள்
வெப்பத்துக்கு
தணலுக்கு

150 °C அல்லது அதற்கும் கூடுதலான வெப்பநிலைகளுக்கு ஆட்பட்ட பிறகு சிதைவுறல்.
உடனே எரிகிறது.

வேதி உட்கூறுகள்

தொகு
  • நாரிழையம் (cellulose) 91.00%
  • நீர் 7.85%
  • முற்கணிகம், பெக்டின்கள் 0.55%
  • மெழுகு, கொழுப்புப் பொருள்0.40%
  • கனிம உப்புகள் 0.20%

பருத்தி மரபன்தொகை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Biology of Gossypium hirsutum L. and Gossypium barbadense L. (cotton). ogtr.gov.au
  2. "Natural fibres: Cotton" பரணிடப்பட்டது 3 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம், International Year of Natural Fibres
  3. National Cotton Council of America, "U.S. Cotton Bale Dimensions பரணிடப்பட்டது 6 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்" (accessed 5 October 2013).
  4. Mithen, Steven (2006), After the Ice: A Global Human History, 20,000-5000 BC, Harvard University Press, pp. 411–412, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01999-7 Quote: "One of the funerary chambers, dating to around 5500 BC, had contained an adult male lying on his side with legs flexed backward and a young child, approximately one or two years old, at his feet. Next to the adult's left wrist were eight copper beads which had once formed a bracelet. As such metal beads were only found in one other Neolithic burial at Mehrgarh, he must have been an extraordinarily wealthy and important person. Microscopic analysis showed that each bead had been made by beating and heating copper ore into a thin sheet which had then been rolled around a narrow rod. Substantial corrosion prevented a detailed technological study of the beads; yet this turned out to be a blessing as the corrosion had led to the preservation of something quite remarkable inside one of the beads — a piece of cotton. ... After further microscopic study, the fibres were unquestionably identified as cotton; it was, in fact, a bundle of both unripe and ripe fibres that had been wound together to make a thread, these being differentiated by the thickness of their cell walls. As such, this copper bead contained the earliest known use of cotton in the world by at least a thousand years. The next earliest was also found at Mehrgarh: a collection of cotton seeds discovered amidst charred wheat and barley grains outside one of its mud-brick rooms."
  5. Moulherat, C.; Tengberg, M.; Haquet, J. R. M. F.; Mille, B. ̂T. (2002). "First Evidence of Cotton at Neolithic Mehrgarh, Pakistan: Analysis of Mineralized Fibres from a Copper Bead". Journal of Archaeological Science 29 (12): 1393–1401. doi:10.1006/jasc.2001.0779.  Quote: "The metallurgical analysis of a copper bead from a Neolithic burial (6th millennium bc ) at Mehrgarh, Pakistan, allowed the recovery of several threads, preserved by mineralization. They were characterized according to new procedure, combining the use of a reflected-light microscope and a scanning electron microscope, and identified as cotton (Gossypium sp.). The Mehrgarh fibres constitute the earliest known example of cotton in the Old World and put the date of the first use of this textile plant back by more than a millennium. Even though it is not possible to ascertain that the fibres came from an already domesticated species, the evidence suggests an early origin, possibly in the Kachi Plain, of one of the Old World cottons.
  6. JIA, Yinhua; PAN, Zhaoe; HE, Shoupu; GONG, Wenfang; GENG, Xiaoli; PANG, Baoyin; WANG, Liru; DU, Xiongming (2018). "Genetic diversity and population structure of Gossypium arboreum L. collected in China". Journal of Cotton Research 1 (1). doi:10.1186/s42397-018-0011-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2523-3254.  Quote: "Gossypium arboreum is a diploid species cultivated in the Old World. It was first domesticated near the Indus Valley before 6000 BC (Moulherat et al. 2002)."
  7. Jonathan D. Sauer, Historical Geography of Crop Plants: A Select Roster, Routledge (2017), p. 115
  8. Huckell, Lisa W. (1993). "Plant Remains from the Pinaleño Cotton Cache, Arizona". Kiva, the Journal of Southwest Anthropology and History 59 (2): 147–203. 
  9. Rajpal, Vijay Rani (2016). Gene Pool Diversity and Crop Improvement, Volume 1. Springer. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-27096-8. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2016.
  10. "cotton" in The Columbia Encyclopedia, Sixth Edition. 2001–07.
  11. Encyclopaedia Islamica Foundation. بنیاد دائره المعارف اسلامی பரணிடப்பட்டது 30 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 28 February 2009.
  12. Maxwell, Robyn J. (2003). Textiles of Southeast Asia: tradition, trade and transformation (revised ed.). Tuttle Publishing. p. 410. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7946-0104-1.
  13. Roche, Julian (1994). The International Cotton Trade. Cambridge, England: Woodhead Publishing Ltd. p. 5.
  14. Bartels, Meghan; January 15, Space com Senior Writer |; ET, 2019 11:47am. "Cotton Seed Sprouts on the Moon's Far Side in Historic First by China's Chang'e 4". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  15. விளைச்சலில் இந்தியா முதலிடம்தி இந்து தமிழ் 02 நவம்பர் 2015
  16. "Statistical data of top cotton producers". Archived from the original on 27 செப்டெம்பர் 2019.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பருத்தி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தி&oldid=3487049" இலிருந்து மீள்விக்கப்பட்டது